விடுதலை

Spread the love

மனிதனை மகிழ்ச்சியாக வாழ விடாமல் தடுப்பவை வியாதிகள். இவ்வியாதிகள் உடலையும், மனதையும் பாதிக்கின்றன. கடவுள் மனிதனை உண்டாக்கி அதற்கு உயிரையும், வடிவத்தையும் கொடுத்தார். ஆனால் உடலையும், உள்ளத்தையும் பராமரிக்கும் வேலையை மனிதனிடமே விட்டுவிட்டார். இறைவன் ஒரே நாளில் உலகத்தை உண்டாக்கவில்லை. அது தானாக உருவாகும் வகையில் சில சூத்திரங்கள், விதிகள், கட்டுப்பாடுகள் இவற்றை நியமித்தார். உதாரணமாக மனிதன் தண்ணீரின் மேல் நடக்க முடியாது. பறவை போல் ஆகாயத்தில் பறக்க முடியாது. இந்த விதிகள் சமுதாய கட்டுப்பாடுகளாக சமூகம் முறையாக, நெறியாக வளர உதவியன.

வியாதி, வெக்கையால் வாடும் மனிதனின் துணை தெய்வம் தான். என்ன தான் வைத்தியம் செய்தாலும், நாம் பிறக்கும், இறக்கும் தேதியை நிர்ணயிப்பவன் ஆண்டவன். அவன் வரையறுத்த சூத்திரங்களின் படி தான் நமது உடல் நலம் இருக்கும். கொழுப்பை அதிகம் உண்டால் கோளாறுகள் உண்டாகும், உடல் உப்பும்என்பது இறைவன் விதித்த விதி. இதை நாம் மீறினால் உடல் நலம் கெட்டு விடும். ஆரோக்கியத்தை பேணுவதும் இறைவன் தந்த இந்த உடலை பராமரிப்பதும், கடவுளுக்கு நாம் நன்றி சொல்லும் வழிபாடு.

உடலை பேணி பாதுகாத்துக் கொள்வது மிக மிக அவசியம். என்னதான் வியாதி வந்தாலும் நாம் அதனை அறிவு பூர்வமாக எதிர் கொண்டு நல்ல பழக்க வழக்கங்களின், உணவு முறைகள் போன்றவற்றை கடைப்பிடிப்பதால் நாம் எளிதாக நலமடைய முடியும்.

கடவுளை நம்பினோர் கைவிடப்படார். உங்களால் தண்ணீரில் மேல் நடக்க முடியாது. ஆனால் படகு மூலம் கடலையே கடக்கலாம். பறவை போல பறக்க முடியாது. ஆனால் விமானத்தின் மூலம் பறவையை விட நன்றாக பறக்கலாம். இவற்றை உருவாக்கி, இயற்கையை வென்றிட, இறைவன் மனிதனுக்கு ஆற்றல் படைத்த மூளையை கொடுத்துள்ளார். துக்க சமுத்திரத்தை கடக்கவும், மலை போன்ற சம்சார சுமையை தூக்கவும், இறைவனின் உதவியை நாடுங்கள். உங்கள் முயற்சிகளை கைவிடாதீர்கள். அவை வெற்றி பெற, கடவுளை வேண்டுங்கள். திறமையுடன் இறை நெறியும் சேர்ந்தால் வெற்றி நிச்சயம். வியாதியிலிருந்து விடுபடலாம்.

உங்கள் நலன் கருதி

ஆயுர்வேதம் Dr. S. செந்தில் குமார்

உணவு நலம் அக்டோபர் 2011


Spread the love