படரும் தொழில் வாய்ப்புகள்
முன்பெல்லாம் பாம்பு அல்லது விஷப்பூச்சிகள் கடித்தால், உடனே அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று, மூலிகைச் செடியை பறித்து, அதில் உள்ள சாறு பிழிந்து கொடுப்பார்கள். பாம்பு கடித்தவர் உயிருடன் மீண்டு விடுவார். விஷக்கடியில் இருந்தும் தப்பித்து விடுவார். இதெல்லாம், முந்தைய காலத்திலும், திரைப்படங்களில் நாம் கண்ட காட்சிகள். இப்போது, சாதாரண காய்ச்சலுக்கே மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் தேடி அலைகின்ற நிலை வந்து விட்டது.
நம் குடியிருப்புக்கு அருகில் யாரோ ஒருவர் வைத்திருந்த அபூர்வ மூலிகைகளின் அருமை பெருமைகளெல்லாம் ஆபத்துகள் நேரும்போதுதான் தெரிகின்றது. இப்போது, பார்த்தீர்களேயானால், பெரும்பாலான மூலிகைகள் அபூர்வ மூலிகைகளாகி விட்டன.
எது அரிதாகின்றதோ அதன் மதிப்பும், அதுகுறித்தான தேடலும் அதிகரிக்கும்.
தொழில் துறையில், மூலிகை வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் என்பது பல்வேறு வகைளில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. நம் மூரில் கிழவில் விற்றுக் கொண்டிருந்த கீரைகளை கூட, பெரிய பெரிய நிறுவனங்கள் விற்று பெரிய அளவில் லாபம் ஈட்டக் கற்றுக் கொண்டு விட்டன.
பேருந்துகளில் லேகியம் விற்பவர் முதல் பொதுஇடங்களில் தலைவலி தைலம் விற்பவர்கள் வரையில், மூலதனமான தொழிலாக நம்புவது இந்த மூலிகை வளர்ப்பு மற்றும் விற்பனையைத்தான்.
மூலிகைத் தோட்டம்…
நிலம் இருந்தால் மூலிகைத் தோட்டம் தாராளமாக அமைக்கலாம். அப்படியில்லையென்றால், வீட்டின் மாடியில் அல்லது வீட்டிற்கு அருகில் இருக்கும் சொந்த இடத்தில், மூலிகைத் தோட்டங்கள் அமைக்கலாம். மூலிகைத் தோட்டங்களை அமைக்கும் போது, வேளாண்துறை அதிகாரிகளிடம் அதுகுறித்தான ஆலோசனைகளைப் பெற்று மூலிகைத் தோட்டம் அமைக்க வேண்டும். எந்த மண்ணில் எந்த மூலிகைச் செடி வளரும், எந்த மூலிகைச் செடிக்கு என்னென்ன உரம் போட வேண்டும். எப்படி பராமரிக்க வேண்டும் என்று அனைத்து விஷயங்களையும் அறிந்து கொண்ட பின்னரே இந்த தொழிலில் இறங்க வேண்டும்.
இந்தியாவில் மட்டும் 15,000 அபூர்வ மூலிகைகள் இருப்பதாக வேளாண்துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில், நீங்கள் என்னென்ன மூலிகைகளை பயிர் செய்ய விரும்புகிறீர்கள் என்று நன்கு சிந்தித்து பயிர் செய்ய வேண்டும்.
நல்ல லாபம் ஈட்டலாம்..
மூலிகைத் தோட்டம் வளர்ப்பதற்கு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் இருந்து நிதியுதவி மற்றும் வழிகாட்டுதல் செய்யப்பட்டு வருகின்றன. மூலிகைத் தோட்டம் அமைப்பதற்கு முதலில் நீங்கள் மனதளவில் தயாராகிக் கொள்ள வேண்டும். பின்னர், தேவையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். மூலிகைத் தோட்டம் அமைத்த பின்னர், மூன்று மாதம் முதல் நீங்கள் லாபம் பார்க்க ஆரம்பித்து விடலாம்.
ஏதோவொரு தொழிலை செய்து பணம் மட்டுமே சம்பாதிக்காமல், மருத்துவ உலகிற்கு பங்காளிப்பாக இருக்கும் மூலிகைத் தோட்ட தொழிலை நீங்கள் மேற்கொண்டால், இந்த உலகம் உங்களை தலை வணங்கும்.