இரணகள்ளி இருக்கு குணப்படுத்த
கட்டி போட்டால் குட்டி போடும் தாவரம் என்று இரண கள்ளியை கூறுவார்கள். இதன் இலைகளில் நுனிப் பகுதியில் இருந்து புதுத்தாவரங்கள் புதிப்பித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட கள்ளி வகைச் செடி இது. இதன் தாவரப்பெயர் ‘எபோர்பியா’. மருத்துவத்தில் இதன் இலை மட்டும் பயன்படுகிறது. கள்ளி இனங்கள் சுமார் 2000 வகைகள் உள்ளன. இரணகள்ளி செடியாக வளரக் கூடியது.
இதன் இலைகள் ஆலமரத்தின் இலை போன்று, ஆனால் சற்று தடிமனாக காணப்படும். வறண்ட சமவெளிகள், மலைகளில் வளரக் கூடிய ஒன்று. இதற்கு தண்ணீரோ, மழையோ அவசியமில்லை. காற்றில் உள்ள ஈரமான சூழலிலேயே செழிப்பாக வளர்ந்து விடும். இதன் இலை உடலில் பட்டால் சிவந்து தடித்து விடும் என்பதால் கவனம் தேவை. இலை மூலம் மற்றும் விதை மூலம் இரண கள்ளியை வளர்க்கலாம்.
பல நோய்களுக்குப் பயன்படும் இரண கள்ளி
இதனுடைய வேர், தண்டு சிறுநீரக கல்லடைப்பு வராமல் அல்லது கல் அடைப்பை நீக்க உதவுகிறது. இரண வள்ளிக் கிழங்கு ஊறுகாய், உணவு தயாரிக்கப் பயன்படுகிறது. இந்தியாவில் பந்தல்கண்டு பகுதியில் வசிக்கும் ஆதிவாதிகள் இதன் இலையை பிழிந்து எடுக்கப்பட்டச் சாறை மஞ்சள் காமாலை நோயை நீக்கப் பயன்படுத்துகின்றனர். உடலில் ஏற்படும் உள் அழற்சி மற்றும் வெட்டுக்காயம் ஏற்பட்டு புண்ணாகி அழுகாமல் குணம் பெற சொறி, சிரங்கு, இருமல் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
இதன் இலைகளை கயானா நாட்டு மக்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வருகிறாரக்ள். அல்சர் நோய், நீரிழிவு போன்றவற்றிற்கு இதன் இலைச் சாறை பிரித்தெடுத்து மருத்துவ ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. மடகாஸ்கர் என்ற இந்திய பெருங்கடல் தீவுகளுக்குரிய மக்கள் இதன் வறுக்கப்பட்ட இலைகளை புண்கள், காயங்கள் பூச்சிக்கடிகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.
இலைச் சாறு காது வலி நீக்க, காதுச் சொட்டு மருந்தாக பயன்படுத்துவார்கள். இரணகள்ளி கிழங்கின் பவுடரானது, மலச்சிக்கலைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. இலைச்சாறு முடி வளச்சி மற்றும் நரைமுடி வராமல் தடுக்க/ குணப்படுத்த பயன்படுகிறது.
இரணகள்ளி இலையானது பொதுவாக உடலில் ஏற்படும் அனைத்து வகையான புண்களை, வெட்டுக்காயத்தைப் போக்குகிறது. இதன் இலையை மை போல அரைத்து புண்ணின் மீது வைத்து, வெற்றிலை ஒன்றினால் கட்டி விட வேண்டும்.சிறிது சிறிதாக புண் ஓரிரு வாரங்களில் முற்றிலும் ஆறிவிடும்.
இரணகள்ளியின் இலையைப் பிழிந்து சாறு எடுத்துக் கொண்டு, கால் ஆணி, சொற சொறப்பான மருக்கள், பாலுண்ணி போன்றவற்றில் இரவு உறங்கச் செல்லும் முன்பு தடவி பின்னர் காலை கழுவி விட வேண்டும். பாலுண்ணி, மருக்கள் மறையும் வரை இவ்வாறு இச்சாற்றை தடவி வருவது அவசியம்.
இரணகள்ளியின் இலையைப் பிழிந்து 500 மி.லி. அளவு சாறு எடுத்து, அதனுடன் பசுவின் வெண்ணெய் அரைக்கிலோ சேர்த்து நெய்யாக காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். இந்த நெய்யை, பிரண்டைத் துவையலுடன் சேர்த்து, சோற்றுடன் பிசைந்து மதிய உணவில் சாப்பிட்டு வர வேண்டும். சோற்றுக்கும் பிசைந்து சாப்பிட்டு வர, வயிற்று வலி, அஜீரணம், வயிற்றில் புண், வாயுத் தொந்தரவு மற்றும் குடல் சார்ந்த (சிறுகுடல், பெருங்குடல், இரைப்பை) அனைத்து வித அழற்சி, புண்கள் குணமாகி விடும். அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமளவுக்கு காணப்பட்டாலும் மேற்கூறிய முறைப்படி சாப்பிட்டு வர உறுதியாக குணம் பெறலாம்.
அனைத்து சரும நோய்களுக்கும் அருமருந்து இரணகள்ளி
இரணகள்ளியின் இலை, வேர், தண்டு என அனைத்தையும் எடுத்து நீர் விட்டு அலசி நன்றாகச் சுத்தம் செய்து 500 மி.லி. சாறு எடுத்துக் கொள்ளவும். இச்சாறுடன் தேங்காய் எண்ணெய் 400 மி.லி., நீரடி முத்து 20 கிராம், கார்போக அரிசி 30 கிராம், கஸ்தூரி மஞ்சள் 10 கிராம், கப்பு மஞ்சள் 50 கிராம், கசகசா – 5 கிராம் அளவு எடுத்துக் கொண்டு இடித்து அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கொண்டு அடுப்பில் வைத்து சிறு தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
சாறு சுண்டும் வரை கொதிக்கச் செய்த பின்னர் இறக்கி ஆறிய பின் வடிகட்டி கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளவும். மேற்கூறிய சாற்றை காலையில் குளிப்பதற்கு முன்பு, சரும நோய் உடையவர், தலைமுதல் பாதம் வரை மேலுக்குப் பூசி, அரை மணி நேரம் வரை நன்றாக ஊற வைத்து வெது வெதுப்பான நீரில் சீயக்காய் தேய்த்து குளித்து வர வேண்டும். இக்குளியல் மூலம் குஷ்டநோய், ஊறல், சொறி, சிரங்கு, படை, மேக நீர், கருமேக நீர், செம்மேகப்பரை, சிபிலிஸ் என்னும் கிரந்தி நோய்கள் அனைத்தும் குணமாகும்.
இரணகள்ளி இலைச்சாற்றை, இரு துளி வென்னீரில் கலந்து உள்ளுக்குக் கொடுத்து விட்டு, தேள் கொட்டின கடிவாய்ப் பகுதியில் மேற்படி இலையை அரைத்து வைத்துக் தடவி விட தேள் கடி விஷம் இறங்கி விடும்.
இரணகள்ளி இலைகளில் இரண்டு மூன்று நன்றாகக் கழுவி, சுத்தம் செய்து தினசரி அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வர வேண்டும். மென்று சாப்பிட்ட பின்பு ஓரிரு டம்ளர் தண்ணீர் அருந்தி வர ஐந்தாறு நாட்களில் சிறுநீரக பையில் உள்ள கற்கள் வெளியேறி விடும். மேலும் இதன் பின்பு சிறுநீரகத்தில் கல் தோன்றுவதற்கு வழி இல்லை என்று கூறலாம்.
இரணகள்ளியில் பால் இருக்காது. ஆனால் கள்ளி வகை இனங்களான கொம்பு கள்ளி, கொடிக்கள்ளி, திருகுகள்ளி, சதுரக்கள்ளிகளில் உள்ள அனைத்துப் பண்புகளும் இரணக்கள்ளியில் உள்ளது. பொதுவாக இது நீர், மலத்தை வெளியேற்றும். வாந்தி உண்டாக்கும். இரணகள்ளிச் செடியை வீட்டில் உயரத்தில் வளர்த்தால் அல்லது கட்டி வைக்க, இதன் வாடையின் காரணமாக கொசுக்கள் அந்த இடத்தில் தங்க இயலாமல் வெளியேறி விடும்.
நரம்புச்சிலந்தியா? கவலை வேண்டாம்!
ஈரண கள்ளி இலைகளை இரண்டு மூன்று எண்ணிக்கைகளில் எடுத்து சுத்தம் செய்த பின் மை போல அரைத்து, புதிய மண்பானைச் சட்டியில் இட்டு மிளகு ஒரு தேக்கரண்டி, சீரகம் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்துக் கொண்டு அரைத்துக் கொள்ளவும். மேற்கூறிய அனைத்தையும் இரண்டு டம்ளர் நீர் விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவு வருமாறு சுண்டக்காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொண்டு காலை, மாலை இருவேளை என வேளைக்கு அரை டம்ளர் அளவு எடுத்து உட்கொண்டு வர நரம்புச் சிலந்தி, சன்னி ரோகம், வாத நோய்கள் அனைத்தும் கூடிய விரைவில் குணமாகும்.
பி. முருகன்