நீங்கள் கேட்டவை

Spread the love

  • என் நான்கு வயது மகள் அபிநயா சில நேரங்களில் பேசுவதற்குத் தடுமாறுகிறாள். ஒரே வார்த்தையை இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பச் சொல்லுகிறாள். திக்கு வாய் போல் தெரிகிறது. இது தானாகவே சரியாகிவிடுமா? இல்லை டாக்டரிடம் காண்பிக்க வேண்டுமா?

ஒரு குறிப்பிட்ட பருவத்தில் பல குழந்தைகள் இது போன்ற பேச்சுத் தடுமாற்றத்திற்கு ஆளாகின்றனர். வாய்மொழிக்குறை நீக்குவியரார்கள் (speech therapists) இதை இயல்பான இளம் வயது பேச்சுத் தடங்கள் என்று தான் கருதுகிறார்களே தவிர, திக்குவாய் என்று கருதுவதில்லை. நியைப் பேச வேண்டும் என்ற ஆர்வத்துடன் பேச முனைகின்ற போது அதற்கேற்ப விரைந்து வார்த்தைகள் வராமற் போகின்ற போகின்ற நிலையையே இது குறிக்கிறது. மூன்றிலிருந்து ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே இது பெரும்பாலும் காணப்படுகிறது.

பெற்றோர்கள் இதைப் பெரிது படுத்தாமல் விட்டு விடுகின்ற போது இக்குறை தானாகவே மறைந்து விடுகிறது. மாறாகக் குழந்தை பேசுகின்ற போதெல்லாம் அவளைத் திருத்த முயல்வது இக்குறையை மேலும் தீவிரமாக்கக்கூடும். எனவே எப்போதும் போல் குழந்தையிடம் அன்பாகவும், ஆதரவாகவும் இருப்பதுடன் அவள் குறையை அவளுக்கு நினைவு படுத்தாதவாறு நடந்து கொள்ளுங்கள். ஆறு அல்லது ஏழு வயதுக்கு மேலும் இக்குறை நீடிக்குமானால் வாய்மொழிக் குறை நீக்குவியலாரிடம் ஆலோசனை பெறலாம். 

  • எனக்கு வயது 26. ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டேன். இன்னும் தாயாகிற அதிர்ஷ்டம் ஏற்படவில்லை. மூன்று தடவை செயற்கை முறைக் கருத்தரிப்பு (artificial insemination) செய்தும் பலன் கிடைக்கவில்லை. எனது இரத்தத்தில் புரோலாக்டின் அளவு கூடுதலாக இருக்கிறது. அதனால் தான் கருத்தரிக்கவில்லை என்று டாக்டர் கூறுகிறார். புரோலாக்டின் என்றால் என்ன? அதைக் கட்டுப் படுத்துவது எப்படி?

புரோலாக்டின் என்பது முன் பிட்யூட்டரி சுரப்பியினால் (anterior pituitary) சுரக்கப்படுகின்ற ஒரு ஹார்மோன். அதிகமான புரோலாக்டின் சுரப்பதற்குக் காரணங்கள் பல உள்ளன. ரீசர்ப்பின், பினோதயசின், மிதைல் டோப்பா, அபின் போன்ற மருந்துகள் உட்கொள்கின்ற போது புலோரலக்டின் சுரப்பு அதிகரிக்கக்கூடும். மூளையில் பிட்யூட்டரி பகுதியில் தோன்றும் கட்டிகள், உறுப்புச் சிதைவுகள், நைவுப் புண்கள் போன்றவற்றாலும் இரத்தத்தில் புரோலாக்டின் அளவு உயரக்கூடும். பல நேரங்களில் குறிப்பிடத்தக்க காரணம் எதுவுமின்றியே புரோலாக்டின் அளவு உயர்ந்து காணப்படலாம்.

புரோலாக்டின் சுரப்பு, கோனடோட்ராபின் (Gonadotropin)எனப்படும் செனிப்பகச் சுரப்பினை ஊக்குவிக்கின்ற ஹார்மோன் சுரப்பதைத் தடை செய்வதாக அறியப்பட்டுள்ளது. இதனால் சினையகம் தூண்டப்படாமல் போவதுடன் சினைறு முற்றுவதிலும், சினை வெளிப்படுவதிலும் தடங்கள் ஏற்படக்கூடும். நீங்கள் கருவுறாததற்கு இதுவே காரணமாகவும் இருக்கக்கூடும். எனவே பெண்ணுறுப்பியல் மருத்துவர் ஒருவரை அணுகி அதிக அளவு புரோலாக்டின் சுரப்பிற்குக் காரணம் என்ன என்றறிந்து அதற்கேற்ப மருத்துவம் செய்து கொள்வது நல்லது.

*. உடற்பயிற்சி செய்தால் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு கூடுமென என் நண்பர் கூறுகிறார். இது சரியா?

உடலின் மொத்த கொலஸ்ட்ரால் அளவில் உடற்பயிற்சி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. எனினும் நீங்கள் செய்கின்ற உடற்பயிற்சியின் தீவிரத்தைப் (Intensity) பொறுத்து உயர் செறிவுக் கொழுப்புப் புரதத்தின் (HDL) விகிதம் உயரவும், தாழ் செறிவுக் கொழுப்புப் புரதங்களின் (LDL) விகிதம் தாழ்வுறவும் நேரலாம். உயர் செறிவுக் கொழுப்புப் புரதங்கள் உயர்வதால் உடலுக்கு நன்மையே. எனினும் இக் கொழுப்புப் புரதங்களின் தகவு (Ratio) மாறுபடவேண்டுமானால் கால்பந்தாட்டம், ஹாக்கி, ஒற்றையர் டென்னிஸ் போன்ற முனைப்புமிக்க ஆட்டங்களில் ஈடுபடவேண்டும். மென்நடை (Walking) விசையற்ற மெல்லோட்டம் (casual jogging) போன்ற பயிற்சிகளினால் இந்தத் தகவு மாறுபடுவதில்லை.

  • 20 வயதான கல்யாணமாகாத பெண் நான். எனது வலது தொடையின் உட்புறத்தில் சிறிய வட்டம் போல் ஒரு patch இருக்கிறது. பல நேரங்களில் அரிக்கவும் செய்கிறது. ஏதாவது ஒரு களிம்பு அல்லது கிரீம் போட்டால் கொஞ்ச நாளைக்கு மறைந்து விடுகிறது. மறுபடி திரும்பவும் வருகிறது. இதற்கு ஒரு நிரந்தரமான மருந்து சொல்ல வேண்டுகிறேன்.

ரிங்வேர்ம் (Tinea) அல்லது படை, பற்று என்று சொல்லப்படும் சரும நோய்க்குத் தொடர்ந்து சில வாரங்கள் மருத்துவம் செய்ய வேண்டும். பலவிதமான பூஞ்சாள எதிர்ப்பிகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. டீனாடேர்ம் (Tinaderm) தக்தரின்(Daktarin) சர்ஃபஸ் (surfaz) போன்ற திறன்மிக்க பல மருந்துகள் கிரீம் வடிவிலும் தூவுகின்ற பவுடர் வடிவிலும் கிடைக்கின்றன. இவற்றில் ஒன்றை வாங்கி உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்துவது சிறந்த நிரந்தரமான பலனைத் தரும்.

*. நான் இரண்டு வருடங்களாக வேலியம் 5 மி.கி (Diazepam) மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். இதனால் ஏதாவது கெடுதல் ஏற்படுமா?

நீண்ட நாட்களுக்கு டயாஸிபாம் (Diazepam Valium / calmpose / calmod) மாத்திரைகள் சாப்பிடுகின்ற போது அதுவே மாற்ற முடியாத பித்தாக மாறிவிடக்கூடிய பெரிய அபாயம் இருக்கிறது. இது சாப்பிடுவதை நிறுத்த முயல்கிற போது தலைவலி, மனக்குழப்பம், சிந்தனைத் தெளிவின்மை, வியர்த்தல், வயிற்றோட்டம், உறக்கக் கோளாறுகள் போன்ற பல பின்னிடைவுத் தொல்லைகளை (withdrawal symptoms) ஏற்படுத்தக் கூடும்.

டயாஸிபாம், உணர்வைச் சொக்க வைக்கும் (Sedative) குணமுடையதாகையால் இதைச் சாப்பிட்ட பின்னர் வாகனங்கள் மற்றும் எந்திரங்களை இயக்குகின்றவர்களுக்கு ஆபத்து நேரிடலாம்.

ஒவ்வாமையும், சருமச்சினப்பும் (skin rashes) சிலருக்கு ஏற்படலாம். பாலுறவில் நாட்டமில்லாமையையும் இது உண்டாக்கக்கூடும்.

கழிவறைகள் மூலமாக எய்ட்ஸ் பரவ வாய்ப்பு உண்டா? காலைக் குத்திட்டபடி மலங்கழிக்கும் இந்திய முறைக் கழிவறைகளினால் எய்ட்ஸ் மட்டுமின்றி வேறு எந்தவித அபாயமும் நேர வழி இல்லை. மேற்கத்திய முறை கழிவறைகளில், அமர்கின்ற இருக்கை (Toilet seat) தூய்மையாக இருக்க வேண்டும். தூய்மையற்றதாக இருக்குமானால் வேறு சில சரும நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதே தவிர எய்ட்ஸ் ஏற்பட வாய்ப்பில்லை. டாய்லெட் இருக்கை மூலம் இரண்டு மனிதர்களுக்கு இடையே இரத்தத் தொடர்பு ஏற்படுவதென்பது மிக மிக அரிது.

  • மாதவிலக்கின் போது பெண்கள் உடற்பயிற்சி செய்யலாமா?

எப்போதெல்லாம் உடற்பயிற்சி செய்யலாம் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் செய்யலாம். தடை ஏதுமில்லை. ஒலிம்பிக் பந்தயங்களில் பெண்களின் போட்டிகளுக்கு நாள் குறிப்பிடும் போது அவர்களின் மாதவிலக்கைக் கணக்கிட்டு நாள் குறிப்பதில்லையே! மாறாக, மாதவிலக்கின் போது இப்போட்டிகளில் பங்கேற்ற பல பெண்கள் சிறப்பான வெற்றிகளைப் பெற்றுள்ளனர். இயல்பான மாதவிலக்கின் போது பெண்களின் செயல்திறனில் எவ்விதக் குறைவோ, தாழ்ச்சியோ இருப்பதில்லை. சிலருக்கு மட்டும் குறிப்பாக மாதவிலக்கின் போது தொல்லைகள் இருக்குமானால் அவர்கள் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

  • என் வயது 19. கல்லூரி மாணவி. 5 அடி உயரம் இருக்கிறேன். என் எடை 46 கிலோ தான் இருக்கிறது. என் எடை கூடுவதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள்.

இது ஒரு கஷ்டமான கேள்வி. இதற்கென்று குறிப்பிட்ட பதில் எதுவும் இல்லை. வயிற்றில் குடற்புழுக்கள் உள்ளனவா என்று சோதித்துப் பாருங்கள். நல்ல சத்துமிக்க, சமச்சீர் உணவை உண்பதுடன் தொடர்ந்து எளிய உடற்பயிற்சிகளும் செய்து வாருங்கள். உடல் எடை கூடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதற்காக அளபுக்கு அதிகமாகச் சாப்பிட்டு விட்டு அவதிப்படாதீர்கள். மாதவிலக்கின் போது இயல்புக்கு மீறி இரத்தம் வெளியேறுமானால் தக்க மருத்துவரை அணுகி அதைச் சீராக்கிக் கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாகப் பரம்பரைத் தனிக்கூறு (family trait) என ஒன்றிருக்கிறது. அதைப் பொறுத்தே உடல் உயரமும், எடையும் அமையக்கூடும்.


Spread the love
error: Content is protected !!