நீங்கள் கேட்டவை

Spread the love

எனக்கு 47 வயது ஆகிறது. எனது மாதவிடாய் நின்று 3 வருடங்களாகிறது. இப்போது கால் மூட்டுக்களில் எப்போதாவது சிறிது வலி ஏற்படுகின்றது. இது எதனால் இது மூட்டுவலியா? அல்லது மூட்டுவலியின் ஆரம்பமா? மூட்டுவலி வராமல் தவிர்ப்பது எவ்வாறு?

எஸ். காஞ்சனமாலா

சென்னை.

பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின்னரோ அல்லது நிற்பதற்கு ஒரு சில ஆண்டுகள் முன்னதாகவோ உடலில் உற்பத்தியாகும் சில சுரப்புகளில் மாற்றம் ஏற்படுவது இயல்பு. இது பல சமயம் என்னவென்று அறியும் முன்பே நடந்து முடிந்து விடும். சிலருக்கு பல மாற்றங்களை ஏற்படுத்தும் இதனால் பல மனக் குழப்பங்களும் உடல் நலக்கேடுகளும் உண்டாகும். உண்டாக வாய்ப்பு உள்ளது.

மூட்டுவலி என்பது பொதுவாக மூட்டுகளில் வீக்கம், வலி, நடப்பது எழுந்திருப்பது உட்காருவது போன்றவற்றில் சிரமம், காலை எழுந்தவுடன் மூட்டுகளில் இறுக்கம், மலச்சிக்கல், மலம் கழிவதில் சிரமம், ஜீரண சக்தி குறைவு எடை தாங்கும் கணுக் கால் மற்றும் முட்டிகளில் தாங்க முடியாத வலி போன்றவற்றுடனும் சில சமயம் காய்ச்சலுடனும் வரக் கூடியது.

இது எளிதாக ஜீரணமாகாமல் உடலில் நச்சுப் பொருட்கள் சிறு மற்றும் பெரிய மூட்டுகளில் தங்கி மூட்டுகள் எளிதாக இயங்குவதில் தடை ஏற்பட்டு அதன் தொடர்ச்சியாக கடினமான வேலைகள் செய்யும் பொழுது தாக்கப்பட்டு சுளுக்கு மற்றும் வீக்கத்துடன் வலியுடன் கூடிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மூட்டுவலியைப் போக்குவதற்கும் மூட்டுவலி வராமல் தவிர்ப்பதற்கும் ஜீரண சக்தி குறையும் தருணங்கள் அதிகப்படுத்த வேண்டும். எளிதாக மலம் கழியும் விதமாக நார்ச்சத்துள்ள பொருட்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். புளிப்பு, காரம், மசாலா, வாய்வு உணவுகள் போன்றவற்றை தவிர்த்தல் அவசியம். தினசரி உடற்பயிற்சி நடைப் பயிற்சி போன்றவற்றை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். மூட்டு வலியின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தக்க மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். காலம் தாழ்த்தி மருத்துவம் செய்தால் மூட்டுகளில் சேர்ந்துள்ள நச்சுப் பொருட்கள் மூட்டுகளை பாதிப்படையச் செய்து விடும்.

உங்களுக்கு வந்திருக்கும் மூட்டு வலி எத்தகையது என்பதற்கேற்ப தகுந்த மருத்துவம் செய்து கொள்ளவும். தக்க மருத்துவரை அணுகவும்.

எனது வயது 27. எனக்கு அடுத்த மாதம் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. எனக்கு மிகவும் பயமாக உள்ளது. ஏனெனில் நான் கடந்த 10 ஆண்டுகளாக சுய இன்பம் (கைப் பழக்கம்) அனுபவித்து வருகிறேன் எனக்கு தகுந்த ஆலோசனை வழங்கிடுமாறு வேண்டுகிறேன்.

கே. செல்வன்

சென்னை.

இன்றைய காலச் சூழலிலும் இன்றைய நாகரீக உலகின் பழக்க வழக்கங்களாலும் கேளிக்கை நிகழ்வுகளாலும் கைப்பழக்கம் எனும் சுய இன்பம் ஒர் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், விடுதிகளில் தங்கியிருக்கும் இள வயது ஆண்கள் மற்றும் 20 – 25  வயதிலுள்ள ஆண்கள் பெரும்பாலும் சுய இன்பம் அடைகின்றனர். இது இயல்பானதே இதில் எந்த வித தவறும் இல்லை. அளவுடன் கட்டுக்குள் இருக்கும் பட்சத்தில் இதுவே அளவிற்கு மீறி நடைபெறும் பொழுது பல உடல் நலக் கேடுகளை உண்டாக்குகின்றது. இது பிற்காலத்தில் விந்து முந்துதல், குறைபாடுள்ள விந்தணுக்கள் நரம்புத்தளர்ச்சி சோர்வு பலஹீனம் போன்றவற்றிற்கு வழி செய்து விடுகின்றது.

எனவே சுய இன்பத்தை தவிர்த்து சத்தான உணவுகள் உட்கொண்டு பயமின்றி திருமணம் செய்து கொள்ளலாம். இன்னும் பயமாக சோர்வாக இருப்பின் தகுந்த மருத்துவரை அணுகி தக்க ஆலோசனை பெறுவது நல்லது.

எனது கண்களுக்கு அடியில் கருவளையம் உள்ளது. நான் எவ்வளவோ முயன்றும் அது போகவில்லை. நல்ல உணவுகளை உட்கொண்டும் சருமத்தை நன்றாக கவனித்துக் கொண்டாலும் இந்த கருவளையம் மட்டும் போவதேயில்லை. இதற்கு ஆயுர்வேதத்தில் ஏதாவது வழி உள்ளதா?

திருமதி தீப்தி சர்மா

சென்னை.

கண்களின் கீழ் கரு வளையம் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் மிக முக்கியமானவை

  1. தூக்கமின்மை – போதுமான அளவு தூக்கம் இல்லையெனில் சோர்வினால் கண்களின் கீழ் கருவளையம் ஏற்படலாம்.
  2. உடல் உஷ்ணம் – உடல் உஷ்ணம் அதிகமாக ஆகி அதன் தொடர்ச்சியாகக் கூட கருவளையம் ஏற்படலாம்.
  3. போஷாக்கின்மை – தேவையான அளவு சத்துக்கள் உடலில் இல்லையென்றாலும் போதுமான அளவு இரும்புச்சத்து இல்லையென்றாலும் கருவளையம் ஏற்படலாம்.
  4. பரம்பரையாகவும் சிலருக்கு கருவளையம் பளிச் என்று தெரியும், பலருக்கு கருவளையம் இருந்தாலும் தெரியாது.

பஞ்சில் குளிர்ந்த நீரிலோ வெள்ளரி சாற்றிலோ நனைத்து 10 – 15 நிமிடங்கள் கண்களை மூடிக் கொண்டு கண்களின் மேல் வைக்கலாம். வெள்ளரியை சிறு துண்டுகளாகவும் வெட்டி கண்களின் மேல் வைக்கலாம். கண்களை கண்களின் கீழ் உள்ள கருவளையத்தை இரவு நேரங்களில் பாதாம் எண்ணெயைக் கொண்டு மெதுவாக மசாஜ் செய்யலாம். சருமம் சீர் பெற வைட்டமின் ஏ அடங்கிய கீரைகள், மீன்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குளிர்ந்த நீரில் முகத்தையும் கண்களையும் ஒரு நாளைக்கு 3 – 4 முறை கழுவலாம்.


Spread the love
error: Content is protected !!