வாய்வு தொல்லை அகல விலக வழிகள்

Spread the love

வயிற்றில் உண்டாகும் வாய்வு தொல்லைகள் தருகின்ற, பரவலாக காணப்படுகிற பிரச்சனை. வயிறு உப்புசம், ஏப்பம், அபான வாயு பிரிதல் ஆகியவை இயற்கை செயல்கள் என்றாலும், தீவிரமானால் சிகிச்சை பெறுவது அவசியம்.

வயிறு உப்புசத்தை குறைப்பது எப்படி?

வயிறு உப்புசத்தால் வயிறு பானைபோல் வீங்கியது போன்ற உணர்வு தோன்றும். வயிற்றின் உப்புசத்திற்கு பல காரணங்கள் உண்டு. திரவம், வீக்கம், வீக்கமடைந்த அவயங்கள் (அ) வயிற்றில் கொழுப்பு சேர்வது. ஆனால் மிக முக்கியமான காரணம் வயிற்றில் வாய்வு சேருவது தான். இந்த வாய்வு ஏப்பமாகவோ, வேறு விதமாகவோ உடலிலிருந்து வெளியேறாவிட்டால் வயிறு உப்புசம் ஏற்படும். வயிறு உப்புசத்தால் இலேசான வயிற்று வலி இருக்கும். வாய்வு சேர்ந்துவிட்டால் வலி தீவிரமாகும். அபான வாயு பிரிவதாலும், மல ஜல கழிவதாலும் வாய்வுத் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

வாய்வை, உப்புசத்தை உண்டாக்கும் உணவுகள்

வாய்வுத் தொல்லை வயிறு உப்புசத்தை உண்டாக்கும் காரணம் தவறான உணவு முறைகள் தான். சில உணவுகள் வாய்வை அதிகரிக்கும். அவை வேக வைத்த பீன்ஸ், மொச்சைகொட்டை, ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், சோடா மற்றும் மென்பானங்கள் சுயிங்கம். பழங்களில் ஆப்பிள், லெட்டூஸ் போன்றவை.

வயிற்றில் சர்க்கரை உணவுகளை ஜீரணிக்கும் போது பாக்டீரியா இரைப்பையில் வாய்வை உண்டாக்குகின்றது. சில பாக்டீரியாக்கள் அதிக வாய்வை உண்டாக்கும். தொடர்ந்து இந்த உணவை உட்கொண்டால் பாக்டீரியாவால் உண்டாகும் வாய்வுத் தொல்லை நிரந்தரமாகும். எனவே சர்க்கரைகள், கூட்டு சர்க்கரைகள் சரிவர ஜீரணமாகாவிட்டால் சிறுகுடலில் பாக்டீரியா உற்பத்தி அதிகமாகி கேஸ் தோன்றும். மலச்சிக்கலும் வாய்வுத்தொல்லைக்கு ஒரு காரணம். தேங்கி நிற்கும் மலஜலங்கள் கெட்டுப்போய் வாய்வை உண்டாக்கும்.

வாய்வுத் தொல்லையை உண்டாக்கும் மேலும் சில உணவுகள் – பருப்புகள், பட்டாணி, வெங்காயம், வாழைக்காய், உலர்ந்த திராட்சை, முழுகோதுமை ரொட்டி, சலாடுகள், பாலும் பால்சார்ந்த உணவுகளும் கூட வாய்வை உண்டாக்கலாம். வாய்வை தடுக்க கீழ்க்கண்ட வழிமுறைகளைக் கடைபிடிக்கவும்

கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும் (அ) குறைக்கவும்.

வயிற்றில் வாய்வு சேர்ந்துவிட்டால் தற்காலிகமாக நார்ச்சத்து உணவுகளை உண்பதை நிறுத்தவும். வாய்வுத் தொல்லை நீங்கியவுடன் மறுபடியும் நார்ச்சத்து நிறைந்த உட்கொள்ளலாம்.

இரண்டு (அ) மூன்று பெரிய உணவுகளை உட்கொள்வதற்கு பதில் அவற்றை பிரித்து ஆறு சிறிய உணவுகளாக உட்கொள்ளலாம்.

உணவை நிதானமாக மென்று உண்ணவும்.

புகைப்பது, டீ, காஃபி இவற்றை தவிர்க்கவும். அதே போல் பாட்டில் பானங்களை தவிர்க்கவும்.

உணவு உண்டபின் படுப்பதோ, உட்காருவதோ வேண்டாம். மெதுவாக நடை பயிலவும்.

வீட்டு வைத்தியம் / ஆயுர்வேத சிகிச்சை

ஏலக்காய் நல்ல வீட்டு மருந்து. தண்ணீருடன் 5 கிராம் ஏலக்காய் பொடியை எடுத்துக் கொள்ளலாம். நெய்யில் வறுத்த பெருங்காயம், கருஉப்பு, சுக்கு, ஏலக்காய் இவைகளெல்லாம் ஒவ்வொன்றும் 5 கிராம் எடுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது இந்த கலவையில் 1/2 ஸ்பூன் தண்ணீருடன் 2, 3 தடவை எடுத்துக் கொள்ளவும். வாயு அகலும்.

புதினா, இலவங்கம், இஞ்சி இவற்றின் சாரத்தை இரண்டு துளிகள், ஒரு கப் சுடுநீரில் சேர்த்து குடிக்கவும்.

பெருஞ்சீரகம், ஒரு பாகம், செலரி விதைகள் இரண்டு பாகம், சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு பெருங்காயம் கரைத்த வெந்நீரில் துணியை நனைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.

ஒரு தேக்கரண்டி துளசி சாற்றுடன் 1/2 தேக்கரண்டி நெய் கலந்து குடிக்கலாம்.

ஏப்பத்தை தடுப்பது எப்படி?

வயிற்றிலுள்ள காற்றை வாய்வு மூலம் வெளியிடுவது தான் ஏப்பம். உட்கொண்ட காற்றினால் வயிறு வீங்கி விடும். அதை தடுப்பதற்காகத்தான் காற்று மறுபடியும் ஏப்பமாக வெளியேறுகிறது. நாம் உணவை உண்ணும் போது உணவோடு காற்றை சேர்த்து விழுங்கி விடுகிறோம். சில சமயம் மன படபடப்பாலும் (அ) கார்பன் கலந்த சோடா போன்ற பானங்கள் உட்கொள்ளும் போதும் காற்றை விழுங்கி விடுகிறோம். அதிக அமில சுரப்பினாலும் தொண்டையில் அமிலம் ஏறிவிடும். இதை நீக்க அதிக காற்றை விழுங்கும் படி நேரிடும். இதனாலும் ஏப்பம் உண்டாகும்.

ஏப்பத்தை தவிர்க்க வழிகள்

உணவை உண்ணும் போது பானங்களை குடிக்கும் போது மெதுவாக, நிதானமாக செயல்படவும். இதனால் காற்றை உட்கொள்வது தவிர்க்கப்படும்.

கார்பன் கலந்த சோடா, பானங்கள், பியர் முதலியவற்றை குடிப்பது தவிர்க்கவும். இவை கார்பன் – டை – ஆக்சைடை உண்டாக்கும். அப்படி குடிக்க நேர்ந்தால் உறிஞ்சி குழாய்யை (Straw) உபயோகிப்பதை தவிர்க்கவும்.

சுயிங்கம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

புகைப்பிடிப்பதை நிறுத்தவும்.


Spread the love