புட்டிங் என்பது Boudin – போடின் என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து வந்ததாகும். 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் தாங்கள் ஆட்சி செய்த நாடுகளுக்கு கப்பல்களில் பயணம் செய்யும் பொழுது தான் முதன் முதலாக புட்டிங் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘ராயல் நேவி’ ‘Royal Navy’ என்ற ஆங்கிலேயக் கப்பலில் தான் முதன் முதலாக விருந்தினர்களுக்கு தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.
புட்டிங் என்பது சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மாவுகளுடன் கலந்து ஆவியிலிட்டு வேக வைக்கப்பட்ட பால் ஜீனி போன்றவை கலந்த, உணவிற்கு பின்னர் சாப்பிடக் கூடிய ஒரு வகை இனிப்பு. புட்டிங் இனிப்பு வகையிலும் கார வகைகளிலும் தயாரிக்கப்படுகின்றது. உலகில் முதன் முதலாக புட்டிங் தயாரித்த நாடு இங்கிலாந்து ஆனால் அதிகமாக புட்டிங் உபயோகத்திலிருக்கும் நாடு அமெரிக்கா. இனிப்பு வகை புட்டிங்கில் புகழ் பெற்ற வகை ரைஸ் புட்டிங் மற்றும் கிறிஸ்துமஸ் புட்டிங் ஆகும்.
பெரிய விருந்துகளிலும், ஸ்டார் ஒட்டல்களிலும் கடைசியாக உணவை முடிக்கும் பொழுது இனிப்பு வகைப் புட்டிங்கள், பால், கிரீம், பழங்கள், சாக்லேட் போன்றவற்றுடன் பரிமாறப்படுகின்றது.
பொதுவாக புட்டிங் என்பது ஏதேனும் ஒரு பொருளை பால், கிரீம், சாக்லேட், ஜீனி, பழங்கள் போன்றவற்றை ஏதேனும் ஒரு தானிய மாவில் – அரிசி, கோதுமை, சோள மாவு, ஜெலாடின், மைதா போன்றவற்றில் கலந்து இட்லி செய்வது போல ஆவியிலோ, அல்லது கேக் செய்வது போல அவனிலோ அல்லது வேக வைப்பதே ஆகும்.
கஸ்டர்ட் என்பது என்ன?
புட்டிங்கும், கஸ்டர்டும் உடன் பிறவா சகோதரிகள் தான். புட்டிங்கில் முட்டை இருக்காது. அதே புட்டிங்கில் முட்டை இருந்தால் அது கஸ்டர்ட் எனப்படுகிறது. பாலில் மாவைக் கலந்து வேக வைத்து எடுப்பது புட்டிங், பாலில் முட்டையைக் கலந்து வேக வைப்பது கஸ்டர்ட்.