பால், முட்டை, மீனில் உள்ள சத்துக்கள்?

Spread the love

இன்றுள்ள பல பேருக்கு ஒரு உணவுப் பொருளை உண்ணும் போது, அதில் என்னென்ன சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்று தெரிந்து வைத்திருப்பவர்கள் மிகவும் சொற்பமானவர்களாகவே இருக்கிறார்கள். இது தவறானது. சாப்பிடும் உணவில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்.

நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் அரிசி, கோதுமை, சிறு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், போன்றவற்றை உட்கொள்கிறோம். இவற்றுடன் பால், முட்டை, இறைச்சி, மீன் போன்றவற்றை சேர்க்கும்போது நமக்கு தேவையான புரதச் சத்து முக்கியமான கொழுப்பு அமிலம், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் போன்றவற்றையும் பெறுகின்றோம்.

மேலும், பால், முட்டை, இறைச்சியில் இருக்கும் சத்துக்களைக் குறித்து இதோ பார்க்கலாம்.

பால் & பாலில் அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றது.

கால்சியம் & பாலில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு வலுவூட்டவும், பல் அமைப்பு சரியாக இருப்பதற்கும், இருதயமும், தசைகளும் சுருங்கி விரிவதற்கும் உதவுகிறது. நரம்புகள் இயல்பாக செயல்படவும் கால்சியம் தேவைப்படுகிறது. கால்சியம் குறைவால் ஆஸ்டியோ போரசிஸ் எனும் எலும்பு சிதைவு நோய் உண்டாகும். முதுகுவலி, எடை இழப்பு, காரணமற்ற எலும்பு முறிவு, பல் விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

கால்சியம் குறைவால் அதீதமான நரம்பு பதற்றம் ஏற்படும். 200 மி.லி. பாலை குழந்தை அருந்தும்போது அன்றாடம் தேவைப்படும் கால்சியத்தைப் பெறுகின்றனர்.

பாஸ்பரஸ் & பாஸ்பரஸின் முக்கிய மூலாதாரமாக பால் உள்ளது. பாஸ்பரஸ் ஆனது. கால்சியம் மற்றும் புரத வளர்சிதை மாற்றத்திற்கும், பல் எலும்பு, தோலின் தோற்றம், திசு வளர்ச்சி மற்றும் அமில கார சம நிலை ஆகியவற்றிற்கு அவசியமாகிறது. 200 மி.லி. பாலை குழந்தைகள் அருந்தும்போது, அன்றாட தேவையில் 55% அளவு பாஸ்பரசை குழந்தைகள் பெறுகின்றனர். மேலும் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தைராக்சின் உருவாக பாலில் உள்ள அயோடின் உதவுகிறது. 200 மி.லி. பாலை குழந்தைகள் அருந்துவதால் 96% அளவு இந்த சத்து பெறுகின்றனர்.

மேலும் பாலில் உடல் செல்களுக்கு புரத சேர்க்கை, நரம்பு செயல்பாட்டிற்கு தேவையான மெக்னீசியமும், உடல் வளர்ச்சியில் முக்கியமான, நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் இதய செயல்பாட்டிற்கும் தேவைப்படும். துத்தநாகமும் உள்ளது. மேலும், பாலில் குறைந்த அளவில் சோடியம் செலீனியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் உள்ளது.

பாலில் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான எ, டி, இ, கே, மற்றும் நீரில் கரையும் வைட்டமின்கள் பி, தயமின், ரிபோபிளேவின், நியாசின், போலேட், பைரிடாக்சின் வைட்டமின் சி, போன்றவையும் உள்ளது.

முட்டை & முட்டையில் மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் நிறைய சத்துக்கள் உள்ளன.

புரதச் சத்து & மனித உடல் வளர்ச்சிக்கும், இரத்தம், என்சைம் ஹார்மோன் உற்பத்திக்கும் புரதம் இன்றியமையாதது. கோழி முட்டையிலிருந்து கிடைக்கும் புரதம், பருப்பு, இறைச்சியிலிருந்து கிடைக்கும். புரதச் சத்துக்களைக் காட்டிலும் தரத்திலும், உயிரியல் மதிப்பிலும் உயர்ந்தது. கோழி முட்டையில் புரதம், வெண்கரு புரதம், மஞ்சள் கரு புரதம் என்ற இரு புரதங்கள் உள்ளன. இதில் வெள்ளைக் கரு புரதம் சிறந்ததாகும்.

மேலும், குறைந்த எரிசக்தி உள்ள உணவை விரும்புபவர்கள் முட்டையின் வெண்கருவை மட்டும் உண்பதினால் அதிக அளவு புரதச் சத்தையும், குறைந்த அளவு எரிசக்தியையும் பெறலாம்.

நமது ஆரோக்கியத்திற்கு தேவையான பத்து அமினோ அமிலங்கள் முட்டையில் சமச்சீர் அளவில் ஒருங்கே கலந்து நன்மை பயக்கின்றன. இதில் உள்ள புரதம் எல்லா வயதினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு எளிதில் ஜீரணிக்கப்படுகிறது. லைசின், டிரிப்போ பேன், திரியோனின், லூசின், ஐசோலூசின், வேலின் ஆர்ஜினின் போன்ற அமினோ அமிலங்களும் முட்டையில் இருக்கிறது.

கொழுப்புச் சத்து & கோழி முட்டையில் 11% கொழுப்புச் சத்து உள்ளது. இவை அனைத்தும் முட்டையின் மஞ்சள் கருவில்தான் உள்ளன. ஒரு முட்டையில் 0.63கி. வினோலியிக் அமிலம் உள்ளது.

வைட்டமின்கள்

கோழி முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான, எ, டி, இ, கே, போன்றவையும், தண்ணீரில் கரையக் கூடிய ‘பி’ காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவில் உள்ளது. இதை தவிர்த்து இரத்த உறைதலில் முக்கிய பங்காற்றும் வைட்டமின் கே. யும் முட்டையில் உள்ளது.

தாது உப்புக்கள்

முட்டையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகியவை மனிதனுக்கு தேவையான அளவிலும், குளோரின், மெக்னீசியம், சோடியம், துத்தநாகம், அயோடின் போன்ற கனிமப் பொருட்கள் குறைந்த அளவிலும் உள்ளன.

மீனில் உள்ள சத்துக்கள்

தமிழகத்தில் பாரை, பண்ணா, சாளை, காரல், கத்தாளை, அயிரை, சுறா, திருக்கை, சீலா, இளங்கான் போன்ற மீன்களே அதிகளவில் பிடிக்கப்படுகின்றன. மீனின் மொத்த எடையில் 18% புரதம் உள்ளது. எளிதில் செரிக்கவல்ல மீன் புரதம் உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையான அமினோ அமிலங்களையும், நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிப்பதாக உள்ளது.

மீன் புரதம் எளிதில் செரிக்கக் கூடியது. மீன் புரதத்தில் லைசின், மெத்தியோனின் போன்ற அமினோ அமிலங்களும் மிகுந்து உள்ளது. 5 சதவீதத்திற்கும் குறைவாக கொழுப்புச் சத்துக் கொண்ட மீன்களை கொழுப்பற்ற மீன் எனலாம். அதற்கு அதிகமாக கொழுப்பினைக் கொண்ட மீன்களை கொழுப்பு மீன்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மீனின் வயது, இனம், உணவு, இனப் பெருக்க நிலை மற்றும் கால நிலைக்கு ஏற்ப மீன்களில் கொழுப்புச் சத்து மாறுபடும்.

நெத்திலி, வாவல், விளமீன் போன்றவை கொழுப்பு குறைந்த மீன்கள். சீலா, அயிரை மற்றும் நெய் சாளை போன்றவை கொழுப்பு நிறைந்த மீன்கள் ஆகும்.

மீனில் உள்ள கொழுப்பு எளிதில் செரிக்கக் கூடியது. இவை இரத்த குழாய்களில் படிவதில்லை. இதய நோயாளிகளுக்கு உகந்த மாமிச உணவு மீன்கள் தான் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மீனில் உள்ள ஒமேகா & 3, கொழுப்பு அமிலம் குழந்தைகளின் மூளை வளர்ச்சிமற்றும் நல்ல பார்வைத் திறனுக்கும் துணைபுரிகின்றது.

இரத்த உறைவை குறைப்பதால் இதய நோய் மற்றும் பக்க வாதம் ஏற்படும் வாய்ப்புகளை மீன் உணவு குறைக்கிறது. மீன் உணவால் வாய், உணவுக் குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை மற்றும் மார்பகம் போன்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து 30 முதல் 50 சதவீதம் வரை குறைகிறது என கண்டறிந்துள்ளனர்.

எலும்பு தேய்மானம், சொறி, சிரங்கு போன்ற நோய் எதிர்ப்புத் தன்மை குறைவால் ஏற்படும் நோய்களை மீன் உணவுகள் குறைக்கின்றன.

நெத்திலி, மீனில் கால்சியம் அதிகம் உள்ளது. இதனால் ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது. சாளை மீனில் அயோடின் என்ற தாதுச் சத்து அதிகம்.

மீனில் உள்ள வைட்டமின் ஏ, கண் பார்வைக்கும் ஆரோக்கியமான தோலுக்கும், உயிர் சத்து, டி. எலும்பின் வளர்ச்சிக்கும், சி மற்றும் பி. நோய் எதிர்ப்புச் சக்திக்கும் துணைபுரிகிறது. மீன் எண்ணெய்களில் ஏ., டி, ஈ ஆகிய வைட்டமின்கள் மிகுந்து காணப்படுகின்றது. மீனின் தசைப் பகுதியில் நீரில் கரையும் வைட்டமின் பி, சி, ஆகியவை அடங்கும்.

இறைச்சியில் இருக்கும் சத்துக்கள்

இறைச்சியானது 75% நீரையும் 18% புரதத்தையும் 3% கொழுப்பையும், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற கனிமங்களையும் பி.12, வைட்டமின்களையும் குறிப்பாக நமக்கு தேவைப்படும் பி.12, என்ற மிக முக்கியமான வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. எழுபது கிலோ எடையுள்ள ஓர் ஆண் தினமும் 56 கிராம் இறைச்சியையும், 55 கிலோ எடையுள்ள ஒரு பெண் 44 கிராம் என்ற அளவில் இறைச்சியை உண்ணலாம் என்கிறது ஆராய்ச்சி.

இறைச்சியில் உள்ள புரதத்தின் உயிரியில் மதிப்பு தாவரப் புரதங்களில் உள்ளதைவிட அதிகமாக உள்ளது. இறைச்சியில் உள்ள புரதம் லியூசின், ஐசோ&லியூசின், பினைல்&அலனின், அலனின், திரியோனின், மெத்தியோனின், டிரிப்போபேன், ஹிஸ்டின் மற்றும் ஆர்ஜினின் போன்ற அமினோ அமிலங்களும் உள்ளது. இறைச்சியை உண்பதன் மூலம் இன்றியமையாத கொழுப்பு அமிலங்களான அரக்கி டானிக் அமிலம், லினோலியிக் அமிலம், லினோலெனிக் அமிலம் போன்றவை நமக்கு கிடைக்கின்றன.

ஆயுர்வேதம்.காம்


Spread the love
error: Content is protected !!