புளிச்சக் கீரை

Spread the love

தமிழில் புளிச்சக் கீரை என்று கூறப்படுவதற்கு காரணம் புளிப்புச் சுவை காணப்படுவது தான். இதனை புளிச்சாங்கீரை, காசினிக் கீரை என்பர். தெலுங்கில் கோங்கூரா என்றும், சம்ஸ்கிருதத்தில் மச்சிக என்றும் அழைக்கப்படுகிறது. புளிச்சகீரை இந்தியாவில் பல மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. ஆந்திர மக்கள் இதனை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

இக்கீரையில் புரதம், கொழுப்பு, மாவுச் சத்துகள் உள்ளன. கால்சியம், மக்னீசியம், இரும்பு, கந்தகம் போன்ற தாது உப்புகள் அதிகம் உள்ளன. ஆந்திராவில் கோங்கூரா சட்னி என்ற சமையல் உணவை இதில் தயாரிக்கிறார்கள். இது மிகவும் புகழ் பெற்ற உணவாகும்.

புளிச்சக் கீரையில் வெங்காயம், மிளகாய் வற்றல், கடுகு, உப்பு, மஞ்சள், வெந்தயம் போன்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து எண்ணெய் விட்டு வதக்கித் துவையலாக செய்கிறார்கள்.

இந்த துவையலை சாதத்தில் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட ருசி அதிகமாக காணப்படும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

புளிச்ச கீரையில் இலை மட்டுமல்லாமல் அதன் தண்டு, விதை. பூ அனைத்தும் மருத்துவத்தில் பயன்படுகிறது.

புளிச்ச கீரையை உலர் பொடியாகச் செய்தும் சாப்பிடலாம். அதற்கு இலைகளை நன்றாக நிழலில் காய வைத்து வறுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் பருப்பு, மிளகாய், பெருங்காயம் சேர்த்துப் பொடி செய்து பயன்படுத்த ருசி அதிகமாக உணரலாம்.

புளிச்ச கீரை குணப்படுத்தும் நோய்கள்

பித்தம். பித்த வாந்தி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய், குடல் புண், செரிமானக் கோளாறுகள், இரத்த அழுத்தம், வயிற்று வலி, வீக்கம், உள் அழற்சி வாதம், சீதளம், நரம்புக் கோளாறுகள், மலச்சிக்கல், உடல் உஷ்ணம், காச நோய், மூலம், குடல் வாயு, சொரி, சிரங்கு, கை, கால், வீக்கம்.

புளிச்ச கீரை உணவுகள்

புளிச்ச கீரைகளை நன்கு கழுவி, சுத்தம் செய்ய வேண்டும். கீரைகளை நன்கு ஆய்ந்து பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இறாலை நன்கு கழுவி, சுத்தம் செய்து கொள்வது அவசியம். வாணலியில் எண்ணெய் போதுமான அளவு விட்டு ( நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய்) முதலில் இறாலையும், பின்னர் வெங்காயம், மிளகாயையும் போட்டு வதக்கி விட வேண்டும். அதன் பின்பு பொடிதாக நறுக்கி வைத்திருக்கும் புளிச்சக் கீரைகளை சேர்த்து, உப்பு ருசிக்கேற்றவாறு சேர்த்து விட்டு வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். இதுவே, எறால் புளிச்சக் கீரை பொறியல்.

இறாலைப் போல மீனையும் இந்த முறையில் சமைத்துக் கொள்ளலாம்.


Spread the love