காது பராமரிப்பு அவசியம்

Spread the love

சப்தத்தை உணரும் உறுப்பு காது ஆகும். கேட்கும் திறனுக்கும் பேச்சுத் திறனுக்கும் குழந்தை பிறந்தது தொடங்கி நெருங்கிய தொடர்பு உண்டு. குழந்தைக்கு காது கேட்கத் துவங்கினால் தான் அது அக்கம்பக்கம் பார்வையைச் செலுத்தும். பேச முயற்சிக்கும். கேட்காத குழந்தை பேசாது. அதனால்தான் செவிட்டு ஊமை என்கிறார்கள். காது கேட்கும் திறன் குறைவதுடன் காதில் சீழ் வடிதல் போன்ற காது கோளாறுகள் ஏற்படுவதற்கு மாசடைந்த சுற்றுப்புறச் சூழல், ஒலி மாசு, வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாறுதல்கள், காது நரம்பு வலுவின்மை போன்ற பல காரணங்கள் உள்ளன.

காது வலிக்கு என்ன காரணங்கள்?

காதில் கொப்புளம், புண்கள் தோன்றுவது, காதில் சீழ்வடிதல், காதில் அழுக்கு சேர்தல் அல்லது அன்னியப் பொருட்கள் அடைத்துக் கொள்வது, எறும்பு போன்ற பூச்சிகள் புகுவது மற்றும் காதில் அடிபடுதலால் காது வலி ஏற்படலாம். மூக்கிலிருந்து நீர் ஒழுகுதல், மூக்கில் சளி பிடிப்பதும் காது வலி ஏற்படக் காரணமாகிறது. தொண்டையில் புண் ஏற்படுவது, டான்சில் ஏற்படுவதும் காதுவலிக்கு காரணமாகிறது.

காதில் சீழ்வடியக் கூடாது

காது சீழ்வடிதலை அலட்சியப்படுத்தாமல் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. தவறினால் வேறு சிகிச்சை செய்ய நேரிடலாம். காதில் சீழ் வடிய முக்கியக் காரணமே ஜல தோஷம் தான். ஆரம்பத்தில் மூக்கில் தண்ணீர் மாதிரி சளி கொட்டும். தும்மல் ஏற்படும். கவனிக்காமல் போனால் மூக்கிலிருந்து சளி கெட்டியாக வரும். இதற்கும் சிகிச்சை எடுக்காமல் விட்டால் சளியில் உள்ள கிருமிகள், தொண்டையையும், நடுக்காதையும் இணைக்கிற ஈஸ்டாக்கியன் குழாய் வழியாக நடுக்காதுக்குச் சென்று சீழ் உருவாகும். பிறகு காதிலுள்ள செவிப்பறையைத் துளைத்துக் கொண்டு, வெளிக்காது வழியாக சீழ் வெளியேறுகிறது. காதுகள் சரியாகக் கேட்க வேண்டுமென்றால் செவிப்பறைப் பகுதி சீராகவும் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்புடன் இருத்தல் அவசியம்.

காதுக்குள் தப்பித்தவறி நுழையும் பூச்சிகள், அழுக்குகள், அன்னியப் பொருட்கள் போன்றவை செவிப்பறையைப் பாதித்து விடாதபடி காதுக் குரும்பி பாதுகாக்கிறது. காதுக்குள் உள்ள செருமோனியஸ் என்னும் சுரப்பிகள், காதுக்குள் ஒரு வித திரவத்தைச் சுரந்து குழம்பியாக மாறி செவிப்பறையை பாதுகாக்கின்றது. இக்குரும்பியை காதைக் குடைகிறேன் பேர்வழி என்று ஊக்கு, ஹேர்பின், பேனா, பென்சில், பலப்பம், தீக்குச்சி, சாவி என்று கையில் எது கிடைக்கிறதோ அதை வைத்து காதுக்குள் நுழைத்துக் குடைந்து கொண்டிருப்பார்கள். இது தவறான பழக்கமாகும். இப்பழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்தால் செவிப்பறை பழுதடைந்து காது கேட்காத சூழல் ஏற்படும்.

‘பட்ஸ்’ கூடாது

குரும்பியை அகற்றுவதற்கு மூன்று வழிகள் உள்ளன. கண்ணுக்குத் தெரியும்படி உருண்டையாக திரண்டு காணப்படும் குரும்பியை ஊக்குக் கொண்டு அகற்றி விடலாம். காதின் உட்புறமாக ஒட்டிக் கொண்டிருக்கும் குரும்பியை காது சொட்டு மருந்து அல்லது தேங்காய் எண்ணெய் சில சொட்டுகள் சில நாட்களுக்கு இட்டுவர குரும்பி அதில் ஊறி தானாகவே வெளியே வந்து விடும். மூன்றாவதாக ஒரு முறை மருத்துவர் மட்டுமே செய்யக் கூடியது. நாள்பட்ட குரும்பியை சிரிஞ்சு மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து மருத்துவரால் அகற்ற இயலுகிறது. எக்காரணம் கொண்டும் பட்ஸ் வைத்து குரும்பியை அகற்ற முயற்சிக்கும் போது குரும்பியானது இன்னும் கொஞ்சம் உள்ளே போய்விடுமே தவிர வெளியே வராது. மேலும் இது செவிப்பறையைத் தாக்கி புண்ணாக்கி விடும்.

காதுக்குள் எறும்பு, பூச்சிகள் போய்விட்டால் என்ன செய்வது?

காதில் எறும்பு போன்ற பூச்சிகள் புகுந்து விட்டால் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சில சொட்டுகள் விட்டால் பூச்சி அதில் இறந்து விடும். பிறகு சில சொட்டுகள் தண்ணீர் விட்டு தண்ணீர் விட்டு தலையை சாய்த்து விட பூச்சி வெளியில் வந்து விடும். காய்ச்சிய எண்ணெயைக் காதுக்குள் ஊற்றக் கூடாது. காய்ச்சிய எண்ணெய் காதைப் பாதிக்கும். மேலும், சிக்கலாக இருக்கும் பட்சத்தில் மருத்துவரை நாடுவது நல்லது.

காதுக்கு சொட்டு மருந்து எப்போது அவசியம்?

ஒரு சிலர் தனக்கு காதுவலி, காது அடைப்பு, காது எரிச்சல் என்று ஏதோ ஒரு காதுப் பிரச்சனைக்காக மருத்துவர் ஆலோசனையின்றி சொட்டு மருந்து பயன்படுத்தக் கூடாது. எப்போதும் உலர்ந்த நிலையில் இருக்க வேண்டிய உறுப்பு காது தான். அதில் தேவையின்றி எண்ணெய், சொட்டு மருந்து என்று எதையாவது ஊற்றி ஈரமாக வைத்து இருந்தால் காற்றில் கலந்து வரும் தொற்றுக் கிருமிகள் (பூஞ்சைகள்) மேற்கூறிய ஈரப்பதத்தில் ஒட்டிக் கொள்ளும். இதன் மூலம் அரிப்பை உண்டாக்கி காது அடைத்த உணர்வு தோன்றும். காதில் சீழ்வடிதல், காது வலிப் பிரச்சனைகள் தொடர்ந்து இறுதியில் காது கேட்பது குறையும். எனவே, தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொள்ளுங்கள்.


Spread the love
error: Content is protected !!