கர்ப கால உணவு முறை

Spread the love

இந்த பிரபஞ்சத்தின் உத்வேகம் இனப்பெருக்கம் தான். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பெருமிதமான தருணம் கருவுறுவது தான். ஒரு உயிரிலிருந்து இன்னொரு உயிர் உருவாவது பிரமிக்கத்தக்க விஷயம்.

ஒரு கிண்ணம் நிறைய, வழிய வழிய இருக்கும் எண்ணெய்யை சிந்தாமல் சிதறாமல் எடுத்துச் செல்வது போல் கடினமானது கர்ப்பமான பெண்ணை கவனித்து பாதுகாப்பது என்கிறது சரகசம்ஹிதை.

ஆயுர்வேதத்தில் உள்ள எட்டு வகை வைத்திய பிரிவுகளில் “பால சிகிச்சை” அதாவது குழந்தை வைத்தியமும் உண்டு. பால சிகிச்சை, ஒரு பெண்மணி கருத்தரித்த நாளிலிருந்தே தொடங்குகிறது. ஏன், குழந்தை பிறப்பதற்காக கணவன் மனைவி கலவியில் ஈடுபடும் போது கவனிக்க வேண்டிய நியமங்களை கூட ஆயுர்வேதம் விவரிக்கிறது. ஒரு பெண் கர்ப்பமுற்றதை கண்டுபிடிக்க பல பரிசோதனைகள் இந்த காலத்தில் இருக்கின்றன. ஆயுர்வேதம் கருவுற்றிருப்பதை சில நுட்பமான உணர்வுகளால், கலவியின் போதே ஒரு பெண்மணி தெரிந்து கொள்ள முடியும் என்கிறது. இந்த உணர்வுகள் – வாயில் உமிழ்நீர் அதிகமாக ஊறி வெளிவருதல், உடல் பருமனாக தோன்றுதல், களைப்பு, சோர்வு, சோம்பல், மயிர்க்கூச்சம், இதயத்தில் ஒரு வித சங்கடம், மன நிறைவு, தாகம் முதலியன. மாதவிடாய் நிற்பது போன்ற இதர அறிகுறிகள் அனைவருக்கும் தெரிந்தவை.

கருவுற்றிருப்பது உறுதியானால், கர்ப்பிணி தனக்கும், வயிற்றில் உருவாகியிருக்கும் தன் குழந்தைக்கும் சேர்த்து, இருவர்க்கான உணவை உட்கொள்ள வேண்டும். இந்த நியமத்தை உணவு அளவில் அதிகமாக எடுத்துக் கொள்வதை விட, ஊட்டச்சத்தை அதிகமாக உண்பது தான் சரி. கர்ப்பகாலத்தில் போஷாக்கு நிறைந்த சமச்சீரான உணவை உண்டால், பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

உணவு நியமத்தைப் பொறுத்த வரை, கருவுற்றவுடனே பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை

மலச்சிக்கல், அஜீரணம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மீந்து போன, பழைய உணவுகளை உட்கொள்ளாமல், புதிதான சூடுள்ள, சுவை மிகுந்த உணவுகளை உட்கொள்வது அவசியம்.

புளிப்பு, காரம் நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்.

‘விரதம்’ என்று பட்டினி இருக்கக் கூடாது.

சத்தான உணவும், சுத்தமான உணவும் கர்ப்பிணிக்கு தேவை. அதே சமயம் கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைக்கவும். ஆனால் நெய் போன்றவை, மனதுக்கு பிடித்தமானவை, இனிப்பும் நெய்யும் உள்ள உணவுகளை கர்ப்பிணிகள் உண்ண வேண்டும் என்கிறது ஆயுர்வேதம்.

கர்ப்பிணிக்கு ஆயுர்வேதம் (சரகசம்ஹிதை) சொல்லும் ஆகார முறை

சூலுற்றவளின் முதல் மாத ஆகார முறை

‘கரு தங்கியுள்ளது’ என ஐயம் தோன்றிய உடன் முதல் மாதத்தில் எதையும் கலக்காமல் தூயதாக உள்ள பாலைக் காய்ச்சிக் குளிரச் செய்து தக்க அளவில் அவ்வப் பொழுது சூலுற்றவள் அருந்தி வர வேண்டும்.

உடலுக்கு ஒத்துவரும் உணவை மாலையிலும் காலையிலும் புசித்து வர வேண்டும்.

இரண்டாவதிலிருந்து 5 – வது மாதம் வரை

இரண்டாவது மாதத்தில் இனிப்பான மருந்து மூலிகைகளைக் கலந்து தயாரிக்கப்பட்ட பாலை மட்டுமே அருந்தி வர வேண்டும்.

மூன்றாது மாதத்தில் தேனையும் நெய்யையும் கலந்து தயாரித்த பாலை அருந்தி வர வேண்டும்.

நான்காவது மாதத்தில் பாலிலிருந்து எடுத்த (அக்ஷம் எனும்) வெண்ணெயை ஒரு கவள அளவு புசிக்க வேண்டும்.

ஐந்தாவது மாதத்தில் பாலிலிருந்து எடுத்த வெண்ணெயைக் காய்ச்சி அந்த நெய்யை அருந்த வேண்டும்.

ஆறாவது மாதத்தில் பாலிலிருந்து எடுத்த வெண்ணெயில் தயாரான நெய்யை இனிப்பு மருந்துகளுடன் கலந்து பக்குவம் செய்து அந்த நெய்யைப் பருக வேண்டும்.

ஏழாவது மாதத்தில் அதே நெய்யைப் பருக வேண்டும்.

எட்டாவது மாதத்திய பணிவிடை

எட்டாவது மாதத்தில் கருவிற்குத் தலைமயிர் முளைக்குமாகையால் அச்சமயம் தாய்க்கு உடல் எரிச்சலுண்டாகுமென்று பெண்கள் கூறுவர். அது சரியல்ல என ஆத்திரேயர் கூறுவார்.

ஏழாவது மாதத்தில் கரு பெரியதாகி தாயின் மார்புப்பகுதியில் உரைதலால் வாத பித்த கபங்கள் என்னும் தோஷங்கள் மூன்றும் சீற்றமடைந்து ஒன்றுகூடி எரிச்சலைத் தோற்றுவிக்கும். அதனால் தினவு உண்டாகும். அதன் காரணமாக தோல்கள் பிளக்கக் கூடிய எனும் சதை நோய் தோன்றும்.

எட்டாவது மாதத்தில் அருந்த வேண்டிய பானம், உணவு முதலியன

உடல் மீது தினவு தோன்றிய போது இனிப்பான மருந்துப் பொருட்களைக் கலந்து தயாரித்த இலந்தைக் காய் நீரின் அநுபானத்துடன் (உள்ளங்கை) அளவு தக்க காலத்தில் உணவை அருந்தச் செய்ய வேண்டும். சந்தனம் தாமரைத் தண்டு இவற்றின் கல்கத்தினால் (மைய அரைத்த பூச்சினால்) தனங்கள் மீதும் வயிற்றின் மீதும் தேய்க்க வேண்டும். கல்கம் – ஒரு பொருளைக் கல்வம் என்னும் கற்பாண்டத்தில் நீர் இட்டுமைய அரைத்து எடுத்தலே கலகமெனப்படும்.

மற்றும் காட்டுவாகைப்பூ, காட்டாத்திப்பூ கடுகு அதிமதுரம் என்பவற்றின் சூரணத்தையோ, வெட்பாலை அர்ஜகமெனும் நிலத்துளசி விதை கோரைக்கிழங்கு மஞ்சள் இவற்றின் கல்கத்தையோ.

த்ரிபலா – கடுக்காய் தான்றிக்காய் நெல்லிக்காய் இம்மூன்றின் கூட்டு த்ரிபலா எனப்படும். இதை அப்பெண்ணின் தனங்களின் மீதும் வயிற்று மீதும் பூசித் தேய்க்க வேண்டும். மற்றும் கரவீரம் என்னும் அலரியின் ரசத்தினால் தயாரித்த தைலத்தால் தேய்த்துக் குளிப்பாட்ட வேண்டும். (கரவீரம் – அலரி).

ஜாதிக்காயையும் அதிமதுரத்தையும் கலந்து காய்ச்சிய நீரால் நனைக்க வேண்டும். இது தினவை குறைக்கும். தவிர தினவு ஏற்பட்ட போது நகத்தால் சொறிந்தால் தோல் பிளந்து மாற்றம் ஏற்படும். எனவே நகத்தால் சொறிவதைத் தவிர்க்க வேண்டும். தினவு அதிகமாகி பொறுக்க முடியாத நிலை ஏற்பட்டால் கையால் அழுத்தித் தேய்த்து தினவைத் தணியச் செய்ய வேண்டும், சொறியக் கூடாது.

வாதத்தை நீக்குவதும் எண்ணெய்ப்பசை உப்புச் சுவை சிறிதளவே கொண்டதும் இனிப்புச் சுவையை முக்கியமாகக் கொண்டதுமான உணவைப் புசிக்க வேண்டும். அப்பொழுது சிறிதளவு நீரையும் பருகலாம்.

எட்டாவது மாதத்தில் கஞ்சியருந்தும் முறை

பால் கலந்து பக்குவம் செய்த கஞ்சியில் நெய்யை அதிக அளவில் கலந்து அவ்வப்பொழுது அருந்த வேண்டும். அத்தகைய பால் கஞ்சியை அருந்தினால் உடல் நலம் உடல் வலிவு நிறம் குரல் நல்ல உடலமைப்பு இவையனைத்துமுண்டாகி சுற்றத்தாரனைவரிலும் சிறப்பான நற்குணங்கள் மேலிட்ட மகன் பிறப்பானாகையால் அவசியம் பால் கஞ்சியை அருந்த வேண்டுமென்பது புனர்வசுவின் கருத்து.

ஒன்பதாவது மாதத்தில் அனுபான முறை

சூலுற்றவளுக்கு ஒன்பதாவது மாதத்தில் இனிய மருந்து வகைகளை ஒன்று சேர்த்துத் தயாரித்த எண்ணெயைக் கொண்டு அனுவாஸன வஸ்தியைச் செய்ய வேண்டும். அனுவாஸனவஸ்தி – எண்ணெயை ஆசனத்துவாரத்தின் மூலம் குடலுக்குள் புகுத்திச் செய்யும் சிகிச்சை.

கடமைகளை முறைப்படி செய்வதன் பயன்

சூலுற்றவள் முதல் மாதம் தொடங்கி ஒன்பதாவது மாதம் வரை பின்பற்ற வேண்டிய ஆகாராதி முறைகளை முறைப்படி பின்பற்றினால் கருவை தாங்கும் வயிற்றுப்பகுதி பின் தட்டுகள் பக்கங்கள் முதுகு இவையனைத்தும் மெத்தென்றாகும். வாதம் கீழ்நோக்கிப் பரவும், சிறுநீரும் மலமும் மாற்றமடையாமல் சுகமாகத் தம் வழிகளில் இருக்கும். சருமமும், நகங்களும் மெத்தென்றிருக்கும். உடல் வலிவும் நிறமும் வளரும். செல்வத்துடன் இன்பங்களை அனுபவிக்கக் கூடிய தனக்கு விருப்பமான மகனையோ மகளையோ சுகமாக ஈன்றெடுப்பாள்.

சூலுற்ற பெண்கள் நன்றாகவும் உண்ண வேண்டும். அதே சமயம் உடல் எடை குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏறக்கூடாது. இந்த குறிப்பிட்ட அளவு என்னவென்றால் வழக்கமான எடையை விட 10 (அ) 12 கிலோ வரை அதிகரிக்க வேண்டும். இதற்கு மேல் (சத்தை) முழுவதையும் தாயிடமிருந்து ‘இழுத்துக் கொள்கிறது’.


Spread the love