பொடுகை போக்க வழிகள்

Spread the love

1. 500 மி.லிட்டர் நல்லெண்ணையில் 50 கிராம் வேப்பம்பூ, 25 கிராம் வெல்லத்தை சேர்த்து முறியும் வரை காய்ச்சவும். வடிகட்டித் தலையில் தேய்த்து முழுகவும். பொடுகு போகும்.

2. வேப்பம்பட்டை கொஞ்சம் எடுத்து, இடித்து, நீரில் கலந்து கஷயமாக தயாரித்துக் கொள்ளவும். ஆறியபின் சிலுப்பினால் நுரை வரும். இந்த நுரையை அரிப்புள்ள இடங்களில் தேய்க்கலாம்.

3. ஏலரிசி, குங்கிலியம், மட்டிப்பால், சந்தனம், கிச்சிலிக்கிழங்கு (பூலாங்கிழங்கு), குக்குலு, சாம்பிராணி, இவைகளில் கிடைக்கும் பொருளை எண்ணெயில் காய்ச்சி உபயோகித்தால் பொடுகு நீங்கும்.

4. உடல்காங்கையை குறைத்தால் பொடுகு கட்டுப்படும். இதற்கான வழிமுறைகளை அறிய ஆயுர்வேத டாக்டரை அணுகவும். தலைக்கு குளிக்க, மசாஜ் செய்ய உபயோகிக்கும் எண்ணெயில் கொம்பரக்கு கலந்து காய்ச்சினால், உடற்காங்கை குறையும்.

5. ஒருபாகம் சந்தன எண்ணெயுடன் 3 பாகம் எலுமிச்சைசாறு சேர்த்து நன்றாக கலக்கவும். இதை தடவி சிறிது நேரம் கழித்து அலசவும். தேங்காய் எண்ணெயையும் சந்தன எண்ணெய்க்கு பதிலாக பயன்படுத்தலாம்.

6. இரவில் இரண்டு மேஜைக்கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அப்படியே கூழாக அரைத்து, தலையில் தடவிக் கொள்ளவும். அரைமணி கழித்து சீயக்காய் தேய்த்து கழுவி விடவும். பொடுகு மட்டுமன்றி வெந்தயம் புழுவெட்டையும் தடுக்கும். பெரிய நெல்லிக்காய், வெந்தயம், கறிவேப்பிலைஇவற்றை காய வைக்கவும். உலர்ந்தபின், பொடித்து ஒரு துணிமூட்டையில் கட்டி, நீங்கள் உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு வைக்கவும். இதே எண்ணெயை தலைக்கு தேய்த்து வந்தால் தலைச்சூடு குறையும்.

எச்சரிக்கை: வெந்தயத்தை கால் மணிக்கு மேல் தலையில் வைக்க வேண்டாம். அதிககுளிர்ச்சி ஏற்பட்டு ஜன்னி வரும்.

7. பொடுதலை (Lippia nodifera) நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதன் இலை, காய் இவற்றிலிருந்து சாறு எடுத்து, அதன் சமஅளவில் நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி, சாறு  வற்றியதும் வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இதை தலைக்கு தடவிவர பொடுகு போகும். இதனாலேயே இதற்கு பொடுதலை என்ற பெயர் வந்தது.

8. ஒரு ஸ்பூன் கற்பூரத்தை 1/2 கப் தேங்காய் எண்ணெய் அல்லது வேப்பம் எண்ணெயுடன் கலந்து வைக்கவும். இந்த எண்ணெயை தலைக்கு தடவி குளிக்கலாம்.

9. தேங்காய் எண்ணெய்,  ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், இவை மூன்றில் ஏதாவது ஒன்றை சூடுபடுத்தி, கூந்தல் வேரில் நன்கு படுமாறு தேய்த்து, சூடான நீரில் நனைத்த டவலை தலையில் கட்டிக்கொண்டு 1 மணி நேரம் ஊறவும். பிறகு ஷாம்பூ போட்டு அலசவும்.

10. செம்பருத்தி பூவை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் பொடுகு நீங்கும்.

11. தயிர், முட்டையின் வெள்ளைக்கரு, எலுமிச்சைசாறு ஆகிய மூன்றையும் தலையில் தேய்த்துக் குளித்தால் பொடுகு போகும். வாரம் இருமுறை, 4 வாரங்கள் இதை செய்ய,  பொடுகிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

12. வெள்ளை மிளகைப் பால் விட்டு அரைத்துத் தலையில் தேய்த்து, அரைமணி நேரம் ஊறிக் குளிக்கவும்.

13. வால்மிளகைப் பால் விட்டு, அரைத்துத் தலையில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவினால் பொடுகு மறையும்.

14. வில்வக்காயைப் பொடியாக்கி, அத்துடன் சமஅளவு சீயக்காய் பொடி கலந்து, தினம் தலையில் தேய்த்துக் குளித்து வரலாம்.

15. நல்லெண்ணெயில் சிறிதளவு வேப்பம்பூவும், துளசியும் சேர்த்துக் காய்ச்சித் தலையில் தடவிக் குளித்து வரலாம்.

16. தேங்காய்ப்பால் அரைகப் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு நான்கு டேபிள் ஸ்பூன் இரண்டையும் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வரலாம்.

17. 250 மி.லி. தேங்காய் எண்ணெயுடன், 50 மி.லி. அருகம்புல் சாறு மற்றும் 50 மி.லி. கரிசலாங்கண்ணிச்சாறு கலந்து காய்ச்ச வேண்டும். அது பாதியாக வற்றியதும், அத்துடன் 250 மி.லி. தேங்காய்ப் பாலைக் கலந்து காய்ச்ச வேண்டும். நீர் வற்றி எண்ணெய் பிரியும் சமயம், 15 கிராம் அதிமதுரத்தைப் பொடி செய்து போட்டு சிவந்ததும் இறக்கி, வடிகட்டி தலையில், தேய்த்து வரலாம். இதே எண்ணெயைத் தலையில் தடவி, ஊறிக் குளிக்கவும் பயன்படுத்தலாம்.

18. தலைக்கு குளிக்கும் போது கடைசியில் எலுமிச்சம் பழசாற்றால் தலையை அலசவும். இதனால் கூந்தலின் அழகுக்கும் பிசுபிசுப்பும் நீங்கி, முடி பளபளக்கும்.

19. பொடுகுக்காக தயாரிக்கப்பட்ட ஷாம்பூக்களை, மருத்துவரின் ஆலோசனையுடன் உபயோகிக்கலாம். பலவகை ஷாம்பூக்கள் – ஃபங்கஸ்ஸை எதிர்க்கும் சாலிசிலிக் அமிலம், செலினியம் ஸல்ப்பைட் ஷாம்பூக்கள் கிடைக்கின்றன.

20. முடிக்கால்களில் அரிப்பு, பொடுகு உள்ளவர்கள், தூர்வாதி தைலம், தினேசவல்யாதி தைலம், சதுக்ஷீரிகேர தைலம் போன்ற தைலங்களில் ஏதாவது ஒன்றை, வைத்தியரின் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்.

21. வேப்பெண்ணெயும், கற்பூரத்தையும் கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்து அலசவும்.

22. இஞ்சி சேர்த்த ஆலிவ் எண்ணெயை தலையில் தடவி, சிறிது நேரம் ஊறவும். பிறகுஅலசவும்.

23. வெள்ளை முள்ளங்கியைத் துருவி சாறெடுத்துத் தலை முழுவதும் தடவி, சிறிது நேரம் ஊறிக் குளித்தாலும் பொடுகு வராது.

24. முட்டையின் வெள்ளைக்கருவுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தலையில் தடவிக் குளித்து வந்தாலும் குணம் தெரியும்.

25. பொடுகை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், தலை முழுவதும் பரவி கூந்தலை நாசப்படுத்துவதோடு, சருமத்தையும் பாதிக்கத் தொடங்கும்.

26. நாட்டு மருந்துக் கடைகளில் கோஷ்டம் என்ற வேர் கிடைக்கும். இதை வாங்கிப் பொடி செய்து வெண்ணெயில் குழைத்துத் தலையில் தடவிக் குளிக்கலாம்.

27. பசலைக் கீரையை அரைத்துத் தலை முழுக்கத் தடவிக் குளிக்கலாம். இதைத்தொடர்ந்து மூன்று நாட்களுக்குச் செய்து வந்தால் பலன் தெரியும்.

28. பொடுகு உள்ளவர்கள் பயன்படுத்திய டவல், சீப்பு, தலையணை, உறை போன்றவைகளை அடுத்தவர்கள் பயன்படுத்தவே கூடாது.

பொடுகை அலட்சியப்படுத்த வேண்டாம். குணப்படுத்த முடியவில்லை என்றால் அது “எக்ஸிமா” அல்லது சோரியாசிஸ் ஆக இருக்கலாம்.

பொடுகுபிரச்சனைக்கு முழுமையான தீர்வு உண்டா?

பொதுவாக அழகு நிலையங்களில் முடி, பொடுகுக்கான சிகிச்சைகள், மசாஜ் போன்றவைகளை மட்டுமே தருவார்கள். ஆனால் ஆயுர்வேதத்தில் பொடுகுக்கான காரணம் ஆராயப்பட்டு, அதற்கான மருந்துகள் தரப்படுகின்றன. தவிர முடிக்கான சிகிச்சைகள் ஆயுர்வேத வைத்தியத்தில் தரப்படும் என்பதால் மீண்டும் தொடராத முழுமையான தீர்வு கிடைக்கும்.

உணவுமுறைகள்

அதிக உப்பு, அதிக சர்க்கரை மற்றும் கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுகிறபோது இப்பிரச்சனை உருவாகிறது. அதிகப்படியான எண்ணெய் பிசுக்கான கூந்தலிலும் பொடுகு வரும். சோரியாஸிஸ் நோயின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம். பொடுகு நீக்குவதாக பரிந்துரைக்கப்படும் ஷாம்பூக்களை தினம் உபயோகிக்காதீர்கள். அவை பொடுகைக் குறைத்தாலும், கூந்தலை பிசுக்காக, பொலிவின்றி வைக்கும். உங்களுக்குத் தேவை கூந்தலின் வேரில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்துவது.

பொடுகுப் பிரச்சனை உள்ளவர்கள் சர்க்கரை மற்றும் மாவுப்பொருட்கள் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

சாப்பாட்டிற்குக் கூடிய வரையில் சுத்தமான, நல்லெண்ணெயை உபயோகிப்பது சிறந்தது.

பச்சை வெங்காயத்தைத் தினமும் சாலட்டாகவோ, தயிரில் ஊற வைத்தோ சாப்பிடலாம். வெங்காயம் கூந்தல் ஆரோக்கியத்திற்குப் பல வழிகளில் உதவும்.

நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முழுத் தானியங்களை அதிகம் சாப்பிட வேண்டும். நெய், எண்ணெய், தேங்காய் கலந்த எள் சட்னி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தலைக்குக் குளிக்கும் போதெல்லாம் கூந்தலை கண்டிஷன் செய்ய வேண்டியது அவசியம். மண்டையோட்டுக்கு ஊட்டம் தரக் கூடியது. அழுத்தமான மசாஜ் மிக முக்கியம். அது எண்ணெய் சுரப்பிகளைத் தூண்டி கூந்தலின் வறட்சியைப் போக்கும். இது எதுவுமே பலன் தராமல், கூடவே உங்களுக்கு அளவுக்கதிக களைப்பு, மலச்சிக்கல், வறண்ட சருமம் போன்றவையும் இருந்தால் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது நல்லது.


Spread the love