நாடிகள்

Spread the love

பிராண சக்தி எவ்வாறு நம் உடலில் பரவுகிறது?

நம் உடலில் ஏராளமான நாடிகள் (72,000) உள்ளதாக சொல்லப்படுகின்றது. இவற்றில் முக்கியமானவை 10 நாடிகள். இவற்றில் மிக முக்கியமானவை 3 நாடிகள். இவை

  1. இடை நாடிகள் – முதுகுத் தண்டின் இடது பாகத்தில் உள்ளது. இந்த இடை நாடி சந்திர நாடி என்று சொல்லப்படுகின்றது. நம் உடலுக்கு ஒய்வை தரும். ‘பாராசிம்பதெடிக் நர்வுஸ்’ (Parasymphathetic Nerves) களை இயக்குவது சந்திர நாடி தான்.
  • பிங்கலை நாடி – இது முகுதுத் தண்டின் வலது பக்கத்தில் அமைந்திருக்கின்றது. இதை சூரிய நாடி என்பார்கள். நம் உடலை  சுறுசுறுப்பாக வைக்க காரணமான ‘சிம்பதெடிக் நர்வுஸ்’ தூண்டப்படுவது சூரிய நாடியால் தான்.
  • சூட்சும நாடி – முதுகுத் தண்டின் மத்தியில் அமைந்திருக்கின்றது. சாதாரண மனிதர்களுக்கு தெரியாத நாடி. பிராணாயாமத்தின் போது மூச்சை இழுப்பதும், விடுவதும் இடை பிங்கலை நாடிகளால் இயக்கப்படுகின்றது. இந்த இரண்டு நாடிகளின் செயல்களுக்கு நடுவிலே, சூட்சும நாடி இயங்குகின்றது. அதாவது மூச்சை உள்ளிருத்தும் போது  சூட்சும நாடி இயங்க தொடங்குகின்றது. இந்த சக்தியை சில யோகிகள் குண்டலினி சக்தி என்கின்றனர்.

பந்தங்கள்

பந்தங்கள் என்றால் முடிச்சுகள் – ஒன்றையொன்று சேர்ப்பவை. பந்தங்கள் பிராணயாமத்தின் முழுப் பலனை பெற உதவுகின்றன. பந்தங்கள் மூன்று வகைப்படும். இவை பிராணாயாம பயிற்சிகள்.

  1. உத்தியான பந்தம் – உத்தியான என்றால் பறப்பது என்று பொருள். இந்த பந்தம் டையாஃபர்ம் (Diaphragam) இயக்கத்திற்கு உதவுகிறது.
  • ஜாலாந்தர பந்தம் – ஜாலா என்றால் வலை. சிலந்தி வலை என்று சொல்லலாம். இது பிராணாயாமத்துக்கு செய்யப்படும் பந்தம். இதில் முகத்தாடை, மார்பில் அமிழ்ந்து இருக்க வேண்டும்.
  • மூல பந்தம் – மூலம் என்றால் ஆரம்பம் அல்லது அடிவேர் என்று பொருள். இது ஆசன வாயுக்கும், விதைப்பைக்கும் நடுவில் இருக்கிறது. ஆசன வாயை சுருக்கி விரித்து செய்வது மூல பந்த பயிற்சியாகும்.

சக்கரங்கள்

இடை, பிங்கலை, சூஷ்ம மூன்று நாடிகளும் சேரும் சந்திப்புகள் சக்கரங்கள் எனப்படுகின்றன. பிரசித்த பெற்ற யோகிகளும், ரிஷிகளும், சக்கரங்களின் மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் மற்றும் தவம் செய்து வந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. உடலில் ஏழு முக்கியமான சக்கரங்கள் உள்ளன.

1.         மூலாதாரம் – முதுகுத் தண்டின் அடியில் இருப்பது.

2.         சுவாதிஸ்தைய – இந்த சக்தி தொப்புளுக்கும், ஜனன   உறுப்புகளுக்கும் நடுவில் உள்ளது.

3.         மணி பூரகம் – தொப்புளில் இருப்பது.

4.         ஆனந்த சக்கரம் – இதய பிரதேசத்தில் இருப்பது.

5.         விசுதா – தொண்டையின் இருப்பிடம்.

6.         அஸ்னா – இரு கண்ணிமைகளுக்கு நடுவில் இருப்பது.

7.         சகஸ்ரார – சிரசில் அதாவது மூளையில் அமைந்துள்ளது.

பிராணாயாமத்தின் நோக்கங்களும், நன்மைகளும்

பிராணாயாமத்தின் முக்கிய நோக்கம் உடலின் ஜீவ சக்தியை கட்டுப்படுத்துவது.

தொடர்ந்து செய்து வந்தால் சுவாசம் நிலைபெறும். சீராக இயங்கும். இந்த சக்தி உடல் மற்றும் மனதிற்கு ஒய்வைத் தரும்.

சுவாச இயக்கம் மேம்படும். மற்றும் சுவாச இயக்கத்தின் கோளாறுகள் நீங்கும்.

ஜீரண சக்தி மேம்படும். ஜீரண மண்டலத்திலுள்ள வால்வுகள் டையாஃபர்ம், அடிவயிறு தசைகள் இவையெல்லாம் சரிவர இயங்கும்.

உடலின் ரத்த சுழற்சி சீராகும் இதனால் நரம்புகள் வலுப்படும். மூளை, முதுகுத்தண்டு, நரம்புகளின் இயக்கம் இவையெல்லாம் சீராகும்.

உடலுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கும். இதனால் மூளை மட்டும் உடலுறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்கும்.

மனதை ஒருநிலைப்படுத்துவது சுலபமாகும். ஆயுள் பெருகும்.

ஒட்டுமொத்தமாக உடலின் எல்லா உறுப்புகளும் சரிவர இயங்கும். இதனால் யோகா செய்பவரின் உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.

பிராணாயாமம் செய்வதற்கு முன்பு

நீங்கள் முதன் முறையாக பிராணயாமம் செய்வதாக இருந்தால் உங்கள் உணவில் கட்டுப்பாடு வேண்டும். எளிமையான, சுலபமாக ஜீரணிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆரம்ப காலங்களில் காபி, டீ இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிறிது அனுபவம் ஆன பின் நீங்கள் எதைவேண்டுமானாலும் உட்கொள்ளலாம். ஒரே ஒரு நிபந்தனை உணவு சாத்திவீகமாக இருக்க வேண்டும். பசும்பால், பசுந்நெய், கோதுமை, சாறு செறிந்த பழங்கள், பச்சைக் காய்கறிகள், தானியங்கள், பருப்புகள் இவற்றை அதிகமாக உண்ணலாம். சூடான மசாலா நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்.

பிராணாயாமத்தை தொடர்ச்சியாக செய்து கொண்டு வரவேண்டும். விட்டு விட்டு செய்யக்கூடாது. ஆரம்பத்தில் நேரத்தை குறைத்து போகப் போக நேரத்தை அதிகரிக்கவும்.

பிராணாயாமம் செய்யும் முன் வயிறு காலியாக இருக்க வேண்டும்.

செய்யும் இடம் சுத்தமாக, சுகாதாரமாக, காற்றோட்டமாக இருக்க வேண்டும்.

காக்கா வலிப்பு நோய் உள்ளவர்கள் பிராணாயாமம் செய்யும் முன் டாக்டரிடம் அனுமதி பெற்று செய்ய வேண்டும்.

காலை நேரம் பிராணாயாமம் செய்ய ஏற்றது. இது முடியாவிட்டால் சாயங்காலம் செய்யலாம்.

பிராணாயாமத்தை பற்றி நன்கு தெரிந்து கொண்ட பின்பே பிராணாயாமத்தை ஆரம்பிக்க வேண்டும்.

குருவிடம் கற்றுக் கொள்ளாமல் பிராணாயாமத்தை செய்யக் கூடாது.

பிராணாயாமம் செய்யும் முன் நாடிசுத்தி செய்ய வேண்டும் இதற்கு குரு தேவை.

பிராணாயாமத்தில் மூன்று பகுதிகள் உள்ளன. அவை

1.         மூச்சை உள்ளே இழுப்பது (பூரகம்)

2.         மூச்சை அடக்குதல் (கும்பகம்)

3.         மூச்சை வெளிவிடுதல் (ரேசகம்)

பூரகம், ரேசகம் நடுவில் மூச்சை அடக்கி ஒரு நிலையில் வைப்பது முக்கியமானது. மூச்சை உள்ளே இழுக்காமலும், வெளியே விடாமலும் ஒரு நிலையில் நிற்பது சுவாசத் தேவையை குறைக்கின்றது. வளர்சிதை மாற்றம் சீராகிறது. ஒரு வகையில் மூச்சை அடக்கிக் கொள்வது உடலுக்கு ஒய்வை தருகின்றது.

மேற்சொன்ன மூன்று பயிற்சிகளும், ஒவ்வொன்றும் ஒரே அளவு நேரத்தில் செய்ய வேண்டும். மூன்று நிலைகளும் சமமாக இருக்க வேண்டும். யோகா சொல்வது என்னவென்றால் வலது நாசியின் மூலம் மூச்சை உள்ளிழுப்பது சூட்டை உண்டாக்கும். அதே போல இடது நாசியால் மூச்சை இழுப்பது குளிர்வை உண்டாக்கும்.

பலருக்கு ஏற்படும் சந்தேகம் எவ்வளவு நேரம் மூச்சை உள்ளிழுக்க வேண்டும்? எவ்வளவு நேரம் அடக்கிக் கொள்ள வேண்டும். எவ்வளவு நேரம் வெளிவிட வேண்டும். இதை தெரிந்து கொள்ள குருவை நாட வேண்டும். தவறுதலாக செய்தால் பலன் கிடைக்காமல் போவது மட்டுமல்ல; வேறு கோளாறுகளும் உண்டாகலாம்.

நாடிசுத்தி

கும்பக பயிற்சியில்லாமல் பூரகவும், ரேசகமும் செய்வது நாடிசுத்தி எனப்படும்.

வஜ்ராசனம் அல்லது பத்மாசன நிலையில் உட்காரவும்.

வலது கையின் நடு மற்றும் சுண்டு விரல்களை மடக்கிக் கொள்ள வேண்டும். இதர விரல்களை நீட்டிக் கொள்ள வேண்டும். இதை நாசிக முத்திரை என்பார்கள்.

இடது கையின் கட்டை விரலின் நுனி ஆள்காட்டி விரலின் நுனியை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இதை சின் முத்திரை என்பார்கள்.

வலது கையின் கட்டை விரலால் உங்கள் வலது நாசியை மூடிக் கொள்ள வேண்டும். இடது நாசியின் மூலம் மூச்சை நன்கு உள்ளிழுக்கவும். மூச்சை அடக்கிக் கொள்ளக் கூடாது.

உடனடியாக வலது மூக்கை திறந்து விட்டு இடது நாசியை மோதிர விரல்களால் மூடிக் கொள்ளவும். வலது நாசியின் மூலம் மூச்சை வெளியே விடவும்.

இப்பொழுது வலது நாசியின் மூலம் மூச்சை உள்ளிழுத்து, இதை மூடி இடது நாசியின் மூலம் மூச்சை வெளியே விடவும். இதை மாற்றி மாற்றி 27 முறை செய்யவும்.

பலன்கள்

பிரணாயாமா முறைகளிலேயே பல வகைகள் உள்ளன. நாடிசுத்தி,

கபாலபாதி, சூரிய பேதனா, சந்திர பேதனா, விலோமம், சீதளி, பிரதிலோமம் இத்யாதி வகைகளுள்ளன. தகுந்த குருவிடம் இவற்றை அறிந்துக் கொள்ள வேண்டும். பிராணாயாமம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். எந்த வித கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் அதன் செயல் முறைகளை குருவிடம் கற்றுக் கொண்டு செய்ய வேண்டும். பிராணாயாமத்தின் பல வகைகளை சுருக்கமாக இங்கு பார்ப்போம். தொடரும்.


Spread the love
error: Content is protected !!