வியர்க்குரு மற்றும் வேர்க்குரு என்று அழைக்கப்படுகின்றது. இது அதிகளவு வெப்பம் மற்றும் தேவையான காற்றோட்டம் இல்லாததால் சருமத்தின் மீது ஏற்படும் ஒரு வகை பிரச்சனையாகும். வியர்வை சுரப்பியிலிருந்து, வியர்வை சுரந்து வெளிவரும் பாதையில் ஏற்படும் அடைப்புகள் தான் வியர்க்குருவை உண்டாக்குகிறது.
அதிகமான தூசி, புகை மற்றும் மாசு கலந்த வெப்ப காற்று ஆகியவற்றால் தோலில் அலர்ஜி உண்டாகிறது. வியர்க்குரு முகம், கழுத்து மற்றும் மார்பு பகுதியில் அதிகளவு காணப்படுகின்றது. வியர்க்குரு வந்தாலே உடல் முழுவதும் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.
நாம் நம்முடைய உடல் வெப்பத்தையும் அதன் தட்ப வெப்ப நிலையையும் பேணுவது மிகவும் அவசியமானதாகும். இதற்கு மிகவும் எளிமையான, வீட்டிலேயே செய்யக்கூடிய பாரம்பரிய மருத்துவ குறிப்புகளை பார்ப்போம்.
வியர்க்குரு வகைகள்:
1. மிலியரியா கிரிஸ்டலைன் (சருமத்தின் மேற்புறத்தில் காணப்படும் அடைப்புகள்)
2. மிலியரியா ரப்ரா (சருமத்தின் மத்தியில் காணப்படும் அடைப்புகள்)
3. மிலியரியா புரோஃபண்டா (சருமத்தின் உள் அடுக்கில் காணப்படும் அடைப்புகள்)
வியர்க்குரு அறிகுறிகள்:
வியர்வை சுரப்பி நாளங்கள் அடைபடுவதால், உள்ளே இருக்கும் வியர்வையானது சருமத்திற்குள் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் தோல் மீது சிறிய அளவில் சிவந்தும், தடித்தும் காணப்படும். இந்த வீக்கம் அரிப்பையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. அதிகமாக வெயில் நேரங்களில் வெளியே செல்வதால், சிறிய அளவில் உள்ள வீக்கமானது பெரிதாகிறது. இதனால் அதிகளவில் எரிச்சல் உண்டாகிறது. இதுவே வியர்க்குருவின் அறிகுறிகளாகும். இந்த பிரச்சனையை சில எளிமையான இயற்கை வைத்தியம் மூலம் சரிசெய்யலாம்.
வீட்டு வைத்தியம்:
சந்தனப்பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் இவ்விரண்டையும் ஒன்றாக கலந்து, வியர்க்குரு இருக்கும் இடத்தில் தடவி இருபது நிமிடம் கழித்து கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வர வியர்க்குரு முழுவதும் நீங்கிவிடும்.
சந்தனப்பவுடர், வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து, வியர்க்குரு இருக்கும் இடத்தில் தடவி இருபது நிமிடம் கழித்து கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வர, நல்ல பலனை காணலாம். குளிக்கும் போது சோப்பு பயன்படுத்தாமல், கடலை மாவு அல்லது பயத்த மாவு போட்டு குளிப்பது நல்ல பயனளிக்கும்.
தயிரை வியர்க்குரு இருக்கும் இடத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவிவர நல்ல பலனை காணலாம். இளநீர் மற்றும் அதன் வழுக்கு இரண்டையும் சேர்த்து அரைத்து அந்த கலவையை வியர்க்குரு இருக்கும் இடத்தில் தடவி பதினைந்து நிமிடம் கழித்து கழுவிவர நல்ல மாற்றத்தை காணலாம்.
மேலும் மோர், இளநீர், நுங்கு இவற்றை அருந்துவது நல்லது. இதனால் உடல் சூடு தணிந்து வியர்க்குரு குறையும். எண்ணெய், கிரீம் இவற்றை போடுவதை தவிர்க்கவும். இதனால் வியர்க்குரு குறைவதில்லை. இவைகள் வியர்வை நாளங்களை அடைத்துவிடுகிறது.
வாசனையோ, சாயமோ, மிகுந்த சோப்புகளை பயன்படுத்தி குளிப்பதை தவிர்ப்பது நல்லது. குளிர்ந்த நீரில் குளிக்கலாம். தூங்கும் அறையை குளிர்ச்சியாகவும், காற்றோட்டமாகவும் வைப்பது நல்லது. இதனால் வியர்வை வராமல் தடுக்கலாம். சருமத்திற்கு எரிச்சலூட்டும் இறுக்கமான ஆடைகளை தவிர்த்து, காட்டன் வகை ஆடைகளை அணிவது நல்லது. தினமும் இருமுறை குளிப்பது அவசியம். நார் கட்டிலில் தூங்குவதன் மூலமும் வியர்க்குரு வராமல் தடுக்கலாம்.
எலுமிச்சை சாறு குடித்து வருவதால் வியர்க்குரு குறைந்து, மேலும் வராமல் தடுக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 3-4 டம்ளர் வரை எலுமிச்சை ஜுஸ் குடித்து வந்தால், பதினைந்து நாட்களில் இதன் பலனை காணலாம்.
சந்தனப்பவுடர், மல்லித்தூள் ஆகியவற்றில் இரண்டு டீஸ்பூன் எடுத்து கொள்ளவும். அதில் 2-3 டீஸ்பூன் பன்னீர் விட்டு நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி நன்கு உலரவிட்டு, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் நல்ல பலனை காணலாம்.
வேப்பிலை ஒரு கப், சந்தனம் இரண்டு, மஞ்சள் அரை கப், அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு, ரோஸ் வாட்டர் அரை டீஸ்பூன், இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து, அந்த கலவையை வியர்க்குரு இருக்கும் இடத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம். இது மிகவும் விரைவில் பயனளிக்க கூடியதாகும். இதை வாரத்திற்கு இரு முறை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.
தேவையான அளவு வேப்பிலையை எடுத்து, அதை சிறிதளவு நீர் ஊற்றி நன்கு மையாக அரைக்கவும். இந்த கலவையை வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி 2-3 மணி நேரம் உலர விட்டு பின் கழுவவும். இதிலுள்ள கிருமிகளை அளிக்க கூடிய சக்தி, வியர்க்குருவில் உள்ள கிருமிகளை எளிதில் அழித்து விடுகிறது. இதனால் விரைவில் பலனளிக்கிறது. மேலும் வேறு எவ்விதமான தோல் பிரச்சனையும் ஏற்படாமல் தடுக்கிறது.
கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து அதை வியர்க்குரு இருக்கும் இடத்தில் தடவி 15 நிமிடங்கள் சென்றபின் கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால், வியர்க்குருவினால் ஏற்படும் அரிப்பு குறைவதை காணலாம். மேலும் கற்றாழை மற்றும் மஞ்சள் சேர்த்து வியர்க்குரு இருக்கும் இடத்தில் பூசி வந்தால் நல்ல பலனை காணலாம். சோற்றுக்கற்றாழை சாறு குடிப்பதால் வியர்க்குரு வராமல் தடுக்கலாம்.
வெள்ளரிக்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதை 10-&15 நிமிடங்கள் வரை வியர்க்குரு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் இரண்டு நாட்களில் நல்ல மாற்றத்தை காணலாம்.
சாதம் வடித்த தண்ணீர் வியர்க்குருவை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த முறை நம் நாட்டில் பாரம்பரியமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த சாதம் வடித்த தண்ணீரை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நல்ல மாற்றத்தை காணலாம்.
ஜோ.கி.