எல்லோருக்கும் பொருத்தமான ஒரு சத்துணவுப் பட்டியல் தயார் செய்தால், அதில் ‘உருளைக் கிழங்கு’ இன்றியமையாது இடம் பெறும். விலையில் குறைவு என்றாலும் சக்தி தருவதில் நிறைவானது உருளைக் கிழங்கு. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லா இனத்தவரும் இதனை அன்றாட உணவில் சேர்த்து ஊட்டம் பெறுவர். ஊட்டம் அளிப்பதுடன் சில நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது உருளைக் கிழங்கு.
நாடெங்கும் விளையக் கூடிய கிழங்கு இனத்தைச் சார்ந்த உருளைக் கிழங்கு ஊட்டி, கொடைக்கானல், சிம்லா போன்ற குளிர்ப் பிரதேசங்களில் ஏராளமாகப் பயிராகின்றது. இதன் இலையும், கிழங்கும் மருத்துவப் பயனாகவும், உணவாகவும் உதவுகின்றன. இக் கிழங்கு இனிப்புச் சுவையை உடையது. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது. மலச்சிக்கலைப் போக்கி, சிறுநீரை வெளியேற்றும். தாய்ப்பாலைப் பெருக்கும் நாடித் துடிப்பினை சமநிலைக்குக் கொண்டு வரும். நரம்புகளின் வெப்ப நிலையைக் குறைக்கும் குணமுடையது. உடலுக்கு உரமளித்து உற்சாகம் அளிக்கவல்ல உருளைக் கிழங்கை வற்றலாகப் பயன்படுத்தலாம்.
உணவாகும் உருளைக் கிழங்கு
உருளைக் கிழங்கை உபயோகப்படுத்தாத குடும்பம் இருக்காது. பல்வேறு வகைகளில் சமைக்கப்படும் உருளைக் கிழங்கை அதன் பயன் தெரிந்து பக்குவமாகச் சமைத்து உண்பவர் மிகச் சிலரே.
குழந்தைகளுக்கு
ஒன்பது மாதம் கடந்த குழந்தைகள் துரித வளர்ச்சியும், பருமனாகவும் வளர பகல் உணவில் நெய், பருப்புச் சாதத்துடன் வேக வைத்த உருளைக் கிழங்கைப் பாதி சேர்த்துக் குழையப் பிசைந்து ஊட்டி விடவும். வாரம் 3 நாட்கள் இவ்வாறு செய்து வரலாம். வேக வைத்த உருளைக் கிழங்குடன் பால் ஏடு சிறிதும் சர்க்கரை சிறிதும் சேர்த்துப் பிசைந்து ஊட்டலாம்.
வளரும் சிறுவர்களுக்கு
காசநோய் மற்றும் கணைச் சூட்டினால் இளைத்து எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் சிறுவர்களுக்கு, தினம் 100 கிராம் உருளைக் கிழங்கை வேக வைத்து உண்ணக் கொடுப்பது நல்லது. கெடுதல் ஒன்றும் நேராது.
தாய்ப் பால் பெருக
பிள்ளை பெற்ற தாய்மார்கள் தினமும் உருளைக் கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி, நெய்யில் வறுத்துப் புசித்து வரத் தாய்ப்பால் சுரப்பு மிகுதியாகும்.
திருமணமானவர்களுக்கு
திருமணமானவர்கள், இதனை வாரம் 2 நாட்கள் சாப்பிட்டு வர, நரம்புகளின் அயர்வைப் போக்கி இல்லற ஈடுபாட்டில் உற்சாகத்தைத் தரும்.
சிறுநீர் தடை ஏற்பட்டால்
சிறுநீர் சரிவர வராமல் அவதிப்படுபவர்கள் உணவில் உருளைக் கிழங்கைச் சேர்த்து வர சிறுநீர் நன்கு பிரியும்.
தூக்கம் சரிவர இல்லையா? நரம்புத் தளர்ச்சி காரணமாகத் தூக்கம் சரியாக வரவில்லையாயின், உருளைக் கிழங்கின் இலைச் சாற்றை அரை அவுன்ஸ் எடுத்து, தேன் 2 ஸ்பூன் சேர்த்து வெறும் வயிற்றில் தினம் 1 வேளை பருகிவர தூக்கம் வரும். 10 நாட்கள் தொடர்ந்து செய்யவும்.
உருளைக் கிழங்கை நீக்க வேண்டியவர்கள்.
நீரிழிவு, ரத்த அழுத்தம், வாயுக் கோளாறு, ஊளைச் சதை மிக்கவர்கள், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொழுப்புச் சத்து மிகுந்தவர்கள், உருளைக் கிழங்கு சாப்பிடுவதை நிறுத்துவது நல்லது. தவிர்க்க இயலாவிடில் இதன் வற்றலை நல்லெண்ணெயில் பொரித்து உண்ணலாம். மிளகு சிறிது சேர்ப்பது நல்லது.
ஊட்டம் பெற உதவும் உருளைக் கிழங்கு தாய்ப்பாலைப் பெருக்கும். சிறுநீரை வெளியேற்றி நரம்புத் தளர்வை அகற்றும் திறன் உடையது.
உருளைக் கிழங்கை வெட்டி முகத்தில் தேய்த்து வர, முகத்தோல் மென்மை பெறும். சொறி, சிரங்கு, படையுள்ளவர்கள் உருளைக் கிழங்கினை வெட்டி மேற்பூச்சாகத் தேய்த்து வர நமைச்சல் அடங்கும்.
தீக்காயம், கொதிக்கின்ற எண்ணை சருமத்தின் மீது பட்டால் உடனே, உருளைக் கிழங்கின் மேற்தோலை “பிளாஸ்த்ரி” போல் தீப்புண் மீது ஒட்டலாம்.
சிறிது வாய்வுத் தொல்லையைத் தரக் கூடியதாகையால்,இதனைச் சமைக்கும்போது, இஞ்சி, கொத்தமல்லி, பூண்டு, பெருங்காயம், சீரகம் சிறிது சேர்த்து சமைத்து உண்பது நல்லது.