இளமையில் நரை

Spread the love

இளமையில் வறுமை கொடியது போல, இளமையில் நரையும் கொடுமை தான். நரையால் முதிர்ந்த தோற்றம் ஏற்படுவதால், தாழ்வு மனப்பான்மை உண்டாகும். ஆயுர்வேதம் பித்தாதிக்கத்தால் தலைமுடி நரைக்கிறது என்கிறது. சிறுவயதிலேயே முடி நரைத்தால் மருத்துவரை அணுகவும்.

நமது தலைமுடியின் நிறம், பிறப்பிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. முடிஉறை (Follicle) அடியிலிருக்கும் “மெலானோசைட்ஸ்” நம் முடிக்கு நிறமளிக்கும் செல்கள். இவை ‘மெலானின்’ என்ற நிறமியை தயாரிக்கின்றன. மெலானின் அளவுப்படி தோல், முடி நிறங்கள் அமைகின்றன.

வயதாகும் போது மெலானின் உற்பத்தி குறைந்து, பின் நின்று விடும். வயதால் முடி நரைத்தால், அதற்கு மாற்று இல்லை. நரைமுடியை மீண்டும் கறுப்பாக மாற்று வழி இல்லை. ஆனால் இளம் வயதிலேயே தலை நரைத்தால் அதை குணப்படுத்தலாம்.

இளநரை வர காரணங்கள்

1. பரம்பரை – பெற்றோர்களுக்கு, முடிக்கு நிறம் தரும் மெலானின் குறைபாடு இருந்தால், அவர்களின் மக்களுக்கும் இளநரை தோன்றும் வாய்ப்புகள் அதிகம்.

2. தைராய்டு பிரச்சனை

3. உடற் காங்கை (உஷ்ணம்) இளவயது நரைக்கு காரணமாகும்.

4. உடல் ஆரோக்கிய பாதிப்புகளும், உணவுச்சத்து குறைபாடுகளும் காரணமாகலாம். குறிப்பாக ‘பி’ வைட்டமின் குறைபாடுகளும். நரை தோன்ற காரணமாகும். இளநரைக்கு சிகிச்சையாக ‘பி’ வைட்டமின் கொடுக்கப்பட்டதில், நல்ல பலன் கிடைக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

5.  வைட்டமின் ‘கே’ குறைபாடும் நரை வர காரணமாகலாம். இந்த வைட்டமின் கறிவேப்பிலை, நெல்லிக்காய், சுண்டைக்காய், பாகற்காய், பீர்க்கங்காய், பீட்ரூட், நாவல் பழம் இவற்றில் உள்ளது.

6. சோகையும் காரணமாகலாம்.

7. சில மருந்துகள், எக்ஸ்ரே கதிர்கள் இவைகளும் இளநரையை உண்டாக்கலாம்.

ஆயுர்வேதம் டாக்டர் எஸ். செந்தில் குமார் எழுதிய முடி கொட்டுவதை தடுக்க என்ற புத்தகத்திலிருந்து.

இளநரையை போக்க

•             ‘தலை பொதிச்சல்’ முறையால் தலைக்கு மூலிகை மருந்து களிம்பை தடவுவது ஆயுர்வேத சிகிச்சை முறை. தவிர மூக்கில் மூலிகை தைலங்கள் விடும் ‘நாஸ்யம்’ தவிர வமனம், சிரோவஸ்தி, விரேசனம் இவைகளும் தோஷ கோளாறுகளுக்கு ஏற்ப செய்யப்படும்.

•             உடலின் நோய் தடுப்பு சக்தியை பலப்படுத்த ‘ரசாயனம்’ என்ற சிறந்த சிகிச்சையும் செய்யப்படும். மேற்சொன்ன சிரோவஸ்தி தவிர சிரோதாரா, மற்றும் உள்ளுக்கு ச்யவனபிராசம், பிரம்ம ரசாயனம் போன்ற மருந்துகளும் கொடுக்கப்படும்.

•             ஒவ்வொருவருக்கும் ஏற்ற மாதிரி, ஆயுர்வேதத்தில் அற்புத தைலங்கள் உள்ளன. இவற்றால் இளநரையை தடுக்கலாம். ஆயுர்வேத வைத்தியரை அணுகவும்.

•             கறிவேப்பிலை, முடியையும் கண்களையும் பாதுகாக்கும். இளநரை முடி உதிர்தல் இவற்றை தவிர்க்கும். கறிவேப்பிலையை தினசரி உணவில், சாம்பார், ரசம் தாளிக்கையில், சட்னியாக, துவையலாக சேர்த்துக் கொள்ள வேண்டும். கறிவேப்பிலையை பச்சையாக அரைத்து உபயோகித்தால் அதன் முழுப்பலன் கிடைக்கும். கறிவேப்பிலை போலவே கரிசிலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி கீரைகளும், முடி கருமையாக வளரவும், நரை வராமல் தடுக்கவும் செய்யும். இந்த மூன்று கீரைகளையும் இரண்டு மாதம் பயன்படுத்தினால் உடற்சூடு தணிந்து, கண்கள் குளிர்ந்து, முடியும் ஆரோக்கியமடையும். கறிவேப்பிலையை பச்சையாகவே வெறும் வயிற்றில், காலையில் சாப்பிட்டு வரலாம்.

•             மருதாணி, செம்பருத்தி, கறிவேப்பிலை மூன்றையும் சம அளவில் கலந்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து, சிறிது நேரத்திற்கு பிறகு அலசி குளித்தால் இளநரை முடி, கறுப்பாகும். இதே போல கறிவேப்பிலை, கரிசிலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி கீரைகளை பயன்படுத்தலாம்.

•             மேற்சொன்ன கீரைகளுடன், கீழாநெல்லியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

•             ஒரு கைப்பிடி அளவு பச்சைத்துளசி இலையை எடுத்து ஒரு கப் தண்ணீரில் இட்டு காய்ச்சி பின்னர் இந்த நீரை எடுத்து இளம் சூட்டோடு தலையில் உரசி முடி வேர்க்கால் முதல் நுணிவரை தினசரி தடவி வந்தால் நரை நீங்கும். முடி கறுமை நிறம் பெறும். ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலையை எடுத்து மைபோல அரைத்து அத்துடன் 50 மிலி தேங்காய் எண்ணெயையும் 25 மிலி தண்ணீரும் சேர்ந்து காய்ச்சி எண்ணெயை எடுத்து வடிகட்டி வைத்துக் கொண்டு தினசரி குளிக்கும் முன்பு தலையில் அரைமணி முன்பாக தடவி பின்பு குளித்து வர, நரை நீங்கும்.

•             கீழ்க்கண்டவற்றை விழுதாக செய்து கொள்ளவும். மருதாணி பொடி – 1 டீஸ்பூன், தயிர் – 1 டீஸ்பூன், வெந்தயப்பொடி – 1 டீஸ்பூன், காபி – 1 மேஜைக்கரண்டி, புதினா சாறு – 2 மேஜைக்கரண்டி, துளசி சாறு – 2 மேஜைக்கரண்டி, இந்த விழுதை தலையில் 2 லிருந்து 4 மணி நேரம் வைத்து ஊறவும். பிறகு இயற்கை ஷாம்புவால் அலசவும்.

•             இஞ்சியை சீவி, தேனுடன் கலந்து வைத்துக்கொள்ளவும். தினமும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வரவும்.


Spread the love