புற்று நோய் என்ற வார்த்தையைக் கேட்டாலே மனம் துடிக்கும். காரணம், இன்று மிகவும் அதிகமாக தாக்கும் நோய்களில் ஒன்று புற்று நோய். அதோடு உலகில் 100 க்கும் மேற்பட்ட புற்று நோய்கள் உள்ளன.
புற்று நோய் எவ்வாறு வருகிறது?
இயல்பான சாதரண ஜீன்களில் திடீர்மாற்றம் (Gene Mutation) ஏற்பட்டு அவை மிகவேகமாக பெருக்கமடைந்து ஒரு திசுவிலிருந்து மற்றொரு திசுவிற்கு பரவி கட்டியாக மாறி புற்று நோயாகிறது. சாதரண கட்டிகளும் புற்று நோயாக மாறக் கூடிய அபாயங்கள் உண்டு. சாதரண கட்டிகள் இறந்த செல்களின் குவியல் என சொல்லலாம். அவற்றில் புதிய செல்கள் வளர முடியாமல் அந்த இடத்தில் மாற்றம் ஏற்பட்டு அவை புற்று நோய் செல்களாக மாற்றமடைந்து விடும். ஆகவே சிறு கட்டியிலும் அலட்சியம் கூடாது.
சரி புற்று நோய் ஏற்படக்காரணம் என்ன என்பதைப் பார்க்கலாமா?
பதப்படுத்தப்பட்ட உணவு:
நமது உடல் காய், பழம், அசைவம் என இயற்கையான உணவுகளையே ஜீரணித்து சத்துக்களாக மாற்றும் திறன் பெற்றது. இதில் திடீரென உணவுகளில் நிறம் கூட்ட சேர்க்கும் நிறமிகள், பதப்படுத்தப்பட்ட ரசாயனங்கள் ஆகியவற்றை சேர்ப்பதால், அவைகளை ஜீரணிக்கக்கூடிய அளவிற்கு என்சைம்கள் இல்லாததால் அவை அப்படியே தேங்கிவிடும். அடிக்கடி இத்தகைய உணவுகளை சாப்பிடும்போது ரசாயனக் கலவைகள் செல்களுடன் வினைபுரிந்து புற்று நோயை உண்டாக்கிவிடும். இதனால் கல்லீரல் புற்று நோய், கணையப் புற்று நோய், உணவுக் குழாய் மற்றும் மலக் குடல் புற்று நோய் போன்றவைகள் வரும் / வளரும் வாய்ப்புகள் அதிகம்.
சூடுபடுத்தும் உணவுகள் :
தீய்ந்த கருகிய உணவுகள், திரும்ப திரும்ப சூடு செய்து சாப்பிடும் உணவுகள், பிளாஸ்டிக் பாத்திரங்களில், பிளாஸ்டிக் பைகளில் வைக்கப்படும் சூடான உணவுகள் ஆகியவை நம் உடலிலுள்ள ஜீன்களை பாதித்து செல்களின் சிதைவிற்கு காரணமாகின்றன. இவையும் புற்று நோயை உண்டாக்குபவைகள் தான்.
புகையிலை:
புகை பிடிப்பதால் நுரையீரல்களில் செல் அழிவு அதிமாகிவிடும். அதிலுள்ள கார்பன் மோனாக்ஸைடே காரணம். நீங்கள் உற்று கவனித்தீர்களேயானால் சிலர் வருடக் கணக்கில் புகை பிடிப்பார்கள், ஆனால் அவர்களுக்கு ஏதும் ஆகாது. இன்னும் சிலருக்கு ஒரு வருடத்திலேயே புற்று நோய் தாக்கம் வந்துவிடும். இதற்கு காரணம் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளுறுப்புகள் தனித் தன்மையுடன் இருக்கும். அதன் பொறுத்தே அவர்களுக்கு நோயும் உண்டாகும். எனவே அவருக்கு ஒன்னும் ஆகலை நமக்கும் எதுவும் ஆகாது என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள். அதோடு புகை, பான் ஆகிய பழக்கங்களையும் தவிர்த்திடுங்கள். நுரையீரல் புற்று நோய் வராமல் பாதுகாக்கலாம்.
மதுப்பழக்கம் :
மதுவை தொடர்ந்து குடித்துவந்தால் ஆல்கஹாலின் வீரியம் குடலில் புண்களை ஏற்படுத்தும். நாள்பட்ட புண் புற்று நோயாக உருப்பெறும். இதனால் கல்லீரல் புற்று நோய், மலக் குடல் புற்று நோய், உணவுக் குழாய் புற்று நோய் ஆகியவை உண்டாகும்.
ஃப்ரீ ரேடிகல்ஸ் :
நமது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தின் போது, சிகரெட், சுற்றுப்புற மாசு ஆகியவற்றால் உருவாகும் பெராக்ஸிடேஸ், ரியாக்டிவ் ஆக்சிஜன் போன்ற ஃப்ரீ ரேடிகல்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரு சங்கிலி போல் உருவாகி அருகில் உள்ள செல்களை பாதிக்கும் . இதனால் செல்களில் சிதைவுகள் ஏற்பட்டு பலவிதமான புற்று நோய் வரும் வாய்ப்புகள் அதிகம். இதனை தவிர்க்க விட்டமின் ஈ, ஏ மற்றும் சி நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
சுற்றுப்புற சூழ்நிலை :
தொடர்ந்து எக்ஸ் ரே, புற ஊதாக் கதிர் மற்றும் சக்தி வாய்ந்த கதிர் வீச்சுகளின் தாக்கத்தில் இருந்தால் அவை சருமத்தில் ஊடுருவி ஜீன்களின் மாற்றத்தை உண்டாக்கி, புற்று நோய்களை ஏற்படுத்தும். குறிப்பாக சருமப் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்.
மரபணு :
இது தவிர மரபு ரீதியாகவும் புற்று நோய்கள் வர வாய்ப்புகள் அதிகமுண்டு. ஒருவருக்கு ஜீன்களில் மாற்றம் ஏற்பட்டிருந்தால், அந்த அசாதரண ஜீனின் பண்புகள் அடுத்த சந்ததியினருக்கும் கடத்தப்படுகிறது. இதனால் மரபு ரீதியாகவும் புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கா. ராகவேந்திரன்