நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் காய்கறிகள், கீரை வகைகளின் பெயரை அறிந்து இருக்கிறோம். ஆனால், அதனால் நமக்கு கிடைக்கும் உடல் ஆரோக்கியம், எந்த நோய்களை குணப்படுத்த உதவுகிறது என்பதைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருப்பதில்லை. அவ்வாறு நாம் உணவில் பயன்படுத்தப்படும் காய்கறிகளில் எளிதாக, எங்கும் கிடைக்கக் கூடிய ஒன்று முள்ளங்கி ஆகும்.
முள்ளங்கியின் வகைகள்
மஞ்சள் முள்ளங்கி, சதுர முள்ளங்கி, வன முள்ளங்கி, கெம்பு முள்ளங்கி, சுவற்று முள்ளங்கி என பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் வேறுவேறு தன்மைகளைக் கொண்டவை. வெள்ளை முள்ளங்கி நீண்டு, பெரியதாக இருக்கும். சிறு முள்ளங்கி கார்ப்புச் சுவையையும் உஷ்ணத் தன்மையையும் கொண்டது. இது உணவுக்கு ருசி தரக் கூடியது. வாத, பித்த, சிலேத்தும எனும் மூன்று தோஷங்களை சமநிலைப்படுத்தும். குரலைச் செம்மைபடுத்தும். பெரு முள்ளங்கி வறட்சித் தன்மை, வாயுத் தன்மை கொண்டது. மூன்று தோஷங்களை வளர்க்கும். ஆனால், சமையலுக்குப் பயன்படுத்தும் முன்பு எண்ணெயில் இட்டு வதக்கிய பின் பயன்படுத்தினால் மூன்று தோஷங்களையும் தணிக்கும் ஆற்றல் கொண்டது. மஞ்சள் முள்ளங்கி வகையானது இனிப்பு சுவையும், உஷ்ணமும், மிருதுத் தன்மையும், உஷ்ண வீரியமும் கொண்டது. மலத்தை தடுக்கும். கப, வாதங்களை தணிக்கும்.
முதிர்ந்த முள்ளங்கி வீக்கத்தையும், அழற்சியையும் தோற்றுவிக்கும். ரத்தத்தை கெடுக்கும். உலர்ந்த முள்ளங்கி 3 தோஷங்களையும் விஷத்தையும் நீக்கி விடும். காய்ச்சல், இழுப்பு, மூக்கு, கண், தொண்டையில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துகிறது. கந்தகச் சத்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு மருத்துவ வேதிப் பொருட்கள் முள்ளங்கியில் உள்ளன.
முள்ளங்கியில் அடங்கியுள்ள சத்துக்கள்
100 கிராம் முள்ளங்கியில் வைட்டமின் ஏ 1 சதவீதம், வைட்டமின் சி 23 சதவீதம், வைட்டமின் இ 9 சதவீதம், வைட்டமின் கே 1 சதவீதம் உள்ளது. ஃபோலேட்ஸ் 6 சதவீதம், நியாவின் 1.5 சதவீதம், பெரிடாக்ஸின் 5.5 சதவீதம், ரிபோஃப்ளேவின் 3 சதவீதமும் உள்ளது.
சோடியம் 2.5 சதவீதம், பொட்டாசியம் 5.0 சதவீதம், சுண்ணாம்புச் சத்து 2.5 சதவீதம், செம்பு 5 சதவீதம், இரும்பு 4 சதவீதம், மெக்னீசியம் 2.5 சதவீதம், மாங்கனீசு 2.5 சதவீதம், துத்தநாகம் 2 சதவீதம் தாதுப் பொருட்கள் உள்ளன. முள்ளங்கி கிழங்கை விட முள்ளங்கி இலையில் 6 மடங்கு விட்டமின் சி சத்து உள்ளது. முள்ளங்கி கீரையில் மிகுதியான சுண்ணாம்பு சத்து உள்ளது. முள்ளங்கியின் பூ கப பித்தங்களை தணிக்கும். புற்று நோயைத் தடுக்க வல்ல மருத்துவப் பொருட்கள் முள்ளங்கியில் அதிகம் உள்ளன.
முள்ளங்கியின் இலை, பூ, கிழங்கு, விதை என்று அனைத்துப் பாகங்களும் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. முள்ளங்கிக் கீரை வயிற்று வலி, வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்துகிறது.
முள்ளங்கி விதை ஆண்மையைப் பெருக்கக் கூடியது. சிறுநீரைப் பெருக்கக் கூடியது. மலத்தை இளக்க வல்லது. வெப்பத்தை தூண்டக் கூடியது.