கேள்வி பதில்

Spread the love

கேள்வி : எனக்கு வயது 58, ஆறு மாதங்களுக்கு முன்பு பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டேன். சர்க்கரை நோய்க்கு இன்சுலின் ஊசி போட்டுக் கொள்கிறேன். சென்ற ஒரு மாத காலமாக இரண்டு உள்ளங்கால் மற்றும் குதிக்கால்களிலும் கடுமையான வலியும் எரிச்சலும் ஏற்படுகிறது. இதை ஆயுர்வேத சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியுமா?

பதில் : கால்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களில் உட்புறச் சுவர் தடித்துப் போனாலோ, குழாய்களின் உட்புறம் விட்டம் குறைந்து குறுகிப் போனாலோ இரத்த ஓட்டம் குறைந்து போகக் கூடும். இதனால் அப்பகுதிக்குத் தேவையான உயிர்வளி ‘ஆக்சிஜன்’ குறைந்து போகக் கூடும். அதனால் வலியும் எரிச்சலும் ஏற்படக் கூடும், புகை, மதுபானம் போன்ற வஸ்துக்களைப் பயன்படுத்துவதும், நீண்ட நேரம் கால்களைக் கீழே தொங்கவிட்ட நிலையில் இருப்பதும் ஆக்சிஜன் குறைவை உண்டாக்கிக் கால்களில் வலியை ஏற்படுத்தலாம்.

சர்க்கரை நோய் காரணமாக இரத்தக் குழாய்கள் வலுவிழந்தும் தசை நார்கள் நெகிழ்ச்சியும் அடையக் கூடும் என்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். தினமும் காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் ஆயுர்வேத மூலிகைத் தைலமான பிண்ட தைலத்தைச் சிறிது வெது வெதுப்பாகும்படி சூடேற்றிப் பின்னர் பஞ்சில் முக்கி எடுத்து வலியுள்ள இடத்தைச் சுற்றிப் பரப்பி வைத்து ஒரு மெல்லிய துணியால் மிதமாகக் கட்ட வேண்டும். ஒரு மணி நேரம் கழித்துப் பஞ்சை எடுத்துவிட்டுத் துணியால் எண்ணெயைத் துடைத்து விடலாம். இதனால் சுருங்கிய இரத்தக் குழாய்கள் விரிவடைந்து இரத்தம் சீராகச் செல்ல வாய்ப்பிருக்கிறது.

அஸ்வகந்தா என்னும் அமுக்கிரா சூரணத்தை சுமார் 5 கிராம் எடுத்து வெதுவெதுப்பான பாலுடன் கலந்து 45 நாட்கள் சாப்பிட்டு வர கால்களில் உள்ள இரத்தக் குழாய்கள் வலுவடையும்.

நெட்டி முறிப்பது

நம்மில் சிலர் அடிக்கடி கைவிரல்களில் நெட்டி முறிப்பதைக் காண்கிறோம். சிறு குழந்தைகள் நெட்டி முறித்தால் பெரியவர்கள் திட்டுவதையும் நாம் சில நேரங்களில் பார்க்கிறோம். இது ஒரு நோயா? இதை எப்படி நிறுத்துவது.

நெட்டி முறிப்பது ஒரு நோயல்ல, அது ஒரு மனநிலைக் கோளாறே! அதிக பரபரப்பு, மனத் தடுமாற்றம் ஏற்பட்டால் சிலர் நெட்டி முறிப்பார்கள். மனநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இந்தப் பழக்கத்தை நிறுத்த முடியும்.

வழிகள்

1. மனப் பதட்டம் எதனால் உண்டாகிறது என்று சிந்தித்துப் பாருங்கள். எந்த விஷயம் உங்களை அஞ்சத்திற்கும், பதட்டத்திற்கும் ஆட்படுத்துகின்றதோ அதை நன்றாக அலசி ஆராய்ந்து பாருங்கள். அச்சத்தை நீக்க முயற்சி எடுங்கள்.

2. நெட்டி முறிப்பவர்களைத் திட்டவோ, திருத்தவோ முயலாதீர்கள்.

3. நெட்டி முறிப்பது உடல் நலத்திற்குக் கேடு செய்யாது. அதனால் ஓரிரு முறை நெட்டி முறித்தால் பரவாயில்லை என்று எண்ணுங்கள்.

4. ஒன்றும் ஏற்படாது, தைரியமாக இரு என்று யாராவது ஆசுவாசப் படுத்தலாம்.

5. அளவிற்கதிமாக நெட்டி முறிக்க நேர்ந்தால் ஒரு மனநல மருத்துவரை அணுகலாம்.


Spread the love
error: Content is protected !!