தாயான பெண்களுக்கு சத்துணவு

Spread the love

முதல் முறையாக தாய்மைப் பேறு அடையும் பெண்கள், குழந்தை நல்ல விதமாக அழகாக, ஆரோக்கியமாக எவ்வித குறைபாடுகளும் இன்றி பிறக்க வேண்டும் என்று ஆவலாக இருப்பார்கள்.கருவில் உருவாகும் குழந்தைக்கு புரதச் சத்து, கால்சியம், இரும்புச் சத்து என்று பல சத்துக்கள் அவசியமாகும்.அதிலும் கர்ப்பக் காலத்தில் இரத்தசோகைஏற்படாமல்பார்த்துக்கொள்வதுஅவசியமாகின்றது.

ஏனெனில், இரத்த சோகையானது கரு உருவாகிய மூன்று மாதங்களுக்குள்ளாகவே கருக் கலையச் செய்து விடுகிறது. போதிய வளர்ச்சி இல்லாத குழந்தை, குறை மாதப் பிரசவம், பிரசவ நாளுக்கு முன்பாகவே பொய்யாக பிரசவ வலி தோன்றுதல், நஞ்சுக் கொடி இடம் மாறி விடுதல், பிரசவத்தின் போது தாய் இறத்தல் ஆகிய விளைவுகள் ஏற்படலாம்.

காபி, டீ அருந்துவதை நிறுத்தி விடுங்கள்

கர்ப்பம் அடைந்தது தெரிந்த நாள் முதல் காபி, டீ அருந்துவதை கண்டிப்பாக நிறுத்தி விட வேண்டும்.ஏனெனில் உணவில் இருக்கும் இரும்புச் சத்தை கிரகிக்க இயலாமல் காபி, டீ தடுத்து விடுகிறது.பால் குடிப்பது நல்லது. கர்ப்ப காலத்தில் கீழ்க்கண்ட சத்துக்கள் தாய்க்கு மிகவும் அவசியம் தேவையாகும். அவை இரும்புச் சத்து, கால்சியம், கார்போ ஹைட்ரேட், கொழுப்புச் சத்து, வைட்டமின்கள் பி,சி,டி,இ மற்றும் கே ஆகும். தாது உப்புகளும் அவசியம் தேவை.

கீரை வகைகள், சுண்டைக் காய், பாகற்காய், வெல்லம், எள், முட்டை, இறைச்சி, தானிய வகைகள், முந்திரி, பாதாம் போன்ற கொட்டை வகைகளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.பச்சைக் காய்கறிகள், பால், பால் சார்ந்த உப தயாரிப்பு உணவுப் பொருட்கள், இறைச்சி, மீன், பருப்பு வகைகள், கடலை மற்றும் தானியங்கள் போன்றவற்றில் புரதச் சத்து உள்ளது.

பால் மற்றும் பால் சார்ந்த உப உணவுப் பொருட்கள், முட்டை, உலர்ந்த பழங்கள், பச்சைக் காய்கறிகள், எள், ஆரஞ்சு ஆகியவற்றில் கால்சியச் சத்து உள்ளது. பால், வெண்ணெய், முட்டை, கேரட், பப்பாளி, மாம்பழம், கீரைகள், மீன் ஆகியவற்றில் வைட்டமின் ஏ சத்துள்ளது. அரிசி, கோதுமை பருப்பு வகைகள், இறைச்சி ஆகியவற்றில் வைட்டமின் பி சத்துள்ளது.எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யா, ஆரஞ்சு, தக்காளி, முருங்கைக் காய், முள்ளங்கி, உருளைக் கிழங்கு, காலி ஃப்ளவர், கொத்து மல்லி ஆகியவற்றில் வைட்டமின் சி சத்து உள்ளது.

சூரிய ஒளி, வெண்ணெய், பாலாடைக் கட்டி, முட்டை, மீன், ஈரல் ஆகியவற்றில் வைட்டமின் டி சத்து உள்ளது. மேற்கூறிய சத்துக்கள் அனைத்தும் கருவுற்ற தாய்க்கும், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது. கர்ப்பக் காலத்தில் இரத்த சோகை வராமல் இரும்புச் சத்து தடுக்கிறது. பிறந்தவுடன் பயன்படுத்திக் கொள்ள வசதியாக தாய்க்கு கிடைக்கும் இரும்புச் சத்தை கருவில் உள்ள குழந்தை தனது கல்லீரலில் சேமித்து வைத்துக் கொள்கிறது.கருவில் குழந்தை உருவாவதற்கான திசுக்களின் வளர்ச்சிக்கு புரதச் சத்து உதவுகிறது.கர்ப்பப்பை வலுவாக இருப்பதற்கும் நஞ்சுக் கொடி உருவாவதற்கும் புரதச் சத்து அவசியம்.குழந்தையின் எலும்பின் வளர்ச்சிக்கும், கருக்குள் இருக்கும் குழந்தைக்கு பற்கள் உருவாவதற்கும் கால்சியம் மிகவும் அவசியம்.எனவே, கர்ப்பமுற்ற பெண்கள் அனைத்து ஊட்டச் சத்துக்களும் அடங்கிய சரிசமவிகித உணவை சாப்பிடுவது அவசியமாகும்.

சத்யா


Spread the love