இப்போது “ஆவின்” கடைகளுக்கு “தயிர்” வாங்கப் போனால் அங்கு இரண்டு வகை தயிர் கிடைக்கிறது. ஒன்று சாதாரண தயிர். இன்னொன்று சிறிது விலை உயர்ந்த ப்ரோ – பையாடிக் தயிர்.
ப்ரோ – பயாடிக் என்றால் என்ன?
லத்தீன் மொழியில் ப்ரோ வென்றால் ‘அதற்காக’ ‘பயாடிக்’ என்றால் வாழ்க்கை (அ) உயிர். வாழ்க்கைக்கு தேவையானவை என்று பொருள் கொள்ளலாம். உலக சுகாதார குழுமம் / உணவு மற்றும் விவசாய குழுமம் சொல்லும் விளக்கம் ப்ரோ – பையாடிக்ஸ் உயிருள்ள நுண்ணுயிர்கள், இவை தேவையான அளவு கொடுக்கப்பட்டால் உடல் ஆரோக்கியத்தை காக்கும்” – என்பது தான். ‘ஆன்டி – பையாடிக்’ எனும் வார்த்தை அனைவருக்கும் தெரிந்ததொன்று. ப்ரோ பயாடிக் அதற்கு எதிர்பதம். ஆன்டி பையாடிக் தீய பாக்டீரியாக்களின் உயிரை எடுக்கும். ப்ரோ – பையாடிக் நல்ல பேக்டீரியாக்களை ஊக்குவிக்கும். எப்படி ஊக்குவிக்கும். சில உணவின் மூலமாக.
நம்மை சுற்றி காற்று மண்டலம் இருக்கிறது. அத்துடன் ஏராளமான நுண்ணுயிர்கள் பரவியிருக்கின்றன. பல நுண்ணுயிர்கள் நமக்கு நண்பர்கள். சில நுண்ணுயிர்கள் எதிரிகள். நண்பனையும் பகைவனையும் நாம் இனங் கண்டு கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.
பல நுண்ணுயிர்கள் நிரந்தர விருந்தாளிகளாக நமது தோளில், வாயில், நாளங்களில், வயிற்றில் முதலிய இடங்களில் வசிக்கின்றன. இவை பேக்டீரியாக்கள் மட்டுமல்ல பாக்டீரியாவின் பக்கத்து வீட்டுக்காரர்களான யீஸ்டும், புரோட்டஸோவாமும் ஜீரணமாகாத உணவை உட்கொண்டு பிழைத்திருக்கின்றன. வயிற்றில் வாழும் இவற்றில் நமக்கு நன்மை பயக்கும் நண்பர்கள் – லாக்டோ அசிடோபைலஸ் (Lacto – acido philus) லா. சாலிவாரியஸ் (L. Salivarius) லா. கேசி (லி. casei), லா. தெர்மோ பைலஸ் (Lacto thermophilus), பைஃபிடேர் பாக்டீரியா (Bifidum bacteria), லாங்கம் பேக்டீரியா (ஙி – Longum) முதலியவன தீமை பயக்கும் நுண்ணுயிர்கள் – சால்மொனல்லா சிகோலா (Salmonella Shighella), இ.கோலி (E.Coli), கியார்டியா லாம்பிலியா (Giardia lambella), கான்டிடா ஆல்பி கான் (Candida Albicans) முதலியன.
ஜீரண மண்டலத்தில் மட்டும் 400 வகை நுண்ணுயிர் ஊக்கிகள் (Probiotic) உள்ளன. இவை தீய பாக்டீரியாக்களை வளர விடாமல் தடுத்து ஜீரணம் சரிவர நடக்க உதவுகின்றன. இதில் பெரிய பிரிவு லாக்டிக் அமில பாக்டீரியா (Lactic acid Bacteria).
நுண்ணுயிர் ஊக்கிகளின் சரித்திரம்
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில். வயிற்றின் தீய பாக்டீரியாக்களை அழித்து நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கலாம் என்று சொன்னவர் ரஷிய விஞ்ஞானியான Eli Metchnikoff. புரத சிதைவை உண்டாக்கும் சில பாக்டீரியாக்கள் (உதாரணம் Clostridia), பெனால் (Phenols), இன்டோல்ஸ் (Indols) மற்றும் அம்மோனியா போன்றவற்றையும் உண்டாக்கும்.
இந்த நச்சு பொருட்கள் தான் வயதாவதற்கும், முதுமைக்கும் காரணம் என்றார் Metchnikoff. மேலும் புளிக்க வைக்கப்பட்ட பாலை குடித்தால் புரத சிதைவை உண்டாக்கும் தீய பாக்டீரியாக்களின் வளர்ச்சி தடுக்கப்படும். இதனால் அதிக நாள் வாழலாம் என்றார் இந்த ‘நோபல்’ பரிசு பெற்ற இந்த ரஷிய விஞ்ஞானி. அவரே “பல்கேரியன் பாசிலஸ்” (Bulgarian Bacillus) என்ற நுண்ணுயிரை உருவாக்கி தயாரிக்கப்பட்ட புளித்த பாலை அறிமுகப்படுத்தினார். ஆனால் இவரின் கருத்துகள் சரியல்ல என்று 1920 ல் நிரூபிக்கப்பட்டது. ப்ரோ – பையாடிக்ஸ் என்ற வார்த்தை 1953 ல் கொல்லாத்(Kollath) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
தீய பாக்டீரியாவினால் ஏற்படும் பாதிப்புகள்
பேதி, சிறுநீர் எரிச்சல், தசை வலிகள், ஊட்டச் சத்து குறைபாடுகள் பருக்கள், தலைவலி, களைப்பு, முதலியன.
நுண்ணுயிர் ஊக்கி (Probiotics)யின் செயல்பாடுகள் / நன்மைகள்
- உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகப்படுத்தும் கிருமிகளுடன் வளர்ச்சிக்காக போட்டி போட்டு, ரத்தத்தில் உள்ள இயற்கை கிருமி நாசினியான லிம்போசைட்ஸ் (Lymphocytes) ஊக்குவிக்கும். குழந்தைகளின் பற்சிதைவை தடுக்கும்.
- சுவாச தொற்று நோய்கள் ஏற்படுவதை தவிர்க்கும்.
- அல்சர்களை உண்டாக்கும் Helico bacter pylori ஐ அழிக்கும் சிகிச்சையில் பயன்படும் மருந்துகளோடு இணைந்து செயல்பட்டு உதவும்.
- ஆன்டி – பையாடிக் மருந்துகளில் ஏற்படும் பேதியை (Diarrhoea) கட்டுப்படுத்தும். ஆன்டி பையாடிக் மருந்துகளால் Clostridium difficile என்ற கிருமி – பேக்டீரியா தோன்றலாம். நுண்ணுயிர் ஊக்கிகளால், இந்த வகை பேதியில் 50% ஐ குறைக்க முடியும் என்பது ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. தவிர, ஆன்டி – பையாடிக் சிகிச்சையில் புரோ – பையாடிக்கும் இடம் பெற்றால், நிவாரணம் சீக்கிரம் கிடைக்கும். திரும்பவும் தொற்றுநோய் வருவது தடுக்கப்படுகிறது.
- நுண்ணுயிர் ஊக்கிகள் பெருங்குடலில் சேர்ந்து அங்கு தொற்று நோய் தாக்காமல் பாதுகாக்கின்றன. உணவு ஒவ்வாமைகளை தடுக்கின்றன. பெருங்குடல் புற்றுநோயை தடுக்கின்றன.
- தீய நுண்ணுயிர்களை எதிர்க்கும் ‘பேக்டீரீயோசைன்’ (Bacteriocins) என்ற பொருளை சுரக்கின்றன.
- ரோடோ – வைரஸ் (Roto – virus) தாக்குதலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் நோயிலிருந்து பாதுகாக்கும். சக்தியை அதிகமாக்குவது.
- பெண்களின் பிறப்புருப்புகளில் அடிக்கடி உண்டாகும் தொற்றுநோய்கள் தவிர்க்க நுண்ணுயிர் ஊக்கிகள் உதவும். கிருமிகளை அழித்து நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகமாக உதவும்.
- நுண்ணுயிர் ஊக்கிகளில் ஒன்றான Bifido bacterium ஆன்டி – பையாடிக் சிகிச்சைக்கு பிறகு ஏற்படும் பக்க விளைவுகளை குறைக்கிறது.
- தோலில் ஏற்படும் எக்ஸிமா போன்ற ஒரு அலர்ஜியை Atopic dermatitis என்பார்கள். சாப்பிட்ட ஏதோ ஒரு பொருளால், தோலில் வரும் இந்த அலர்ஜியை கட்டுப்படுத்துவதற்கு நுண்ணுயிர் ஊக்கிகளை பயன்படுத்தலாம் என்பது சில வைத்தியர்களின் கருத்தாகும்.
- பொதுவாக நுண்ணுயிர் ஊக்கிகளை உபயோகிப்பதால் தொற்று நோய்களை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது.
- கொலாஸ்ட்ரலை குறைத்து, இதயத்தை காக்கும்.
நுண்ணுயிர் ஊக்கிகளால் ஏற்படும் பக்க விளைவுகள்
இவை உள்ள உணவுகளை உண்பது பத்திரமானது, பாதுகாப்பானது என்கிறது உலக சுகாதார குழுமம் (WHO). இருந்தாலும் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு Probiotics கொடுக்கக் கூடாது. ஆபத்தான லேக்டோ பாசில்லஸ் செப்டிசீமியா (Lacto bacillus septicaemia) உண்டாகலாம். இது ஆனால் அபூர்வம்.
நல்ல நுண்ணுயிர் ஊக்கிகளின் தன்மை
குடலின் சுவர்களில் நன்கு படியும் தன்மை, பாக்டீரியாவை எதிர்க்கும் சக்தி, கொலஸ்ட்ரால் ஜீரணம், வைட்டமின்களை உண்டாக்குவதை ஊக்குவிப்பது போன்றவை இருக்க வேண்டும்.
சில நுண்ணுயிர் ஊக்கிகள்
லேக்டோ பாசில்லஸ் அசிடோபைலஸ் (Lacto bacillus acido philus) இவைகளை உட்கொண்டால் வயிற்றின் செயல்பாடுகள் ‘சுறுசுறுப்பாக’ நடக்கும். மலச்சிக்கல் மறையும். இந்த நுண்ணுயிர் பாலில் காணப்படும்.
பைஃபிடோ பாக்டீரியா – இதை, தாய்ப்பால் குடித்து வரும் குழந்தையிலிருந்து பிரித்து எடுத்தவர் ஹென்றி டிச்சியே (Henry Tissier) என்பவர். குழந்தைகளின் பேதியை கட்டுப்படுத்தும் குணமுடையது.
இதர நுண்ணுயிர் ஊக்கிகள் – லா. கேஸி (L. casei), லா. சலிவாரியஸ் (L. Salivarious) சாக்ரோமைசெஸ் புலார்டி (Saccharomyces Boulardi), லா. லாக்டிஸ் (L. Lactis), லா. பல்கேரிகஸ் (L. Bulgaricus) லாஃபர்மெண்டம் (L. Fermentum), என்ட்ரோகாக்கஸ்ஃபேசியம் (Enterococcus faciem) முதலியவை நுண்ணுயிர் ஊக்கிகள் இப்போது மோர், பால், தயிர் போன்ற உணவுப் பொருட்களுடன் சேர்க்கப்பட்டு கிடைக்கிறது. தவிர தனியாகவே, காப்சூல், மாத்திரை, பவுடர், திரவ ரூபங்களிலும் கிடைக்கின்றன. இவை தரும் பயன்களால், மேலும் பரவலாக நுண்ணுயிர் ஊக்கிகளின் உபயோகம் பெருகும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆயுர்வேதமும், நுண்ணுயிர் ஊக்கிகளும்
பாலை புளிக்க வைத்து தயிராக்குவது, உணவில் அதன் அவசியம் பற்றி வேதகாலத்திலேயே நமது முன்னோர்களுக்கு தெரிந்திருந்தது. ஆயுர்வேதம் உடலில் தேங்கி நிற்கும் நச்சுப் பொருட்களால் (ஆமா) போஷாக்கு குறைவு ஏற்படும். இவை திசுக்களில் தங்கி வயிற்றில் அழற்சியை உண்டாக்குகின்றன.