கேள்வி பதில்

Spread the love

ஆயுர்வேதம் டுடே ஆசிரியர் அவர்களுக்கு,

நான் கடந்த சில ஆண்டுகளாக மூல வியாதியால் அவதிப்படுகிறேன். மலம் கழிக்கும் போது இரத்தமாக உள்ளது. அறுவைசிகிச்சை அவசியமில்லை, மருந்து மாத்திரைகளில் குணப்படுத்தி விடலாம் என்று கூறுகின்றனர். மூலம் காரணமாக உணவுக் கட்டுப்பாடும் அவசியம் என்று கூறுகின்றனர். மூலம் குணப்படுத்தக் கூடிய எளிய மருந்துகளையும் உணவுக்கட்டுப்பாடுகளும் கூறினால் சிரமம் குறையும் என்று நம்புகிறேன். தகுந்த ஆலோசனைகளை கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பதில்

மூலநோய் என்றால் என்ன? இது எதனால் ஏற்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்வது நல்லது. மனித உடலில் கழிவு மண்டல இயக்கமானது கீழ்க்குடல் முதல் மலவாய் வரையில் உள்ள குடல் பாதைகள் உஷ்ணத்தின் காரணமாக வீக்கம் அடைவது, மலவாயில் எரிச்சல், அரிப்பு மற்றும் சில நேரங்களில் அரிப்பு போன்றவை ஏற்படுகிறது. மலம் கழிக்கும் பொழுது, மலம் வெளியே செல்லாது. சிரமம் தந்து, முக்கி முனகி வெளியே தள்ள முயற்சிக்கும் பொழுது, மலக்குடல் இரத்த நாளங்களை கீறி அதிலிருந்து கசியும் இரத்தமும் கலந்து மலம் கழியும்.

மூலம் எதனால் உருகாகிறது?

மூலம் உருவாவதற்கு முதல்  காரணமே மலச்சிக்கல் தான். உடல் எடை அதிகம் இருப்பவர்கள், தொந்தி உள்ளவர்களுக்கு வயிறு அழுத்தம் அதிகரிப்பனால் மூலப்பிரச்சனை உருவாகிறது. கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு மூலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். உடலில் செரிமானம் சீராக நடைபெற்றால் மலம் கழிப்பதும் எளிதாகும். ஆகவே செரிமானம், மலம் வெளியேற்றம் என்று இரண்டு பிரச்சனைகளையும் கவனத்தில் கொண்டு, அதற்கு ஏற்றாற்போல உள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுதல் அவசியம்.

மூலநோயிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம்?

அன்றாட உணவுகளில் நார்ச்சத்துள்ள உணவு வகைகள் மற்றும் பழங்கள், கீரைகள் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அசைவ உணவுகள், மசாலா உணவுகள் தவிர்க்க வேண்டும். உடலுக்கு ஓரளவு வேலையைத் தரும் வண்ணம் தினசரி நடைப் பயிற்சி செய்வது நல்லது. அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். கேரட் ஜுஸ் தினமும் குடித்து வரலாம். காலையில், வெறும் வயிற்றில் வேப்பிலைச்சாறு குடித்து வரலாம்.

மூலத்தை குணப்படுத்த உதவும் முலிகை உணவுகள்

கருணைக்கீரை குழம்பு:

கருணைக்கிழங்கை, உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும். எலுமிச்சைப்பழம் அளவு புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். சிறிய வெங்காயம் ஒரு கோப்பை அளவு உரித்துக் கொண்டு, வாணலியில் எண்ணெய் விட்டு, சிறிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். மிளகாய்ப்பொடி, கொத்த மல்லிப்பொடி, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கி அத்துடன் புளிக்கரைசல் சேர்த்து உப்பு போடவும். வேக வைத்த கருணைக் கிழங்கை உதிர்த்து கொதிக்கும் குழம்பில் போடவும். கெட்டியானதும் அடுப்பை விட்டு இறக்கிக் கொள்ளவும். கருணைக் கிழங்கு, மூலத்தால் ஏற்படும் புண்களைக் குணப்படுத்தக் கூடியது.

பூண்டு சாதம்

100 கிராம் அளவு பூண்டு எடுத்துக் கொண்டு, உதிர்த்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதனை நல்லெண்ணெய் விட்டு, பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அரிசியை தனியாக உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும். இத்துடன் வதக்கிய பூண்டு, மிளகுப்பொடி உப்பு சேர்த்து வதக்கி, வேகவைத்த அரிசி சாதத்தையும் சேர்த்துக் கிளறவும். பூண்டில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

வெந்தயக்கீரை கட்லட்:

கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெந்தயக்கீரையை சுத்தம் செய்து நெய்யில் வதக்கவும். பச்சைப்பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய காய்கறிகளுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத் தூள், உப்பு, ரொட்டித்தூள், வதக்கிய வெந்தயக்கீரை, பச்சைப்பட்டாணி ஆகியவற்றை உலர்வாக பிசைந்து கொள்ளவும். இதை வடை போல தட்டி, தோசைக் கல்லில் எண்ணெய் வார்த்து வேக வைத்து சாப்பிடலாம். இதில் போதுமான அளவு நார்ச்சத்துள்ளது.

உணவே மருந்து :

மூலத்துக்கு தீர்வு உணவு தான். தினமும் குறைந்தது இரண்டு வேளை உணவில் கீரை வகைகளை சேர்த்துக் கொள்வது அவசியம். மாதுளை, சப்போட்டா போன்ற பழங்கள், முளைகட்டிய பயிறு வகைகள் போன்றவைகளை சாப்பிடுங்கள். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் அருந்துங்கள். இரவு உறங்கச் செல்லும் பொழுது பூண்டை உரித்து பொடியாக நறுக்கி பாலில் போட்டு கொதிக்க வைத்து அருந்தி வாருங்கள். தினமும் பூண்டுப்பால் சாப்பிடுவது மூலத்திற்கு நல்லது. வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் கருணைக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

முட்டை, கருவாடு, சில்லி சிக்கன், சில்லி மீன் எண்ணெயில் பொரித்த மற்றும் பொரிக்காத அசைவ உணவுகள் கத்தரிக்காய், தேங்காய் தவிர்த்து விடுங்கள்.

எளிமையான வைத்தியம் :

மலச்சிக்கல் காரணமாக பெரும்பாலும் மூலநோய் ஏற்பட முதல் காரணமாக அமைகிறது.

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், விளக்கெண்ணெய்யை தினசரி ஆசனவாயில் தடவி வரலாம், இஞ்சியை துவையல் செய்து அல்லது பச்சடி செய்து சாப்பிடலாம். ஆமணக்கு விதையின் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டு வரலாம்.

அம்மான் பச்சரிசிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆவாரம் பூவை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடலாம். இஞ்சி சாற்றை, கடுக்காய்ப் பொடி கலந்து  1௦ கிராம் அளவு தினசரி காலை, மாலை என இரு வேளையும் சாப்பிட்டு வரலாம்.

இலந்தை இலையை அரைத்து புளித்த மோரில் நெல்லிக்காய் அளவு கலந்து அருந்தி வர மூலக்கடுப்பு குணமாகும். ஆலம் பழத்தை உலர்த்திப் பொடி செய்து சர்க்கரை கலந்து காலை, மாலை என இரு வேளையும் சாப்பிட்டு வர மூலம் குணமாகும். ஆமணக்கு எண்ணெய் அரை லிட்டர் அளவு எடுத்துக் கொண்டு அதில் கடுக்காய் 50 கிராம் அளவு சேர்த்துக் காய்ச்சி சேகரித்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வரலாம். அரைக் கீரையுடன், பாசிப்பயிறு, மிளகு, நெய் சேர்த்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் குணமாகும். மலவாயில் எரிச்சல் தீரவில்லையா? அகத்திக்கீரை சாற்றில் 5 கடுக்காய்களைச் சேர்த்து (உடைத்து போட வேண்டும்) கசாயம் வைத்து குடித்துவர ஆசன வாயில் ஏற்படும் எரிச்சல் குணமாகும்.

அல்சீமர் நோய்:

அல்சீமர் நோயை எவ்வாறு அறிந்து கொள்வது?

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21-ம் தேதி, உலக அல்சீமர் நோய் தினமாக கொண்டாடப்படுகிறது.

அல்சீமர் நோயின் பாதிப்புகளில் பல விஷயங்கள் ஒளிந்திருக்கின்றன. அல்சீமர் நோயினை கண்டுபிடித்து 103 ஆண்டுகள் ஆயினும் இந்நோய் ஏற்படுவதற்குரிய காரணம் என்ன? பரிசோதனைகள் மற்றும் குணப்படுத்துவதற்க்குண்டான, மிக சரியான சிகிச்சை என்ன என்பதையெல்லாம் முழுக்க முழுக்க அறிந்து கொள்ள இயலவில்லை.

அல்சீமர் நோய் என்றால் என்ன?

மனிதனின் மூளை இயக்கங்கள் சார்ந்த பகுதிகளில் நினைவுத்திறன் அளவுகளினைப் பாதிக்கும் மனரீதியான ஒரு நோய் வகையாகும். அல்சீமர் குணப்படுத்த இயலாத ஒரு நோய் என்று இன்று வரை கருதப்படுகிறது. அல்சிமர் நோயின் தாக்கம் சிறிது, சிறிதாக தான் பெருகுகிறது என்றாலும், மனிதனின் சிந்திக்கும் செயல், முடிவெடுக்கும் திறன் மாறும். இறுதியாக தனது தினசரி வாழக்கையில் சுயமாக இயங்கக்கூடிய நிலையையே செய்ய இயலாமல் நிரந்தரமான பாதிப்பை அடைகின்றான்.

அல்சீமர் நோய் பெரும்பாலான மனிதர்களிடம் 60 வயதிற்கு மேல் தான் தெரிய வருகிறது. ஆனால் இந்த நோயின் தாக்கம், மேலே கூறியுள்ள அறிகுறிகள் கவனிப்பதற்கு 10-&15 வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிடுகிறது. ஆரம்பத்தில் மேற்குறிய அறிகுறிகள் நோயின் தீவிரத்தன்மையை பொறுத்து யாருக்கும் தெரிந்திருக்காது. சாதாரண செயலாகவே எடுத்துக்கொள்வார்கள். மூளையின் மற்ற பாகங்களுக்கு சிறுது சிறுதாக நோயின் தாக்கம் பரவும் பொழுது, மூளையினால் செய்யக்கூடிய செயல்களில் தடங்கள் ஏற்படுகின்றது. மூளையில் உள்ள நியூட்ரான் திசுக்கள் அழிகிறது. நியூட்ரான் திசுக்கள் ஏன் அழிகிறது? எவ்வாறு அழிகிறது? என்பதற்கு மருத்துவ உலகில் இன்று வரை காரணம் அறிய இயலவில்லை.

அல்சீமர் என்ற பெயர் எவ்வாறு வந்தது?

ஜெர்மன் நாட்டு மனநல மருத்துவர் மற்றும் நரம்பியல் நிபுணரான அலோயிஸ் அல்சீமர் என்பவர் நரம்பு திசுக்கள் சார்ந்த ஆய்வினை 1906-ம் ஆண்டு மேற்கொண்டு கண்டுபிடித்ததினால் அவருடைய பெயரையே வைத்து ‘அல்சீமர் நோய்’ என்று பெயரிடப்பட்டது. ஒரு பெண்ணின் மூளையில் நினைவுத்திறன் மற்றும் அதன் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களால் என்ன நிகழ்கிறது என்பதை அவள் மரணத்திற்குப் பின்பு எவ்வாறு அமைகிறது, அமைந்தது என்று ஆராய்ச்சி செய்தார். மேற்குறிய பெண்ணின் மூளையானது சிக்கல் உள்ளதாகவும், வில்லை வடிவமைப்பாகவும் புரத துண்டுகளில் இருந்து அமைவதாக  அறிந்தார். 103 வருடங்களுக்கு பின்பு பொதுவாக கடந்துவிட்டாலும் மருத்துவ உலகில் மொத்தத்தின் மூளை சார்ந்த கட்டமைப்புக்கு பெரிய சவாலாகவே உள்ளது. அதுமட்டுமில்லாமல் இதற்கு குணப்படுத்த வழிகளுமில்லை.

என்ன காரணம்?     

இக்கேள்விக்குரிய பதில் சுருக்கமாக கூறினால் தெரியவில்லை என்பதே! ஆனால் தொற்றுநோய் தகவமைப்பின் படி ஒரு சில கற்பனை கோடுகளாக இருக்கலாம்.

1. தனிப்பட்டவர்களின் மனநிலை அழுத்தம் அல்சீமர் நோய்க்கு காரணமாக உள்ளது.

2. கொழுப்பு குறைவதற்காக உட்கொள்ளப்படும் ஸ்டேட்னிஸ் என்ற மருந்தினை நோயாளிகள் சாப்பிடும் பொழுது அல்சீமர் நோய் அதிகரிப்பது தெரியவந்துள்ளது. ஐயோவா மாநில பல்கலைக் கழக பேராசியர் யோன்-கியூன் சின் அவர்கள் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியானது, முழுமையான ஒரு தகவலாக மேற்கூறிய விஷயத்தை கூறியிருக்கிறது.

3. அல்சீமர் நோயின் காரணங்களாக, மரபணு, சுற்றுச்சூழல் மற்றும் பழக்கவழக்க முறை மாற்றங்களும் காரணமாக அமைந்துள்ளது. குரோமோசோம் 19-ல் உள்ள ஒரு மரபணுவானது பிற்காலத்தில் தொடர்புள்ள அல்சீமர் நோயிற்கு இணைந்து செல்கிறது.

4. அல்சீமருக்குரிய மற்ற காரணங்கள் உயர்ந்த அழுத்தம், இதயதமனி இரத்தக்குழாய் நோய், நீரிழிவு மற்றும் இரத்த கொதிப்பு (கொலஸ்டிரால்) அதிகரிப்பாகும்.

5. அல்சீமர் நோயின் தாக்கம் பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக காணப்படுகின்றது என்று ஒரு சில ஆராய்ச்சிகள் கூறுகிறது.

6. ஒரு சில காரணங்களில்  முன்னர் ஏற்பட்ட தலைகாயங்கள் காரணமாக அல்சீமர் நோய் மிகுந்த பாதிப்பை தருகிறது என்று ஒரு சில ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.

7. பெண்களின் மாதவிடாய் மொத்தத்தில் நிற்கும் மெனோபாஸ் நேரத்தில் ஈஸ்ட்ரோஜன் தெரபியானது அல்சீமர் நோயை தூண்டுகிறது என்று முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதனால், இவையெல்லாம் அனுமதிக்கப்பட்ட ஒன்றே. தயக்கமில்லாமல் கூறக்கூடிய உறுதியான தகவல் இல்லை. எனவே அல்சீமர் நோயை எற்றுக்கொண்டு, அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்ந்தேடுப்பதற்கு சிரமம் தான். சில மருத்துவ வசதிகள் இருந்தும் அல்சீமர் நோயை குணப்படுத்த முடியாத நிலைதான் உள்ளது. அல்சீமர் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவான பரிந்துரைகளாக கூறப்படுவது தினசரி தவறாமல் உடற்பயிற்சி, சரியான உணவு, மன அமைதி, சுற்றுப்புறச்சூழல், சுகாதாரம் மற்றும் உற்சாகம் தரும் தகவல் தொடர்பு போன்றவைகளே!

நடைமுறையில் மேற்கூறிய செயல்பாடுகள் அவர்களை உற்சாகப்படுத்துகிறது. மேற்கூறிய பரிந்துரைகள் எல்லாமுமே, தனிநபரின் முழு உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்திற்கு சிறந்த ஒன்றாகும். இதுதான் அல்சீமர் நோய்க்கு மிகச்சிறந்தது என்று கூறுவதற்கு ஒன்றுமே இல்லை.


Spread the love
error: Content is protected !!