உடல் வளர்க்கும், உரமாகும் புரதம் (புரோட்டீன்)

Spread the love

நம் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் இரண்டு வகை. 1. பெரிய ஊட்டச் சத்துக்கள். 2. சிறிய ஊட்டச் சத்துக்கள். புரதம், கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து), கொழுப்பு ஆகியவை பெரிய ஊட்டச் சத்துக்களாகும். இவை உடலுக்கு அதிக அளவில் தேவைப்படுகிறது. உடல் இயக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் எரிசக்தியாக இவை செயல்படுகின்றன. விட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் சிறிய ஊட்டச் சத்துக்கள். இவையும் உடலுக்கு அவசியமானதுதான்.

ஊட்டச் சத்துக்களில் முக்கியமானது புரதம். இது உடல் வளர்ச்சிக்கு அவசியமானது. உடலில் நோய் தொற்றை எதிர்க்க உதவும். ரத்தம், தசை நார்கள், திசுக்களை வலுப்படுத்தும்.

சராசரியாக ஒரு மனிதருக்கு 0.8 கிராமில் இருந்து 1 கிராம் வரை ஒரு கிலோ எடைக்கு தேவைப்படுகிறது. அப்படியென்றால் உங்கள் எடைக்கு ஏற்ப எத்தனை கிராம் தேவை என்று யூகித்து கொள்ளுங்கள். 60ல் இருந்து 70 கிராம் கலோரி வரை உங்களுக்கு தேவைப்படும். பசியின்மையை போக்குவதில் புரதச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் இதயக் கோளாறுகளை தடுக்க புரதச்சத்து உதவுகிறது.

புரதத்தில் பல வகை உண்டு. அவற்றில் மொத்தமாக 22 அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் 8 அமினோ அமிலங்கள் நம் உடலுக்கு அத்தியாவசியமானவை. தசைகள், தோல், ரத்த செல்கள், முடி, நகம் வளர்வதற்கும், வலுவாக இருப்பதற்கும் புரதம்தான் முக்கிய காரணம்.

புரதத்தை சைவ, அசைவ உணவுகளில் இருந்துதான் பெற வேண்டும். புரதத்தை குறைவாக சாப்பிட்டாலும் சிக்கல், அதிகமாக சாப்பிட்டால் இடியாப்ப சிக்கல். காரணம் சில வகை உணவில் கிடைக்கும் புரதங்களில் அமினோ அமிலங்கள் அதிகம்.

ஒருவரின் எடை, உயரத்தை வைத்துதான் உடல் மொத்த எடையளவு (Body Mass Index-BMI) கணக்கிடப்படுகிறது. அதை பொறுத்துதான் ஒருவரின் தேவை நிர்ணயிக்கப்படுகிறது. உடல் தனக்கு வேண்டிய புரதத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை வெளியேற்றி விடும். அப்படி வெளியேறும்போது அமினோ அமிலங்கள் மட்டும் தங்கி விடும். அதனால் இதய நோய், பக்கவாதம், சிறுநீர கற்கள், எலும்பு பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

சைவ உணவை விட அசைவ உணவில்தான் அதிகப் புரதம் உள்ளது. அதனால்தான் பலர் அசைவ உணவை விரும்பி சாப்பிடுகின்றனர். உண்மையில் ‘சைவ’ புரதம்தான் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பட்டாணி, சோயபீன், கொட்டை, பால், பாலாடைக் கட்டி, பருப்பு, பயறு வகைகள், வேர்க்கடலை, பேரீச்சம் பழம், அத்திப்பழம், திராட்சை, மாதுளம், நேந்திரம் பழம், பாதாம் பருப்பு, எண்ணெய் வித்துக்கள், உணவு தானியங்கள், சோயாபீன், கீரை வகைகளில் அதிக புரதச்சத்து உள்ளது. முதல் தர புரதச்சத்து பாலில்தான் கிடைக்கிறது.

 இறைச்சி, மீன், முட்டை என அசைவ உணவிலும் புரதச்சத்து அதிகம் உள்ளது. பருப்பில் 27%, கொட்டை விதைகளில் 13%, தானியங்களில் 12%, இனிப்பு தயிரில் 15 கிராம் புரதச்சத்து உள்ளது. கோழி இறைச்சியில் 14&22 கிராம், 3 முட்டையில் 19 கிராம் புரதச்சத்து உள்ளது. காய்கறிகள், சோயாபீன் போன்றவற்றில் இருந்து கிடைக்கும் புரதத்தில்தான் அதிக சத்துக்கள் உள்ளன. கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து நல்ல கொலஸ்ட்ரால் கிடைக்கிறது. ஆலிவ் ஆயில் உள்பட தாவர வகையில் கிடைக்கும் புரதத்தால் எந்த ஆபத்தும் இல்லை.

ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவருக்கும் புரதச்சத்து அவசியம். கர்ப்பிணிகள், குழந்தைகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு புரதச்சத்து அதிகளவில் தேவைப்படும்.

நல்ல புரதத்தை எடுத்துக் கொண்டு நலமுடன் வாழ்வோம்.


Spread the love