பட்டு இழைகள் முதல் நிலை பட்டுப்புழுக்கள் தங்களை சுற்றி நெய்யப்படும் பூச்சிக் கூட்டிலிருந்து (Cocoon) எடுக்கப்படுகின்றன. பட்டுப் புழுக்கள் பிரத்யேகமாக வளர்க்கப்படுகின்றன. இவற்றை மல்பெரி பட்டுப்புழு – Bombyx – Mori என்பார்கள்.
பட்டுப் பூச்சிகள், ஒரு ப்ரத்யேக காகிதத்தில் முட்டையிடுகின்றன. முட்டைகள் பொரித்து, புழுக்கள் வெளிவந்தவுடன் மல்பெரி இலைகள் உணவாக தரப்படுகின்றன. பெருமளவில் மல்பெரி இலைகளை புழுக்கள் உண்ணும். கிட்டத்தட்ட 35 நாட்களுக்கு பிறகு, புழுக்கள் பிறக்கும் போது இருந்ததை விட 10,000 மடங்கு எடை கூடி வளரும்! இப்போது இந்த புழுக்களுக்கு ஒரு பூச்சிக் கூடு வைக்கப்படும். ஒவ்வொரு பட்டுப்புழுவும், இந்த கூட்டைச்சுற்றி, 8 எண் வடிவில் தலையை அசைத்து, அசைத்து பட்டுக்கூட்டை பின்னத் தொடங்கும். புழுவின் தலையிலிருக்கும் இரு சுரப்பிகள் வழியே இழைப்பசை (திரவப்பட்டு) சுரக்கும். திரவப்பட்டு, தண்ணீரில் கரையும். ‘செரிசின்’ (Sericin) என்று பாதுகாப்பு பசையினால் சூழப்பட்டிருக்கும். திரவப்பட்டு, காற்றுபட்டதும் கெட்டியாகி விடும். 2-3 நாட்களில் புழு, 0.60 கிலோமீட்டர் (ஒரு மைல்) நீளமுள்ள இழைகளை நெய்து, தன்னை மூடிக்கொண்டு விடும். இந்த கூட்டுகள் வெந்நீரில் நனைக்கப்பட்டு, பட்டுப் புழுக்கள் கொல்லப்படுகின்றன. சில கூடுகள் அப்படியே விடப்படுகின்றன. காரணம் கூட்டை கிழித்து வெளிவரும் பட்டுப் பூச்சிகள் இனப்பெருக்கத்தினால் மறுபடியும் பட்டுப் பூச்சிகளை உருவாக்க பயன்படுத்தப்படுகின்றன. வெந்நீரில் நனைத்த பூச்சிக் கூடுகளிலிருந்து இழைகள் பிரிக்கப்படுகின்றன.
மல்பெரி மரம்:-
மல்பெரி இலைகள் அல்லாமல், பட்டுப்புழுக்களுக்கு வேறு ஆகாரமில்லை. மல்பெரி மரம் 15 மீ. உயரம் வரை வளரும். சீனாவில் ‘பிறந்த’ மல்பெரி, இனிமையான சிறிய பழங்கள் கொண்டது. இதன் விஞ்ஞான பெயர் Morus Alba. இதன் மரப்பட்டையிலிருந்து நார்கள் எடுக்கப்பட்டு நெய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இலைகள் மாட்டுத் தீவனத்துடன் கலக்கப்படுகின்றன. தொண்டைப்புண், ஜுரம், அஜீரணம் இவற்றுக்கு மல்பெரி பழங்கள் மருந்தாக பயன்படுகின்றன.
பட்டுப்பூச்சி கூடுகள்:-
இந்தக் கூடுகளின் சாம்பல் குருதிப்போக்கை நிறுத்த, மாதவிடாய் காலத்தின் அதிக உதிர போக்கை நிறுத்த மற்றும் பேதியை நிறுத்தவும் மருந்தாக பயன்படுகிறது. வேறு மருந்துகளுடன் கலந்து கொடுக்கப்படுகிறது. பட்டுப்பூச்சியின் கூடு ஆண்மை பெருக்கும் மருந்தாகவும், கண்நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
பட்டாடை உடுத்தல்:-
பொதுவாக வெண்மை நிற ஆடைகளை ஆடவரும், பச்சை, சிவப்பு நிற ஆடைகளை பெண்டிரும் உடுத்துவது நல்லது என்கிறது ஆயுர்வேதம். வெண்ணிற ஆடை வியர்வையை குறைக்கும். எனவே அதிகம் வியர்க்கும் ஆண்களுக்கு வெண்ணிற ஆடை உகந்தது. உடற்சூடு உடலை விட்டு வெளியேறாமல் ஓரளவு தடுக்கும் ‘கொழுப்புப் பிரதேசங்கள்’ பெண்களுக்கு இருப்பதால், அவற்றை பாதுகாக்க சிவப்பு ஆடை சிறந்தது.
பட்டாடைகள் உடல் வியர்வையை பெருக்கக் கூடியதால் எல்லா பருவங்களுக்கும் ஏற்றவையல்ல. பட்டாடை மன மகிழ்ச்சி, அறிவு, ஒளி இவற்றை அதிகப்படுத்தும். வெண்பட்டு, உடல் காங்கை, குளிர், நரம்புத் தளர்ச்சி இவற்றை போக்கும். பொதுவாகவே எவருக்கும் பட்டுத்துணிகள் உடல் எழிலை அதிகப்படுத்தும்.
பவழப் பாறைகள்
வைரம், வைடூரியம் போல் பவழமும் பெண்களால் விரும்பப்படும் ஒரு ஆபரணப் பொருள். பவழம் ஒரு கடல் பிராணியின் உடல் என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம். பவழம் உஷ்ண மண்டல கடல்களில் பரவலாக கிடைக்கும்.
பவழம், சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை தவிர பல வண்ணங்களில் “பாலிப்ஸ்” (Polyps) என்ற சமுத்திர பிராணியின் எலும்புகளில் கடலடியில் கிடைக்கும். சில வகை பாலிப்ஸ் பவழத்தை உண்டாக்குகின்றன. இவை அடிப்படையான எளிய உயிர்கள். இவற்றை பவழப்பூச்சிகள் எனலாம்.
பூவிஞ்ஞானத்தின் படி, காம்பிரியன் (Cambrian) எனப்படும் உலகில் உயிர் தோன்றிய கால கட்டத்தில் (500 மில்லியன் வருடங்களுக்கு முன்) பவழங்கள் தோன்றின.
பாலிப்புகள் பிரிந்து பிராணிகளின் கூட்ட குடியிருப்புகளை உண்டாக்குகின்றன.
கடலடியில், பல வண்ணங்களில், விவரிக்கமுடியாத நிறம், உருவங்களில் கொள்ளை அழகுடன் பாலிப்ஸால் கட்டப்பட்ட பவழப் பாறைகள் காண அற்புதமானவை. கடலின் மற்ற எல்லா இடங்களை விட கண் கவரும் அழகுடன் மிளிர்வது பவழப்பாறைகள் தான். பவழப் பாறைகளால் தீவுகளையும், கடலையும் பிரிக்கும் ஒரு ஆழமில்லா ஏரி, லகூன் (Lagoon) எனப்படும். ஒரு மாலை போல், வட்டமாக அழகாக லகூனை சுற்றி இருக்கும் பவழப் பாறைகள் “அடோல்” (Atoll)எனப்படும்.
இந்த பவழப் பாறைகள், (பிரும்மாண்டமான காலனிகள் – குடியிருப்புகள்). உண்மையில் எலும்புக்கூடுகள், பவழப் பிராணியின் பாதி கீழ்பாகம் ‘கிண்ணம் போல்’ அமைந்துள்ளது. இது கடல் அடிபூமியில் “நங்கூரம்” போல் ஒட்டிக் கொள்கிறது. இவற்றின் மேல் உயிருள்ள ‘பாலிப்ஸ்’ வளருகிறது. ஆபத்தான சமயங்களில், பாலிப்ஸ், புகலிடமாக கீழ்உள்ள கிண்ணத்தில் மறைந்து கொள்கிறது. கிண்ணங்களிலுள்ள கார்பனேட் (சுண்ணாம்பு கல்) பாறைகளாக மாறுகிறது.