மாங்காய் சமையல்

Spread the love

மாம்பழ சீசன் ஆரம்பித்து விட்டது. மற்ற எல்லா காய்கறி, பழங்களை விட, மாங்காய், மாம்பழங்கள் தான் சமையலில் ஊறுகாய்கள், பழரசங்கள் செய்வதில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. மாங்காய் கொண்டு செய்யப்படும் ஆந்திர ஆவக்காய் ஊறுகாய்க்காக உயிரை கூட விடக் கூடிய ஊறுகாய் பிரியர்கள் இருக்கின்றனர். மாங்காய் மாம்பழம் உபயோகித்து செய்யப்படும் சில உணவுகளை பார்ப்போம்.
மாங்காய் தால்
தேவை
மாங்காய்-1 (தோலுரித்து துண்டாக்கியது)
துவரம்பருப்பு-1கப்
மஞ்சள்பொடி-1/2டீஸ்பூன்
மிளகாய்பொடி-1/2டீஸ்பூன்
நல்லெண்ணை-1டே.ஸ்பூன்
கடுகு-1டே.ஸ்பூன்
வெந்தயம்-1/4டீஸ்பூன்
மிளகாய்வற்றல்-2
பச்சைமிளகாய்-2(நீட்டவாக்கில் வெட்டியது)
பூண்டு-2பல்(நசுக்கி)
கறிவேப்பிலை-10-12
உப்பு-தேவைக்கேற்ப
செய்முறை
துவரம் பருப்பை கழுவி, 2 கப் தண்ணீர் சேர்க்கவும். அதில் மாங்காய் துண்டுகள், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து ப்ரெஷர் குக்கரில் 15 நிமிடம் வேக வைக்கவும். பிறகு எடுத்து குளிர வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணையிட்டு காய்ச்சவும். அதில் கடுகு, வெந்தயம், மிளகாய் வற்றல், இவற்றை போட்டு தாளிக்கவும்.
கடுகு வெடிக்கும் போது பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலையை சேர்க்கவும்.
இந்த தாளிதத்துடன் வேக வைத்த பருப்பை போட்டு வைக்கவும்.
மிளகாய் பொடியை போட்டு, குறைந்த தீயிலி 5 நிமிடங்கள் சமைக்கவும்.
சூடான சாதம், நெய்யுடன் பரிமாறவும்.
மாம்பழ அவல்
தேவை
ரசம்நிறைந்த மாம்பழம்-4
அவல்-1கப்
தேங்காய்-1(பெரியது)
வெல்லப்பொடி-1டே.ஸ்பூன்
ஏலக்காய்பொடி-1/4டீஸ்பூன்
செய்முறை
மாம்பழத்திலிருந்து ரசத்தை பிழிந்தெடுத்து, நாரில்லாமல் வடிகட்டிக் கொள்ளவும்.
தேங்காயிலிருந்து 11/2 கப் பால் எடுக்கவும். இதில் வெல்லத்தை கரைத்துக் கொள்ளவும்.
இத்துடன் மாம்பழ சாறையும், ஏலக்காய் பொடியையும் சேர்த்துக் கலக்கவும்.
அவலை 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து, மெதுவாக அழுத்தி, நீரை எடுத்து விட்டு அவலை மாம்பழ ரசமும், தேங்காய்பாலும் கலந்த கலவையுடன் சேர்க்கவும்.
நன்றாக கலந்து பரிமாறவும்.


Spread the love