கருப்பைப் பிதுக்கம்

Spread the love

கருப்பைப் பிதுக்கம் என்பதை ஆங்கிலத்தில் Prolapse of the Uterus என்பார்கள். கருப்பையின் கீழ் நோக்கிய இடப்பெயர்ச்சி என்றும் இதைக் கூறலாம் Procidere கீழே விழுதல் என்று பொருள். Procidere என்ற சொல்லிலிருந்து Procidere என்ற சொல் எழுந்திருக்கிறது. மேலைநாட்டுப் பெண்களிடம் காணப்படுவதை விட நம் நாட்டுப் பெண்களிடம் கருப்பைப் பிதுக்கம் அதிக அளவில் காணப்படுகிறது.

தனக்கே உரிய தசைகள், தசை நாண்கள் ஆகியவற்றால் கருப்பையானது அதன் இடத்தில் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இவைகளுடன் இணைந்து புணர்புழைத் தசைகளும், திசுக்களும் கருப்பையைத் தாங்குகின்றன. இந்தத் தசைகளும், தசை நாண்களும், திசுக்களும் தொய்வுறுகின்ற போது கருப்பை கீழ் நோக்கி இடம் பெயரத் தொடங்குகிறது.

உணர்குறிகள்

இக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள பெண் தனது புணர்புழை வழியாக ஏதோ கீழே விழுவது போல் உணரக்கூடும். அடி வயிறும் எருக்குடலும் (Rectum) நிறைந்திருப்பது போன்ற ஒரு உணர்வு தோன்றக்கூடும், எப்போதும் அடிவயிறு கனத்துச் சரிவது போன்ற ஒரு சங்கடம் முதுகு வலி, மிதமிஞ்சிய உதிரப் போக்கு புணர்புழைக் கசிவு போன்ற தொல்லைகளும் ஏற்படுவது இயல்பு.

இது தவிர அடிக்கடி சிறுநீர் பிரிவதால் மூத்திரப்பை முற்றிலுமாகக் காலி செய்யப்பட முடிவதில்லை. நுண்மத் தொற்று காரணமாக சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலும் வேதனையும் தோன்றக்கூடும். மலங்கழிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு மலம் முற்றிலும் கழியாமல் போவதுமுண்டு. இத்தொல்லைகள் மாதவிடாயின் போதும் மாதவிடாய்க்கு ஓரிரு நாள் முன்னரும் அதிகரிக்கக்கூடும்.

காரணங்கள்

கருப்பைப் பிதுக்கத்திற்குப் பல காரணங்கள் உண்டு. தொடர்ந்து மிகு உணவு உண்டதாலும், வயிற்றில் மிகுந்த அளவில் கேஸ் என்று சொல்லப்படுகின்ற வாயு நிறைந்து இருப்பதாலும் கருப்பை கீழ் நோக்கித் தள்ளப்படலாம். தொடர்ந்த மலச்சிக்கலினால் பெருங்குடல் பகுதி நிரம்பி கருப்பையை முன்னோக்கித் தள்ளுவதாலும், இறுக்கமான உடைகள் அணிவதாலும் அடிக்கடி குழந்தைப் பேற்றினால் அடிவயிறு மற்றும் புணர்புழைத் தசைகளில் தொய்வு ஏற்படுவதாலும் கருப்பைப் பிதுக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குழந்தைப் பேற்றின் போது தவறான பேறுகால முறைகள் கையாளப்படுவதாலும் குழந்தைப் பேற்றிற்குப் பிறகு போதிய ஓய்வு எடுக்காமையாலும், கருப்பையினுள் இருப்பதாலும் கருப்பைப் பிதுக்கம் ஏற்படலாம். மாதவிலக்கு மறைகின்ற போது ஏற்படுகின்ற சினையகச் சுருக்கத்தின் முன்னோட்டமாகவும் கருப்பைப் பிதுக்கம் உண்டாக வழியிருக்கிறது.

கருப்பைப் பிதுக்கத்தைப் பொருத்தவரை பண்டுவம் செய்வதைக் காட்டிலும் தடுப்பது எளிது. குழந்தைப் பேற்றின் போது தக்க கவனிப்பு. தேவையான ஓய்வு, சத்து மிக்க உணவு, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவற்றால் இதைத்தடுத்து விட முடியும்.

இயற்கை மருத்துவம்

கீழ்நோக்கி இடம் பெயர்ந்த, பிதுக்கதுற்ற கருப்பைக்கு மேலே சொன்னது போல் உணவு, ஓய்வு மற்றும் உடற்பயிற்சி நல்ல குணமளிக்கும். அடிவயிற்றுத் தசைகளுக்கு உரமளிக்கின்ற வகையில் உணவு திட்டமிடப்படவேண்டும். அதிகமாகக் கீழே குனிவது, கனமான பொருட்களைத் தூக்குவது போன்றவைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

பண்டுவத்தின் தொடக்கத்தில் முதல் 5 நாட்களுக்குப் பழங்கள் மட்டுமே உணவாகக் கொள்ளப்பட வேண்டும். மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்கு ஒரமுறை என்ற கணக்கில் நான்கு முறை ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா, ஆப்பிள், திராட்சை போன்ற பழங்களும் பழச்சாறும் உட்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் வெதுவெதுப்பான வெந்நீர் எனிமா கொடுக்கப்பட்டு மலக்குடல் சுத்தப்படுத்தப்படவேண்டும், அதன்பிறகு படிப்படியாகத் திட உணவு மூன்று வகையாகத் திட்டமிடப்படவேண்டும். உணவில் 1 கொட்டைகள். விதைகள், பருப்புகள் 2 காய்கறிகள் 3 பழங்கள் போன்றவைகள் இடம் பெற வேண்டும். இதுதவிர மாதத்திற்கு மூன்று நாட்கள் தனித்த பழ உணவு மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

கருப்பைப் பிதுக்கத்தின் போது நன்கு அரைத்துக் கூழாக்கப்பட்ட பச்சை காரட்டை மெல்லிய துணியில் வைத்து புணர்புழையினுள் செலுத்திச் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் அங்கிருக்கச்செய்ய வேண்டும். இது போல் 12 மணிக்கு ஒரு முறை புதிய காரட் கொண்டு செய்யப்படவேண்டும். இது கருப்பை மற்றும் புணர்புழை சார்ந்த தசைகளையும் திசுக்களையும் வலுப்பெறச் செய்து பிதுக்கத்தை நிவர்த்தி செய்யும்.

எப்சம் உப்பு (Epsom Salt) எனப்படும் Mag.Sulph ஒன்று அல்லது ஒன்றரை கிலோவை ஒரு தொட்டி வெதுவெதுப்பான நீரில் கரைத்து அரைமணி நேரம் உட்கார்ந்து குளித்து வர நல்ல கணம் தெரியும். இக்குளியலைச் சாதாரணமாகப் படுக்கைக்குச் செல்லுமுன் மேற்கொள்வது நல்லது. இது தவிர வெந்நீர், தண்ணீர் இரண்டையும் தனித் தனியாக இரண்டு தொட்டிகளில் நிரப்பி அவையிரண்டிலும் மாறி மாறி உட்கார்ந்து குளிப்பதும் விரைந்து நிவாரணம் தரக்கூடும்.

உடற்பயிற்சி

கால்கள் இரண்டையும் உயர்த்தி வைத்தபடி 30 நிமிடத்திலிருந்து 1 மணி நேரம் வரை படுத்திருக்கலாம், கால்களை நீட்டியபடி தரையில் படுத்துப் பின்னர் கால்களை இயன்றவரை உயர்த்தி ஓரிரு நிமிடங்கள் அதே நிலையில் வைத்திருந்து கால்களை இறக்கும் பயிற்சியை 10 முறை செய்யலாம். பத்மாசனத்தில் அமர்ந்தடி மல்லாந்து படுத்து கால்கள் இரண்டையும் மேல் நோக்கி உயர்த்தும் பயிற்சியும் நல்ல பலனைத் தரும்.

உணவுநலம் ஜனவரி 2014


Spread the love
error: Content is protected !!