மனிதர்கள் மாறுபட்ட குணாதிசயங்களுக்கு காரணம் என்ன?
அவர்கள் உண்ணும் உணவும் ஒரு காரணம் என்கிறது ஆயுர்வேதம். குணங்கள் மாறுபடுவது மட்டுமல்ல, பல நோய்கள் உண்டாவதும் உணவுகளால் தான். உணவு ஐம்புலன்களையும் இயக்குகிறது. உணவு “ஓஜஸ்” (வீரியம், சக்தி) யை தருகிறது. உணவு சரிவர ஜீரணமாக “அக்னி” தேவை. பகல் 12 மணியளவில் சூரியன் உச்சத்தில் இருக்கும். இந்த நேரம் ஜீரணத்திற்கு ஏற்றது. எனவே தான் ஆயுர்வேதம் காலை உணவை விட மதிய உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. உணவுடன் குளிர்ந்த நீர் / ஐஸ்வாட்டர் குடிக்கக் கூடாது. அதுவும் குறிப்பாக கபம் மற்றும் வாத பிரகிருதிகளுக்கு ஐஸ்வாட்டர் ஒத்துக்கொள்ளாது.
உணவின் குணங்களை ஆயுர்வேதம் 3 விதமாக சொல்கிறது.
இவை
சாத்வீக உணவு
ரஜோகுண உணவு
தமோகுண உணவு
மனிதர்களும் மேற்சொன்ன மூன்று குணங்களாக பிரிக்கப்படுகின்றனர்.
சாத்வீக உணவு
பெயருக்கேற்ப சுவைகள் சமநிலையிலிருந்து மனதை ஈர்க்கும் வாசமுடன் நெய்ப்புடன் உள்ள உணவுகள் சாத்வீக உணவுகளாகும். தூய்மையான உணவு. உப்பு, காரம், புளிப்பு குறைந்தவை (அ) சமநிலையில் இருப்பவை. இவை பழங்கள், காய்கறிகள், பழரசங்கள், தானியங்கள், முளை கட்டிய தானியங்கள், கொட்டைகள், உலர்ந்த பழங்கள், தேன், வெல்லம், பசுவின் பால், வெண்ணை, மூலிகை ‘டீ‘ (கஷாயம்), நெய், தாவிர எண்ணெய்கள், சீஸ், தயிர்.
காய்கறிகளில் பூண்டு, வெங்காயம் சாத்வீக உணவுகளாக கருதப்படுவதில்லை. அதே போல சாத்வீக சமையலில் மிளகாய், கருமிளகு சேர்ப்பது தவிர்க்கப்படுகிறது. மஞ்சள், இஞ்சி, லவங்கப்பட்டை, தனியா, சோம்பு, ஏலக்காய் முதலிய வாசனை திரவியங்கள் சமையலில் உபயோகிக்கப்படுகின்றனர்.
பச்சை காய்கறிகளை உண்பதை சாத்வீக உணவாக ஆயுர்வேதம் கருதுவதில்லை. சமைக்காத உணவில் கிருமிகள் இருக்கும். தவிர ஜீரண சக்தி பாதிக்கப்படும் என்பது ஆயுர்வேத கருத்து. மது, டீ, காப்பி, புகையிலை, அசைவ உணவுகள் தவிர்க்கப்படுகின்றன.
உடலுக்கு பலத்தையும், மனதிற்கு அமைதியையும் தருகின்றன.
யோகா பயில்பவருக்கு சாத்வீக உணவே ஏற்றது.
மனது தெளிவாகும்.
இயற்கைக்கு ஏற்ற உணவு.
உணவின் குணங்கள்
சாத்வீக உணவில் சமைத்து வைத்து மீந்த பழைய உணவுகள் சாப்பிடும் பழக்கம் இருப்பதில்லை. லகுவான உணவு. உப்பும், உணவு வாசனை திரவியங்களும் மிதமாகவே பயன்படுத்தப்படுகின்றன.
உணவு சமைக்கும் போதும் சரி, உண்ணும் போதும் சரி, கோபதாபங்கள், மனதில் இருக்கக் கூடாது. அளவுக்கு மீறியும் உண்பது சாத்வீகமாகாது. உண்ணும் உணவும் சுவையாக இருக்க வேண்டும். வெறும் பாலை காய்ச்சி குடிப்பதை விட, அதனுடன் ஏலக்காய் (அ) மஞ்சள் போன்றவற்றை போட்டு காய்ச்சி, குடிப்பது நல்லது. வாய்வை உண்டாக்கும் உருளைக்கிழங்கு, காளான்கள் போன்றவற்றை தவிர்க்கவும்.
உபயோகிக்க தகுந்த சாத்வீக மூலிகைகள் – அஸ்வகந்தா, சதவாரி, புனர்நவா, சங்கு புஷ்பி, குங்குமப் பூ, துளசி, ரோஜா, ஐடமான்சி, ஏலக்காய் முதலியன. சாத்வீக உணவை உண்பவன் நற்குணங்கள் நிறைந்தவனகாக இருப்பான்.
ரஜோகுண உணவுகள்
ரஜோ குணம் சக்தியும் செயல்பாடும் கொண்டது. ரஜோ குண உணவுகள் ஜீரணிக்க கனமானவை! உடலுழைப்பு அதிகம் உள்ளோருக்கு உகந்த உணவு. புதிதாக, தரமான பொருட்களால் தயாரிக்கப்படுவதால் ஊட்டச்சத்து நிறைந்தது. சாத்வீக உணவை விட அதிக ‘மசாலா‘ பொருட்கள் சேர்ந்தது. ரஜோ குண உணவுகள் இறைச்சி, மீன், முட்டைகள், தானியங்கள், பருப்புகள், மிளகாய், வெங்காயம், பூண்டு இதர காய்கறிகள், பனீர், ஐஸ்கிரீம், ஊறுகாய், உப்பு, சாக்லேட், காப்பி, டீ முதலியன.
இந்த மாதிரி உணவுகள் மன – உடல் நிலையை சமச்சீராக வைக்காமல் போகலாம். ஆனால் ரஜோ உணவுகள் மனதையும், உடலையும் சுறுசுறுப்பாக இயங்க உதவும். பாலியல் உணர்வுகளை அதிகப்படுத்தும். அதே சமயம் அதிகம் உண்ணத்தூண்டும். அதனால் ஜீரணக்கோளாறுகள் ஏற்படலாம். ரஜோ குண உணவுகள் உடல சூட்டை அதிகரிக்கும்.
தமோகுண உணவுகள்
வடமொழியில் ‘தமஸ்‘ என்றால் இருட்டு. இருண்ட மனதை கொண்ட தமோ குணமுடைய பிரகிருதிகள் மந்தமானவர்கள், சோம்பல் நிறைந்தவர், புலன்களை கட்டுப்படுத்த இயலாதவர், சுய நலம் மிகுந்தவர். சாராயம், மாட்டு மாமிசம், கோழி இறைச்சி, பன்றி மாமிசம், மீன், காளான்கள், டீ, காப்பி, மைதாவால் செய்யப்பட்ட உணவுகள், புகையிலை, பிட்சா, ‘டின்‘ உணவுகள், “பாட்டில் பானங்கள்”, முதலியன.
தமோ குணத்தை அதிகமாக்கும் உணவுகள் உடலுக்கும், உள்ளத்திற்கும் ஊறு விளைவிக்குபவை. தமோ குணமுடையவர்கள் புலன்களை கட்டுப்படுத்த இயலாதவர்கள். மனிதனை மிருகமாக மாற்றும் தமோகுண உணவுகளை தவிர்க்க வேண்டும்.
கீதை சொல்லும் மூன்று குணங்கள்
சாத்வீகம், ரஜோகுணம், தமோகுணங்கள் பிரகிருதியை சார்ந்தவை. சரீரத்தையும், ஆத்மாவையும் இணைப்பவை, இவற்றில் சாத்வீகம் ஆரோக்கியமானது, தூய்மையானது, அறிவையும், மகிழ்ச்சியையும், நாடும் குணமுடையது.
ரஜோ குணம் ‘ஆசை‘ அதிகமுள்ள குணாதிசயம். செயல்பாடுகளுடன் இணைந்து பணிகளை செய்வதில் ஆர்வமுடையது.
தமோகுணம் அறியாமையால் உண்டானது. கவனக்குறைவு, மந்த புத்தி, சோம்பேறித்தனம் நிறைந்தது. புலன் ஆசைகளை கட்டுப்படுத்த இயலாதது.
சாத்வீகத்திலிருந்து ஞானமும், ரஜோகுணத்திலிருந்து பேராசையும், தமோ குணத்திலிருந்து அக்கறையின்மை மற்றும் அறியாமை உண்டாகின்றன. சாத்வீக குணமுடையோர் மேல் நிலையை அடைகின்றனர். ரஜோகுணத்தவர் நடுநிலையையும், தமோகுணத்தவர் கீழ் நிலையையும் அடைகின்றனர்.
உணவும் 3 பிரிவுகளுடையது. ஆயுள், அறிவு, வலிமை, ஆனந்தம் மற்றும் மகிழ்ச்சி முதலியவற்றை விருத்தி செய்யும் இனிப்பும், நெய்யும் கூடிய சுவையான உணவுகள் சாத்வீக குணமுடையோர்க்கு பிடித்தமானவை.
கசப்பு, காரம், புளிப்பு, உப்பு நிறைந்த உணவுகளை ரஜோ குணமுள்ளவர்கள் விரும்புகின்றனர்.
பழைய, சுவையற்ற, அழுகிய, கெட்டுப்போன, தூய்மையற்ற உணவுகளை தமோகுணமுள்ளவர்கள் விரும்புவார்கள்.
உணவு நலம் ஆகஸ்ட் 2010
உணவின், குணங்கள், ஆயுர்வேதம், நோய்கள், உணவுகள், ஓஜஸ், வீரியம், சக்தி,
சாத்வீக உணவு, ரஜோகுண உணவு, தமோகுண உணவு, மனிதர்கள்,
தூய்மையான உணவு, உப்பு, காரம், புளிப்பு, சமையல், ஜீரண சக்தி, உடல்,
பாலியல் உணர்வுகள், ஜீரணக்கோளாறுகள், கீதை, குணங்கள், சரீரம், ஆத்மா,