நீங்கள் ஐம்பது வயதை தாண்டியவரா? இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கிறதா? கழித்தாலும் பூரணமாக சிறுநீர் வெளியேறவில்லை என்ற உணர்ச்சி ஏற்படுகிறதா? கட்டுப்படாமல் சிறுநீர் தானாகவே கழிந்து விடுகிறதா? இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சுக்கில வலகம் – Prostatic gland, வயது காரணமாக வீங்குயிருக்கலாம்.
இந்த ப்ராஸ்டேட் சுரப்பி உடலின் இனப்பெருக்க அமைப்பின் ஒரு அவயம். ஆண்களில் மட்டுமே காணப்படும். ஒரு அக்ரோட் (walnut) கொட்டை அளவில் இருக்கும். சுக்கில வலகம் (அ) சுக்கிலச் சுரப்பி எனப்படும். இந்த சுரப்பி ஒரு பாலியல் உதிரி உறுப்பு. மூத்திரப்பை மற்றும் “வாஸ்டிஃபரென்சியா” (Vas deferentia) என்னும் ஒரு ஜோடி குழாய்களின் கீழே அமைந்துள்ளது. ப்ராஸ்டேட் சுரப்பி, சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை அகற்றும் குழாய்களில் சேர்கிறது.
சுக்கில சுரப்பியை சுற்றிலும் மெல்லிய, மிருதுவான தசை உள்ளது. உடலுறவின் போது, சுக்கில சுரப்பி ஒரு வழவழப்பான திரவத்தை உற்பத்தி செய்து, சிறுநீர் தாரையை வழவழப்பாக்கி, ஆண் விந்து சுலபமாக செல்ல உதவுகிறது. சுக்கில சுரப்பி சுரக்கும். திரவம் “அல்கைலின்” (காரத்தன்மை – alkaline) குணமுடையது.
வயதானால் சுக்கில வலகம் வீங்கிவிடும். இது மூத்திரப்பையின் கழுத்தை அழுத்தும். இதனால் சிறுநீர் போவது தடைபடும். ஆயுர்வேதம் இந்த நிலையை மூத்ரகாதம் என்கிறது. மூத்திரப்பையில் கழுத்து அழுத்தப்படுவதால், எப்போதும் சிறுநீர் முழுமையாக போகாத உணர்வும். சிறுநீர் கழிக்கையில், சங்கடங்கள் ஏற்படும். தவிர இதனால் மூத்திரப்பை வீங்கி, அதன் அதிக அழுத்தம் சிறுநீர் குழாய்கள் மூலம் சிறுநீரகம் சென்று அங்குபாதிப்பை உண்டாக்கும். மூத்திரப்பையில் சிறுநீர் தேங்கி நின்றால் சிறுநீரகத்தில் கற்கள். மற்றும் ‘தொற்றுகள்‘ ஏற்படலாம். தொடர்ந்து சிறுநீர்ப்பையின் கழுத்து அழுக்கப்பட்டிருந்தால் சிறுநீரகம் பழுதடையும்.
சுக்கில வலக பெருக்கம். Benign Prostate Hyper Plasia (புற்று நோயற்ற ப்ராஸ்டேட் செல்களின் அதிகமாக ஏற்படுதல்)
சுக்கில வலக பெருக்கத்தின் காரணங்கள்
சரியான காரணங்கள் தெரியவில்லை. ஆயுர்வேதத்தின் படி திரிதோஷ கோளாறுகள் காரணம். சுக்கில சுரப்பி பெருக்கம் ஆயுர்வேதத்தில் வாதாஸ்திலா எனப்படும். ஏனைய காரணங்கள் – சிறுநீர் கழிக்கும் உணர்வை மதிக்காமல், அடக்கிக் கொள்ளுதல், முதுமை, மலச்சிக்கல், அஜீரணம், பலவீனம்.
அறிகுறிகள்
- சிறுநீர் சுலபமாக பிரியாது. முயன்றாலும் முற்றிலும் போகாது. அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். குறிப்பாக இரவில். சிறுநீரின் வேகமும், அளவும் குறைந்து விடும்.
- சுக்கில வலக வீக்கத்தை கவனிக்காமல் விட்டால், மூத்திரப்பையும் விரிந்து கட்டுக்கடங்காமல் சிறுநீர் தானாகவே பிரிய ஆரம்பிக்கும். சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படலாம். சொட்டு சொட்டாக போகும்.
- மூத்திரப்பை விரிந்தால் அதன் தந்துகி நாளங்கள் விரிவடைந்து, வெடித்து, சிறுநீருடன் ரத்தம் வெளியேறும்.
சிகிச்சை முறை
நவீன மருத்துவத்தில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. வீக்கம் மிதமான அளவில் இருந்தால் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அறுவை சிகிச்சையால் பின்னால் சுக்கில சுரப்பி புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது.
ஆயுர்வேத / இதர முறைகள்
(Saw – Palmetto – Serenova Serrulata) மற்றும் சா – பல்மெட்டோ பரங்கிக்காய் விதைகள் சுக்கில வலக வீக்கத்தை போக்கும் சிறந்த மருந்துகளாக கருதப்படுகின்றன. பரங்கிக்காய் நம் நாட்டில் சுலபமாக கிடைக்கிறது. இதன் விதைகளை நாம் சமையலில் சேர்த்துக் கொள்வதில்லை. இந்த விதைகளில் துத்தநாகம் (Zinc), சில தேவையான கொழுப்பு அமிலங்கள், தாவர ஸ்டிரோல் (Sterol) இருப்பதால் சுக்கில சுரப்பியின் செல்கள் பெருகி வீக்கத்தை உண்டாக்குவதை தடுக்கிறது. சுக்கில சுரப்பி உடலின் மற்ற அவயங்களை விட அதிகமாக துத்தநாகத்தை பயன்படுத்துகிறத. எனவே இந்த வீக்கம் உள்ளவர்களுக்கு பரங்கி விதைகளை (விட்டெறியாமல்) உலர்த்தி வறுத்து சாப்பிடலாம். மேற்சொன்னவை தவிர பரங்கி விதைகளில் பல புரதங்கள், பீடாகரோடின், செலீனியம், கால்சியம், மாங்கனீஸ், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவைகளும் இருக்கின்றன.
பரங்கி விதைகளை (90 கிராம் அளவில்) பொடி செய்து சமைத்த காய்கறிகளில் தூவி உட்கொள்ளலாம். சப்பாத்தி மாவில் போட்டு சப்பாத்தி செய்தும் சாப்பிடலாம். தேனுடன் கலந்தும் உட்கொள்ளலாம். பால், சர்க்கரையுடனும் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.
பரங்கிக்காயின் சாறு 50 மி.லி. எடுத்து, அத்துடன் 1 கிராம் யவக்ஷாரா 12கிராம் பழுப்புச் சர்க்கரை சேர்த்து பருகலாம். யவக்ஷாரா என்பது உலர்ந்த கோதுமை / பார்லி செடியின் சாம்பலிருந்து எடுக்கப்பட்ட அல்கலைன் உப்புக்களாகும்.
அதிக துத்தநாகம் உள்ள கடல் உணவு, மாமிசம், முட்டைகளை உட்கொள்ளலாம். குளிரை தவிர்க்கவும், காப்பி, டீ, மதுபானம், புகைபிடித்தல் இவற்றை கைவிடவும்.
இடுப்பு தசைகளை வலிவூட்டும் பயிற்சிகளை மேற்கொள்ளவும். சிறுநீர் கழிக்கும் போது அடிவயிற்று தசைகளை இறுக்கி, சிறுநீரை நிறுத்து, பிறகு தசைகளை தளர்த்தி, சிறுநீரை வெளிவிடவும். இதை 5-15 முறை செய்யவும்.