பெண்கள் திருமணத்திற்குப் பின்பு ஆவலாக எதிர்பார்ப்பது மகனோ, மகனோ பிள்ளைப் பெற்றுப் பாலூட்டி மகிழ வேண்டும் என்பது தான். ஆண், பெண் உடலுறவு மட்டும் கர்ப்பம் தரிப்பதை உறுதிப் படுத்த இயலாது. ஆண் மலட்டுத் தன்மை இல்லாதவனாக இருக்க வேண்டும். பெண்ணும் கர்ப்பப் பை சார்ந்த கோளாறுகள் இன்றி, நல்ல உடல் ஆரோக்கியத்திலும் இருந்தால் கர்ப்பம் தரிப்பது எளிதாகி விடும். கர்ப்பப் பை கோளாறுகள் பல உள்ளன என்பதால், அதனை அறிந்து கொண்டு தகுந்த மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம் ஆகிறது. மொத்தம் 21 வகையான கர்ப்பப் பை கோளாறுகள் உள்ளன என ஆயுர்வேதம் கூறுகிறது.
கருப்பையில் கிருமிகள் நிறைந்து, அதில் வாயும் சேர்ந்து இருந்தால் உடலுறவு நேரத்தில் முதுகு வலி ஏற்படும். உடலுறவில் வெளிப்பட்ட ஆணின் விந்துவை அக்கிருமிகள் சாப்பிட்டு விடும். கரு தரிக்காது போகும்.
கர்ப்பப் பையில் சதை அதிகமாக இருந்தால், நெஞ்சில் குத்துவது போல இருக்கும். விந்து கர்ப்பப் பையில் செல்லாது.
பெண்ணின் தேகம் அதிக உஷ்ணமாகி கர்ப்பப் பையில் தோன்றியிருக்கும்.
வாய்வு அதிகமாகச் சேர்ந்திருந்தால், உடலுறவு நேரத்தில் உடல் வலி ஏற்படும். அதனால் விந்து பாழாகும்.
கருப்பையில் பாசு படிந்திருந்தால், பெண்ணுக்கு தலை வலிக்கும்.
கருப்பை மதர்த்திருக்கும்.
பித்த மலடு, அதாவது சிறுநீர் மஞ்சள் கலந்தது போல இறங்கும்.
வாதமலடு அதாவது சிறு நீர் இரத்தம் போல் இறங்கும்.
அலகை மலடு – பெண் மாதவிடாய் ஆகும் காலத்தில் இடது பக்க வயிறு வலிக்கும். சிறுநீர் கடுப்பாகச் செல்வதுடன், சிவப்பாகவும், கருப்பாகவும். வெளுப்பாகவும் இறங்கும்.
உடல் பருத்து உஷ்ணம் அதிகரித்து வலிக்கும். கால்கள் எரியும். சிறுநீர் கழுதை மூத்திரம் போல, கழு நீர் போல இறங்கும்.
எவ்வளவு உணவு உட்கொண்டாலும் உடல் உலர்ந்து காணப்படும். அடிக்கடி கொட்டாவி ஏற்படும். தூக்கத்தின் பலவித கனவுகள் காணும்.
கருப்பைச் சுற்றி வாயு நிற்கும். உண்ட உணவு செரியாமலிருக்கும். புளியேப்பம், வயிற்றுப் பொருமல் ஏற்படும்.
மாதவிடாய் நின்று போகும்.
அடி வயிற்றில் சுருக், சுருக் என்று வலி எடுத்துக் குத்தும்.
வாந்தி ஏற்படுத்தும். வயிறு வலிக்கும். இரண்டாம் மாதம், மூன்றாம் மாதம் முழுக்கு நின்று விடும். பின்னர் வந்து விடும்.
மாதவிடாய் காலத்தில் அடிவயிற்றில் சுருக்கென்று வலிக்கும். வெளியேறும் அசுத்த இரத்தம், இறைச்சி கழுவிய ஜலம் போல வடியும். உடலுறவு சமயத்தில், பெண் குறி வழியாக நீர் கசிந்து உள் ஆடையில் கறை படும்.
உடலுறவில் அதிக உஷ்ணம் ஏற்பட்டு, வெட்டை உண்டாகி, கருப்பையும் கருக்குழாயும் புண்ணாகி, பெரும்பாடு அதாவது செவ்விள நீர் போல இரத்த வடிந்து கொண்டிருக்கும். வயிற்று வலியும் உண்டாகும்.
உடலில் உஷ்ணம் அதிகமாகி, கருக் குழியில் வாயு சேர்ந்து, சூதகம் கட்டித் திரண்டு, வயிற்றில் சிசு போல புரண்டு உருளும். வயிறு வலிக்கும். தேகம் மெலியும். பலம் குறையும். இதனை கர்ப்பச் சூலை என்பார்கள்.
அடி வயிற்றில் இரத்தம் திரண்டு வளையம் போல கிடக்கும். வயிறு வலித்து உப்புசமாகும். முதுகு வலி ஏற்படும். இதனை கற்சூலை என்பார்கள்.
அடி வயிற்றில் நாளாவட்டத்தில் இரத்தம் திரண்டு, மாதவிடாய்க் காலத்தில் புரண்டு வலிக்கும். வெளியேறும் இரத்தம் அதிக காணும். கரு அழியும். இடுப்பும், தொடையும் உளைச்சலாகும். இதனை இரத்தச் சூலை என்பர்.
வயிற்றில் இரத்தம் கட்டி வலி உண்டாகும். தலை வலிக்கும். வீட்டு விலக்கு நாட்களில் வயிற்று வலி உண்டாகும்.
மேற்கூறிய 21 வகையான கர்ப்பக் கோளாறுகளுக்கும் அகஸ்தியர் பலவித மருந்துகளை கூறுகிறார். எளிதில் நாமே தயாரித்துக் கொள்ளும் படியான வகையில் உள்ளவற்றை பார்க்கலாம்.
மலை வேப்பிலைக் கொழுந்துடன் 4 எண்ணம் மிளகு சேர்த்து மை போல அரைத்து மாதவிடாயான மூன்றாம் நாள் முதல் மூன்று நாட்கள் உட்கொள்ள வேண்டும்.
நற்சீரகம், குங்குமப் பூ, அதிமதுரம் மூன்றையும் சேர்த்து மை போல அரைத்து ஆண்கள் ஆண் குறியிலும், பெண்கள் பெண் குறியிலும் நன்றாகப் பூசிக் கொண்டு உடலுறவு கொள்ள கோளாறுகள் நீங்கும்.
பெருங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு அரைத்து, பெண் குறியில் பூசி விட வாயு நீங்கும்.
திப்பிலி, கற்பூரம், கோழிப் பிச்சி மூன்றையும் நீர் விட்டரைத்து பெண் குறியில் பூசி விட சதை வளர்ச்சி நீங்கும்.
மீதிபாகல் இலையின் சாற்றைக் கையினால் கசக்கிப் பிழிந்த ரசம் 100 மி.லி., தேங்காய்ப் பால் 100 மி.லி. அல்லது பசும்பால் 100 மி.லி. கலந்து மாதவிடாயான நான்காம் நாள் கொடுத்து வர, கருப்பையின் கண்ணிலுள்ள கிருமிகள் அழியும்.
நாவற்பட்டையை எருமைத் தயிரில் இடித்த சாறில் 3 கிராம் அளவு சந்தனம் கலந்து மாதவிடாயான மூன்றாம் நாள் முதல் மூன்று நாள் காலையில் உட்கொள்ள பெரும்பாடு நீங்கும்.
கருஞ்சீரகம், சித்திர மூலம், அதிமதுரம், சுக்கு, திப்பிலி, மிளகு, கோஷ்டம், கடுக்காய், தான்றிக் காய், நெல்லி வற்றல், இந்துப்பு, சுட்டுப்பு, சிவதை வேர், பெருங்காயம், சிறு தேக்கு, கடுகு ரோகிணி, கெச்சக் காய் பருப்பு ஒவ்வொன்றும் தலா 30 கிராம் அளவு எடுத்து வெயிலில் உலர்த்தித் தூள் செய்து, வஸ்திர கஷாயம் செய்து, அதன் எடைக்கு சுத்த பனை வெல்லம் சேர்த்து பாகு செய்து, அதில் இந்தத் தூளை சேர்த்துக் கிளறி, 150 கிராம் சிற்றாமணக்கு எண்ணெய் விட்டுப் பிசைந்து லேகியமாக செய்து கொண்டு உண்டு வரவும்.
மேற்கூறிய லேகியத்தை காலை, மாலை என தினசரி இருவேளை, வேளைக்கு பெரு நெல்லிக் காயின் பாதி அளவு எடுத்து சாப்பிட்டு வர சூதக சம்பந்தமான வாயுக்கள் யாவும் நீங்கும்.
ஆகாசக் கருடன் கிழங்கு எண்ணெயை தினசரி காலை, மாலை என தினசரி இருவேளை 15 நாள் வரை உட்கொண்டு வர சூதகக் கட்டு குணமாகும்.
அதிமதுரம், கடுக்காய், கொல்லன் கோவைக் கிழங்கு மூன்று பொருட்களையும் இடித்துத் தூள் செய்து அதனுடன் முருங்கை மரத்தின் வேர் இடித்து பிழிந்த சாறு 50 மி.லி., சிற்றாமணக்கு எண்ணெய் 50 மி.லி., பசும்பால் 100 மி.லி. கலந்து சுண்டக் காய்ச்சி (4ல் ஒரு பங்காக) எடுத்து வடித்து, 3 முதல் 5 கிராம் அளவு எடுத்து, மாதவிடாயான மூன்றாம் நாள் முதல் மூன்று நாட்களுக்கு உட்கொண்டு வர, கர்ப்பச் சூலை நோய்கள் நீங்கும்.
தாய்ப் பால் சில விபரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்
பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தித் திறனையும் உடல் வலுவையும் தருவது தாய்ப் பால் தான். குழந்தை பிறந்த மூன்று நாள் வரையும் தாய்க்குப் பால் கிடைக்காது. அதனால் வென்னீரில் சர்க்கரை சேர்த்து மூன்று நாட்கள் கொடுத்தல் வேண்டும். பிறகு தாய்க்குப் பால் போதுமான அளவு கிடைக்காவிடில் கலவைக் கீரை கொண்டு வந்து வெள்ளை பூண்டு, உப்புச் சேர்த்து அவித்து உணவுடன் கலந்து தாய் எடுத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைக்கு தாய்ப் பால் கிடைக்காத சமயத்தில் பசும்பால் நல்லது. பசும்பால் கொடுக்க வேண்டுமெனில், பிறந்தது முதல் ஒரு மாதம் வரை பசுவின் பால் ஒரு பங்கும். சுத்தமான நீர் நான்கு பங்கும் சேர்த்து மிளகு, சுக்கு, சீரகத் தூள் செய்து ஒரு மூட்டை கட்டி, அதில் சேர்த்துக் காய்ச்சி, ஒரு கொதி வரை வர விட்டு எடுத்து இறக்கி வடிகட்டி குழந்தைக்கு ஊட்ட வேண்டும்.
ஒரு மாதத்திற்கு மூன்று மாதம் வரையும் ஒரு பங்கு பாலும், மூன்று பங்கு நீரும் சேர்க்கலாம். மூன்று மாதத்திற்கு மேல் 6 மாதம் வரையும் 2 பங்கு நீர் சேர்க்கலாம். 6 மாதத்திற்கு மேல் 10 மாதம் வரை ஒரு பங்கு நீர் சேர்க்கலாம். 10 மாதமாகி விட்டால், புழுங்கல் அரிசியை நீர் விட்டு அலசி சுத்தம் செய்து காய வைத்து, வெயிலில் உலர்த்தி, இயந்திரத்தில் நெய்யாக அரைத்து அதில் மிளகு, சீரகம் இவற்றைத் தூள் செய்து போட்டு நன்றாக வேக வைத்துக் கொடுக்க வேண்டும். பச்சரிசி உபயோகிப்பவர்களும் இம்மாதிரியே செய்து கொள்ளலாம்.
பசுவின் பாலை இரவு 10 மணிக்கு மேல் உபயோகிக்கக் கூடாது. ஏனெனில் பாலில் புளிப்புத் தன்மை அதிகரித்து குழந்தைக்கு மந்தம், சுரம் ஏற்படும். இதனை மந்த சுரம் என்று கூறுவார்கள். ஆனால் தாய்ப் பால் எந்த நேரத்திலும் குழந்தைக்குத் தரலாம். அதனால் பாதகமில்லை. கேழ்வரகின் மூலம் எடுக்கும் பாலை குழந்தைகளுக்குத் தரலாம். கேழ்வரகு உடலுக்கு பலத்தைத் தரும். இதில் தாமிரச் சத்து அதிகம் இருக்கிறது. இரத்தத்தைச் சுத்தம் செய்யும். செரிமானச் சக்தியை அதிகப்படுத்தும். ஆனால், குழந்தைகள் பேதியால் அவதிப்படும் காலத்தில் கேழ்வரகுப் பால் தரக் கூடாது.
கேழ்வரகில் இருந்து எவ்வாறு பால் தயாரிப்பது?
கேழ்வரகை நன்றாக இடித்து, மாவு மில்லில் மாவாக அரைத்துக் கொண்டு, மெல்லிய துணி கொண்டு சலித்து, சலித்த மாவை ஒரு வெள்ளைத் துணியினால் மூட்டைக் கட்டி, வென்னீரில் ஊற வைத்து, அதை பிசைந்தால், அதிலிருந்து பால் வரும். அந்தப் பாலைக் காய்ச்சி, சர்க்கரை சிறிது சேர்த்து குழந்தைகளுக்குத் தரலாம்.
செரிமான சக்தி குறைவாக இருந்து, வயிறு உப்புசமாக காணப்படும் குழந்தைகளுக்கு வெள்ளாட்டுப் பால் தரலாம். ஆனால், வெள்ளாட்டுப் பாலை மெல்லியை துணி கொண்டு 6, 7 முறை வடிகட்டி, அதில் காணப்படும் முடியை (ஆட்டின் மயிர்) நீக்க வேண்டும். மேற்கூறியபடி வடிகட்டிய பாலுடன், பசும்பாலுக்கு சேர்ப்பது போல, நீர் சேர்த்துக் காய்ச்சி குழந்தைகளுக்குத் தரலாம். இதன் மூலம் இரத்தச் சோகை, காமாலை, பித்தம், பாண்டு முதலிய நோய்கள் நீங்கும். உங்கள் குழந்தைக்கு நல்ல வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும்.