சருமம் காக்கும் புங்கம்

Spread the love

ஆக்சிஜனை அதிக அளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்க மரம் தான்.எந்த பகுதியிலும், எந்த வித சீதோஷண நிலையிலும் வளரக் கூடியது.வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி சீரான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றவை.ஆமணக்கு விதை மூலம், எண்ணெய் (பயோ டீசல்) எடுப்பது போல புங்கை மர விதைகளிலிருந்து பயோ டீசல் தயாரிக்க இயலும்.புங்க மரத்தின் இலை, பூ, வேர், விதை, எண்ணெய் அனைத்துமே மருத்துவ பயன்கள் கொண்டவை.

டெர்ரிஸ் என்றால் தோலால் மூடப்பட்டது என கிரேக்க மொழியில் கூறப்படுகிறது.இண்டிகா என்றால் இந்தியாவைச் சேர்ந்தது.முந்தைய பெயரான பொங்கேமியா என்பது புங்கம் என்பதிலிருந்து உருவாகியதாகும்.

புங்க மரம் எங்கு காணப்படுகிறது?

புங்க மரத்தின் தாயகம் இந்தியா தான்.குறிப்பாக மேற்கு மலைத் தொடர்ச்சி மலைப் பகுதிகளே இதன் தாயகமாகும்.இங்கிருந்து மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, புளோரிடா, ஹவாய் போன்ற இடங்களுக்கு பரவியுள்ளன.

மலைச் சரிவுகளில் நீர்ச் செழிப்பின் காரணமாக ஓங்கி உயர்ந்து வளரும் மரமாக உள்ளது.ஆனால், இராஜஸ்தான் பாலைவனப் பகுதிகளில் குறுமரமாகக் காணப்படுகிறது.கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரப் பகுதி வரை காணப்படுகிறது.

சாதாரணமாக 15 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது.நடு மரத்தில் பக்கக் கிளைகள் தோன்றி, படர்ந்து விரிந்து காணப்படும்.நடு மரத்தில் கிளைகள் உருவாகிய இடங்களில் முடிச்சுகளாக வளர்ச்சியிருக்கும்.கோடை காலத்தின் ஆரம்பத்தில் இலை உதிர்க்கும்.மார்ச்-&ஏப்ரலில் பூத்துக் குலுங்கும்.அதனுடன் பளபளக்கும் தாமிர நிறத் தளிர்களை உருவாக்கும்.

கோடையின் கடுமை துவங்கிய நிலையில் பூக்களைச் சொரிந்து, தளிர்கள் எல்லாம் கரும்பச்சை நிற இலைகளாக மாறி நல்ல நிழல் தரும்.

பூக்களை உதிர்த்து, மரத்தினடியில் ஒரு மலர்படுக்கையை ஏற்படுத்தி, அதன் மேல் நடக்கும் மக்களின் களைத்த பாதத்திற்கு இதம் தரும்.புங்க இலைகள் 4.5 முதல் 7 செ.மி.நீளமும் 2.5 செ.மி.முதல் 5 செ.மி.அகலமும் கொண்டு, முட்டை வடிவில் கூரிய முனையுடன் இருக்கும். பூக்கள் ஒரு செ.மி.அளவுடையவை.ஊதா நிறமுடையவை.

மருத்துவப் பயன்கள்

குழந்தைகளில் பல நோய்களுக்கு இலை சிறந்த வீட்டு மருந்தாகப் பயன்படுகிறது.இலைச் சாறு வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறுகள், இருமல், சளி, பேதி, பசியின்மை போன்றவற்றைப் போக்கும்.புங்க இலைச் சாறு சரும நோய்களையும் தீர்க்கக் கூடியது.மூல உபத்திரத்திற்கு மருந்தாகும்.புங்க இலை மற்றும் ஈர்க்குடன் வேறு பல மருந்துச் சரக்குகளையும் சேர்த்து குடி நீர் செய்து, மாந்தத்திற்கு அருந்த கொடுத்து வர குணம் கிடைக்கும்.புங்க மரப்பட்டை துவர்ப்புத் திறன் உடையது.இரத்தம் கசியும் மூல நோய்க்கு சிறந்தது. மருந்து.பட்டையிலிருந்து ஆல்ஹகால் மூலம் கரைத்தெடுக்கப்படும் சத்து, பல பாக்டீரியாக் கிருமிகளை கட்டுப்படுத்துகிறது.

புங்க மரத்தின் பால் புண்களை, வாயுவை நீக்கும் தன்மை கொண்டது.உடலைப் பொன் போன்ற நிறத்திற்கு மாற்றும்.புங்கம் பூக்கள் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.புங்கம் பூ எடுத்து நெய் விட்டு வதக்கி தூள் செய்து கொண்டு தினமும் ஒரு ஸ்பூன் அளவு உட்கொண்டு வர மேக நோய்கள் வராது.மேலும் மேக நோயின் பாதிப்புகள் முற்றிலும் நீங்கும்.இதைத் தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வருவது நல்லது.மருந்து உட்கொண்டு வரும் காலங்களில் உணவில் புளிப்பு சேர்க்கக் கூடாது.புகை பிடித்தல் கூடாது.வாயுவை அதிகரிக்கும் உணவுகள் உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.நீரிழிவினால் ஏற்படும் தாகத்தைத் தீர்க்க, பூக்களைக் குடி நீர் செய்து அருந்தலாம். புங்கம் பூ, புளியம் பூ, வசம்பு, சின்ன வெங்காயம், சீரகம், வெட்பாலை அரிசி, நன்னாரி இவை ஒவ்வொன்றிலும் 35 கிராம் அளவு எடுத்து முக்கால் லிட்டர் பாலில் கொதிக்க வைத்து 1 லிட்டர் புங்க எண்ணெய் விட்டு காய்ச்சி கரப்பான், நாள்பட்ட ஆறாத புண்கள் மீது தடவி வர அவை எளிதில் குணமாகும். புங்க இலையை வதக்கி வீக்கங்களுக்கு கட்டி வர வீக்கம் குறையும்.புங்க விதை கால் புண், கிரந்தி, கரப்பான், காது நோய், கண் நோய் ஆகியவற்றை நீக்கும் ஆற்றல் கொண்டது, ஆனால், புங்க விதையானது மலத்தைக் கட்டும்.

காட்டுப் புங்க விதையை வேறு சில மருந்துப் பொருட்களுடன் சேர்த்து குழித்தைலம் தயாரித்து கடுகு அளவு உள்ளுக்கும், மேலுக்கும் பூசி வர நரை, மூப்பு நீங்கி உடல் வலிமை பெறும். பாண்டு, மேகம் முதலியவை நீங்கும்.விதைக்கு உரமாக்கி, வெப்பமகற்றிப் பண்புகள் உள்ளன.மார்புச் சளி, குத்திருமலுக்கு புங்க விதை பயன்படுகிறது.சரும நோய்களுக்கும், ஆறாத புண்களுக்கும், கீழ்வாதத்திற்கும் விதையை அரைத்து பற்று போடலாம். புங்க மர வேர்களிலிருந்து சாறு எடுத்தும் புண்களுக்குத் தடவி வரலாம் மற்றும் ஆறாத புண்கள், பிளவை, மேகப் புண்கள் ஆகியவற்றைக் குணப்படுத்த தேங்காய்ப் பாலுடன் உபயோகிக்கலாம். கஞ்சியுடன் வேரை இடித்துக் கலந்து, ஒதம் உள்ள பகுதிகளில் தடவினால் குணம் கிடைக்கும்.வேர்ப் பட்டையை புசித்தால் இருமல், ஈளை முதலியன குணமடையும்.புங்க மர விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய் வாத வியாதிகளுக்கும், மூட்டு வலிக்கும் இந்திய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.தீக்காயம், நாள்பட்ட ஆறாத புண்கள், வடுக்கள், தழும்புகள், கரப்பான், சொறி, சிரங்கு இவற்றிற்கு புங்க எண்ணெயை இலேசாக சூடுபடுத்தி அவற்றின் மீது தடவி வர குணம் பெறலாம்.புங்க எண்ணெய் சருமத்தை பாதுகாப்பதுடன், பளபளக்கச் செய்யும்.தினமும் உடலில் புங்க எண்ணெயைத் தடவி வந்தால் சரும நோய்கள் எதுவும் தொற்றாது. புங்க எண்ணெய், வேப்பம் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், புன்னை எண்ணெய் இவைகளை வகைக்கு 700 மி.லி, எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், கிராம்பு, சதகுப்பை, கடுகு ரோகி, சித்திர மூலம் போன்றவற்றில் வகைக்கு17 கிராம் அளவு எடுத்து இவை அனைத்தையும் காடி நீர் விட்டு அரைத்து மேற்கூறிய எண்ணெய்களுடன் கலந்து மேலும் சிறிது காடி நீர் சேர்த்து அடுப்பில் வைத்து சூடுபடுத்தி மெழுகுப் பதம் வந்தவுடன் இறக்கி ஆற வைத்துக் கொள்ளவும். மேற்கூறிய எண்ணெய்க் கலவையை சருமத்தில் தடவி வந்தால் மேக நோய், சூலை நோய், இசிவு, சூதக வலி போன்ற நோய்கள் தீரும்.

புங்க வேரின் தோலை நீக்கி, மெல்லியதாக சீவி சாறு பிழிந்து அதற்குச் சமமான அளவு தேங்காய்ப் பால் சேர்த்துக் காய்ச்சி வைத்துக் கொண்டு, ஒரு மெல்லிய துணியில் நனைத்துக் கொண்டு பிளவை, ஆறாத புண்கள், பால்வினை நோய்களால் ஏற்பட்ட புண்கள் மீது தடவி வர புண்கள் எளிதில் ஆறும். புங்கம் இலை, புளி இலை, நொச்சி இலை, மாவிலை, வேப்பிலை, பொடுதலை, ஊத்தாமணி, கறிவேப்பிலை, நாரத்தை இலை, சங்குச் செடி இலை, அவுரி இலை, பொன்னாவாரை இலை இவைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அதில் கடுகு ரோகிணி, இந்துப்பு இவற்றை துணியில் சிறு பொட்டலங்கலாகக் கட்டி கொதிக்க வைத்த நீரில் போட்டு நன்றாக சாறு இறங்கிய உடன் வடிகட்டி மாந்த நோய்களுக்குக் கொடுத்து வந்தால் மாந்தம் சார்ந்த அனைத்து நோய்களும் குணமாகும்.

புங்க மர வளர்ப்பு

புங்க மரம் தமிழக சூழ்நிலைக்கு மிகவும் ஏற்ற மரமாகும்.நல்ல வடிகால் திறனுள்ள படுகை மணலில் மிகச் செழிப்பாக வளரும்.செம்மண், கரிசல் மண்ணை ஏற்றுக் கொள்ளும்.ஓரளவு உவரையும் தாங்கிடும்.புங்க மரத்தை நேரிடையாகவும் விதைக்கலாம்.நாற்றுத் தயாரித்து நடலாம்.நாற்றுக் குச்சிகளும் தயாரித்து நடலாம்.கிளைப் போத்துக்களை நட்டால் துளிர்த்து விடும்.விதைப்பதற்கு முன் 24 மணி நேரம் விதையை நீரில் ஊற வைத்து விதைத்தால் முளைப்பு வேகமாக இருக்கும்.நாற்றங்காலில் விதைக்காமல் பாலித்தீன் பைகளில் விதைத்தும் நாற்றுப் பெறலாம்.கன்றுகள் 45 முதல் 60 செ.மி.உயரம் வளர்ந்ததும் எடுத்து நடலாம்.நாற்றுக் குச்சிகள் தயாரிக்க, கன்றுகள் நாற்றங்காலில் மேலும் வளர வேண்டும்.நாற்றின் தண்டு நில மட்டத்தில் 1.25 முதல் 1.5 செ.மி.அளவிற்குப் பருத்தும்.வேர்ப் பகுதி 22 செ.மி.அளவிலும் தண்டுப் பகுதி 5 செ.மி.அளவிலும் வைத்துக் கொண்டு குச்சிகளை தயாரிக்க வேண்டும்.


Spread the love