‘ராகி‘ – இதன் பெயரைக் கேட்டவுடன் இது ஏதோ ஏழைகளின் உணவு என்று எண்ணிவிட வேண்டாம். இது அனைவருக்கும் உகந்த ஊக்கமளிக்கக் கூடிய, சத்து மிகுந்த மலிவான உணவாகும். ராகியின் பலன் என்ன என்று பார்ப்போமானால், அது அரிசி, கோதுமையைக் காட்டிலும் சத்து மிகுதியானது ஆகும். அரிசி உணவில், நெல்லை அரிசியாக மாற்றும் போது அதன் சத்துக்கள் அனைத்தும் தவிட்டிலும், உமியிலும் போய் விடுகிறது. ஆனால் ராகியிலோ அப்படியில்லை. ராகியை அப்படியே அரைத்து அதனை மாவாக உபயோகிக்க வேண்டும். தவிடு, உமி என்று பிரிக்க முடியாது. பலர் ராகி களி சிறைச்சாலைகளில் கொடுக்கும் உணவு என்று கருதுகின்றனர். அது தவறான கருத்தாகும். ராகியில் உள்ள சத்துக்களை விட அதிகமானதாகும். ராகியின் குணங்களை அரிசியின் குணங்களோடு பட்டியலிட்டு பார்ப்போமேயானால், அதன் பலனை தெரிந்து கொள்ளலாம்.
ராகி
புஷ்டி – 7.1%, கொழுப்பு – 1.29%, உலோகம் – 2.24%, கால்ஷியம் – 0.334%, பாஸ்பரஸ் – 0.272%, அயன் – 5.38%, விட்டமின் ஏ – 70.
அரிசி
புஷ்டி – 6.85%, கொழுப்பு – 0.55%, உலோகம் – 0.05%, கால்ஷியம் – 0.007%, பாஸ்பரஸ் – 0.108%, அயன் – 1.02%, விட்டமின் ஏ – 0.
தென்னிந்தியர் தாங்கள் தான் அந்தஸ்து, நாகரீகம், வாய்ந்தவர்களென்று கொண்டு நம்பர் ஒன் வெண்மை அரிசியைச் சாப்பிடுகிறார்கள். ராகியின் விலை மலிவு என்பதால் அது ஏதோ மலிவான உணவு என்று கருதுகின்றனர். இது தவறான கருத்தாகும். ராகியின் விலையைப் பார்க்காமல், அதன் பலனைப் பார்க்க வேண்டும்.
‘ராகி‘ சத்து மிகுந்தது என்பதற்காக அதனை உடனடியாக அடிக்கடியும் சேர்த்துக் கொள்ளக்கூடாது. அதனை படிப்படியாக வயிற்றுக்கு பழக்க வேண்டும். முதலில் மாதம் இரு முறை, பின் மூன்று முறை என்று ஆரம்பிக்க வேண்டும். ராகியில் களி ஒன்று தான் செய்ய முடியும் என்றில்லை. ராகியில் களி, பிட்டு, இடியாப்பம், பக்கோடா, பானம் (ராகி பானம்) என்று பலவிதமான உணவுகள் செய்யலாம். இவ்வாறு செய்வதால் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
ராகி பக்கோடா
ராகி மாவுடன் சிறிது உப்பு சேர்த்து, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து சிறிது நீர் விட்டு பிசிறி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். சுவை மிகுந்த ராகி பக்கோடா ரெடி.
ராகியின் பயன்கள்
ரத்தம் சுத்தியாகும்
எலும்பு உறுதிப்படும்
தசையை வலுவாக்கும்
மலச்சிக்கல் ஒழியும்
அதிக நேரம் பசி தாங்கச் செய்யும்.