ஆயுர்வேதத்தில் சோரியாசிஸ்சுக்கு அற்புத தீர்வு

Spread the love

சோரியாசிஸ் செதில் அரிப்பு நோய்:

உடல் வேதனையையும், மன வேதனையையும் தரும் முக்கியமான சரும நோயில் ஒன்று தான் இது. ஒரு காலத்தில் சோரியாசிஸ் நோயாளிகளை தொழு நோயாளிகள் என்று கருதி வெறுத்து ஒதுக்கப்பட்டு இருந்தனர். ஆனால் சோரியாசிஸ் தோல் நோயானது தொழு நோயிலிருந்து மாறுபட்டது என்று 1841-ஆம் ஆண்டு ஹெப்ரா என்ற மருத்துவர் நிருபித்துக் காட்டினார்.

சோரியாசிஸ் அறிகுறிகள்:

தோல் சிவந்து, தடித்துப் போய், பாதிக்கப்பட்ட இடங்களில் வெள்ளி நிறத்தில் செதில் செதில்களாக உதிரும். சிறிய வட்ட வடிவத்தில் தோன்றும் சோரியாசிஸ், தலை, கால், பிடரி, கைகள் முதலிய இடங்களில் தோன்றும். இந்த வட்ட அமைப்பால், நமைச்சல் ஏற்பட்டு அரித்தால் சீழ் அல்லது இரத்தம் வரும். சோரியாசிஸ் புண்களில் அரிப்பும் நமைச்சலும் தோன்றலாம். வட்ட செதில் அமைப்பு இந்த நோயின் முக்கிய அறிகுறியாகும். முகம் தவிர உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வரும் என்றாலும் சாதாரணமாக முழங்கால், முழங்கைகளில் சோரியாசிஸ் அதிகம் தோன்றுகிறது. தலையில் வந்தால் இதை ‘பொடுகு’ என்று அலட்சியப்படுத்த தோன்றும்.

முதலில் பருக்கள் போல் தோன்றி, பிறகு 23 அங்குலம் வரை பெரிதாகி மற்ற இடங்களில் பரவும். மனிதருக்கு மனிதர் இதன் தீவிரம் மாறுபடும். தீவிர ( முற்றிவிட்ட ) நிலையில், வட்ட வடிவ அமைப்புகள் ஒன்றொன்று சேர்ந்து பெரிதாக காணப்படும். இவை வலியை உண்டாக்காமல் இருந்தால் கூட, அருவருப்பான தோற்றத்தை நோயாளிக்கு சோரியாசிஸ் தருவதால், மன வேதனையை அதிகரித்து மனரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள். சோரியாசிஸ் 10 வயதிலிருந்து 40 வயது உள்ளவர்களுக்கு அதிகமாகக் காணப்பட்டாலும் எல்லா வயதினரையும் பாதிக்கலாம். சோரியாசிஸ் தொற்று நோய் அல்ல. சொல்லாமலே வரும். சோரியாசிஸ் சொல்லாமலே மறைந்து விடும். மறுபடியும் ஏற்படும். அழையாத விருந்தாளி போன்று வந்து, போய்க் கொண்டு ஆயுள் வரை நீடிக்கும். இது தாக்கும் தீவிரத்தைப் பொறுத்து சிலருக்கு அதிக தொந்தரவாகவும், சிலருக்கு குறைந்த மஞ்சள், பழுப்பு நிறமாக உடையலாம்.

காரணங்கள்:

தோலின் செல்கள் அபரிதமாக ( அளவுக்கு மீறி ) உருவாவது சோரியாசிஸ் ஏற்படக் காரணமாகும். அபரிதமாக உருவாகிய செல்கள் தோல் மேல் தேங்கி, புண்ணாக மாறுகின்றன. இதன் வேக வளர்ச்சிக்கான சரியான காரணங்கள் தான் இன்னமும் அறிய முடியவில்லை. பரம்பரையாக வரலாம். ஸ்ட்ரெஸ் (Stress) மன அழுத்தம், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவானாலும் சோரியாசிஸ் வரலாம். இயல்பான ஆரோக்கியமான மனிதனிடம் தோலில் அடிபாகத்தில் இருந்து செல்கள் புறத் தோலை வந்து அடைய 30 நாட்கள் ஆகும். சோரியாசிஸ் உள்ளவர்களுக்கு இது மூன்று நாட்களிலேயே வந்து விடும். மன அழுத்தத்தினாலும், அழற்சியினாலும் செல்கள் விபரிதமாக வளரும் என்பதை பெரும்பாலோர் நம்புவதில்லை எனினும் உண்மை இது தான்.

சோரியாசிஸ் தோன்ற சில மருந்துகள் குறிப்பாக உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகள் உட்கொள்ளும் பொழுது, வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகள், அதிக உடல் பருமன் முதலியவைகளும் காரணமாக சொல்லப்படுகிறது.

சோரியாசிஸ் ஒரு ஆட்டோ இம்யூன் (Auto Immune) நோய் எனப்படுகிறது. உடலில் நமது பாதுகாப்பிற்காக உள்ள அணுக்கள், தவறுதலாக நல்ல திசுக்களை அழிப்பது ஆட்டோ இம்யூன் நோய் ஆகும்.

ஆங்கில மருத்துவ முறையில், சோரியாசிஸ் நோய்க்கு, தோலின் வறட்சியைக் குறைக்கவும், அதன் எண்ணெய்ப் பசையை அதிகரிக்கவும் செய்யும் கிரிம்கள் (Moisturizers & Emollients) தரப்படுகின்றன. வைட்டமின் ‘டி’, சாலிசைலிக் அமிலம் (Salicylic Acid) கலந்த மருந்துகளும் தரப்படுகின்றன. முக்கியமாக ரோடு போடப் பயன்படுத்தப்படும் தார் (Coal Tar) மூலப் பொருளாக கொண்ட மருந்துகள் நல்ல நிவாரணத்தை அளிக்கின்றன. ஆயுர் வேத மருத்துவத்தில், எல்லா வித தோல் நோய்களையும் ‘குஷ்டம்’ என்று சொல்லப்படுகிறது. சோரியாசினை ‘ஏக குஷ்டம்’ என குறிப்பிடலாம். ஆயுர் வேதத்தின் படி, சோரியாசிஸ் தோன்றுவதற்கு, மாசு படிந்த இரத்தம், மன அழுத்தம் தான் காரணமாகும். முன அழுத்தத்தால் வாத தோஷம் அதிகரிக்கிறது. அதிக வாதம் விபரீதமான தோல் அமைப்பை தோற்றுவிக்கிறது. இயற்கை வேகங்களை ( மலம், மூத்திரம் ) தடை செய்வது, வாந்தி முதலியவற்றை அடக்கிக் கொள்வது, ஒன்றுக்கொன்று விரோதமான, ஒவ்வாத உணவுகளை உட்கொள்வது ( உதாரணத்திற்கு பாலும், மீனும் மற்றும் பாலும் நெய்யும் முதலியன ) போன்ற காரணங்களினால் சோரியாசிஸ் தோன்றுகிறது.

அ. கோளாறான உணவுப் பழக்கம், உண்ட உணவு சீரணிக்காமல் மேலும் உண்பது.

ஆ. கொழுப்பு, எண்ணெய் உள்ள உணவுகளை உட்கொள்வது

இ. புதுத் தான்யங்களை உண்பது.

ஈ. அதிகமாக மாவு பண்டங்களை உண்பது

உ. ஆச்சர்யப்படும் விஷயமாக ஆயுர்வேதம் கூறும் ஒரு விஷயம் என்னவெனில், பெரியவர்களை அவமதிப்பது, பாவங்களை செய்வது. இதனால் வாத தோஷம் சீற்றம் அடைகிறது என்பதே. குற்றம் செய்பவர்களின் குற்ற உணர்வின் காரணமாக மன நிலை பாதிக்கப்படலாம். பாதிக்கப்பட்ட மன நிலை, உடலை தாக்கி தோல் நோயை உண்டாக்கலாம்.

சோரியாசிஸ் குணம் பெற ஆயுர்வேதம் கூறும் மருத்துவம்:

1. நீர்த்த எலுமிச்சம் பழச் சாற்றை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம்.

2. வாழை இலையை பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்டலாம். அதே போல் மல்லிகை மலர்களை நசுக்கி அந்த களிம்பை தடவலாம்.

3. வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக்கி, நெய்யில் வறுத்துச் சாப்பிடலாம்.

4. முட்டை கோஸ் சாற்றை தினமும் ஒரு கோப்பை அருந்தலாம்.

5. உலர்ந்த வேப்ப இலைகளை நன்றாக பொடி செய்து சுத்தமான பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளவும். இந்த பொடியில் 5 கிராம் அளவு எடுத்து, ஒரு கோப்பை தண்ணீரில் கலந்து தினமும் இருவேளை அருந்தி வரவும். இத்துடன் அரைத் தேக்கரண்டி மஞ்சள் பொடியையும் சேர்த்து கலந்து அருந்தி வரலாம்.

6. புங்கத் தைலத்தினை வெளிப் பூச்சாக  தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

7. இளம் வேப்ப இலைகளை அரைத்து, சிறிது மஞ்சள் பொடி சேர்த்து புண்களின் மேல் தடவலாம்.

8. உணவில் கொழுப்பு, மாமிச புரதம், சர்க்கரை இவற்றைக் குறைக்கவும். கடல் உப்புக்கு பதில் பாறை உப்பைப் பயன்படுத்தலாம். மது அருந்துதல் கூடாது.

9. சிறிது நேரம் காலை வெயிலில் உடல் படுவதால், சோரியாசிஸ் குறையும்.

10. குளிக்கும் நீரில் எண்ணெய் விட்டுக் குளிக்கவும். வேப்பிலைகளையும் குளிக்கும் நீரில் போடலாம். மாய்ஸ்சரைசர்கள் தடவுவது நல்லது.

11. தினமும் காலையில் 1 டம்ளர் தேன் அல்லது சர்க்கரை கலந்த தக்காளிச் சாறை அருந்தி வர இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, தோல் வியாதிகள் அணுகாது.

சோரியாசிஸ் உண்டாக்கும் மூட்டு வலி:

சோரியாசிஸ் நோய் காணப்படுபவர்களிடம் கிட்டதட்ட 7 சதவீத நோயாளிகளுக்கு ஆர்த்தரைடீஸும் ( மூட்டு வலி ) ஏற்படுகிறது. ஆமவாதம் எனப்படும் ருமாடிட் ஆர்த்தரைடீஸ் போலவே சோரியாசிஸ் ஆர்த்தரைடீஸ் காணப்படும். சருமத்தில் நமைச்சலுடன் கூடிய சிகப்பு திட்டுகளாக தோன்றும். நகங்கள் “சொத்தையினால்” பாதிக்கப்படும். அழற்சி, வீக்கம் இவை கை விரல் மூட்டுக்கள் மற்றும் கால் கட்டை விரல் மூட்டுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும். பாதிப்படைந்த விரல் நகங்களின் அருகில் உள்ள மூட்டுக்கள் பாதிக்கப்படலாம். சரும பாதிப்புகளும், ஆர்த்தரைடீஸும் சேர்ந்தே தோன்றலாம். சோரியாசிஸ் குறையும் போது அல்லது மறையும் போது ஆர்த்தரைடீஸும் மறைந்து விடும். ஆம வாதம் போல அவ்வளவு சீரியஸான வியாதியாக இது இல்லை எனினும் சோரியாசிஸ் ஆர்த்தரைடீஸும் உடனே கவனிக்கப்பட வேண்டும். இதனாலும் நிரந்தரமாக மூட்டுக்கள் பாதிக்கப்படலாம்.

சோரியாசிஸ் நோய் குணமாக ஆயுர் வேதத்தில் வழிகள் இருக்கு:

ஆயுர் வேத முறைப்படி சிகிச்சை பெறும் பொழுது முதலில் உடலில் ஓடுகின்ற இரத்தத்தை சுத்தம் செய்யப்படும். ஆடாதொடை, கண்டங்கத்திரி மற்றும் குக்குலு சேர்ந்து காய்ச்சப்பட்ட குக்குலு திக்தக க்ருதம் என்ற நெய் உள் மருந்தாக கொடுக்கப்படும். தேவையானால் அட்டைகளை உபயோகித்து கெட்ட இரத்தத்தை உறிஞ்சி எடுப்பதும் உண்டு. பிறகு வாந்தி, பேதி இவற்றை உண்டாக்கி, உடல் சுத்தம் செய்யப்படும். வெளிப்பூச்சாக ‘குஷ்ட ரக்ஸ தைலம்’, சேராங் கொட்டை எண்ணெய், அருகம்புல் தைலம் போன்ற தைலங்கள் உடலில் தேய்த்துக் குளிக்க அரிப்பைக் குறைத்து சோரியாசிஸ் புண்ணுக்கு இதமளிக்கும். தேவையெனில் பஞ்ச கர்மா சிகிச்சையும் வழங்கப்படும். முழுமையான பலன் கிடைக்க ஆயுர்வேத மருத்துவரை அணுக வேண்டும்.


Spread the love
error: Content is protected !!