பொட்டாசியம்

Spread the love

பொட்டாசியம் இதயம் இயங்க தேவையான முக்கியமான சத்து. ஒவ்வொரு ஆணும் ஒரு நாளைக்கு 4.7 கிராம் பொட்டாசியம் எடுத்துக் கொள்வது, இதயத்துக்கு, உடலுக்கு ரொம்ப நல்லது. விளையாட்டு வீரர்களும் கடுமையான உடற்பயிற்சி செய்பவர்களும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக எடுத்துக் கொள்ளலாம்.

பொட்டாசியம் நம் உடலின் செல்களில் உள்ளது. இதயம், தசைகள், செல்கள், ஆர்கன்கள், நரம்புகளின் இயக்கத்திற்கு பொட்டாசியம் இன்றியமையாதது. கார்போ ஹைட்ரேட் மற்றும் புரதங்களின் வளர்சிதை மாற்றத்திற்கு, ரத்தத்தில் அமில-கார அளவை சீராக வைக்கவும் இது உதவுகிறது.

ரத்தத்தில் பொட்டாசியம் சரியான அளவில் இருப்பது மிக அவசியம். அதிகம் ஆனாலோ, குறைந்தாலோ இதய பாதிப்பு ஏற்படலாம். ரத்தத்தில் பொட்டாசியம் அளவை சரிவர பாதுகாக்க உடல், செல்களில் சேமித்து வைத்த பொட்டாசியத்தை பயன்படுத்துகிறது. உணவு பானங்களில் இருந்து கிடைக்கும் பொட்டாசியம் அதிகமானால் சிறுநீர், வியர்வை, ஜீரண மண்டலம் மூலம் வெளியேற்றப்படுகிறது.

உடலில் பொட்டாசிய அளவு குறைந்தால் தசைகள் பலமிழக்கும். பக்கவாதம் ஏற்படலாம். மலட்டுத் தன்மை, எலும்புகள் பலவீனம், இதயக் கோளாறுகள் ஏற்படலாம். வாந்தி, பேதி காரணமாக பொட்டாசிய குறைபாடு ஏற்படுகிறது. உடலில் பொட்டாசியம் அதிகமாவதை ‘ஹைபர்கலெமியா’ (hyperkalemia) எனப்படுகிறது. சிறுநீரகம் பொட்டாசியத்தை சரிவர வெளியேற்றாவிட்டால் உடலில் பொட்டாசியம் அளவு அதிகமாகிவிடும். இதனால் இதயம் பாதிப்படையும்.

அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், உணவில் பொட்டாசியம் குறைந்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என தெரியவந்து உள்ளது.

பொட்டாசியத்தை சரியான அளவில் எடுத்துக் கொள்வது இதயத்தை பாதுகாக்க சிறந்த வழியாகும். இது பழம் மற்றும் காய்கறிகளில் தாராளமாக கிடைக்கிறது. இதயத்தையும், எலும்புகளையும் பாதுகாக்க உங்கள் உணவில் தினசரி பொட்டாஷியத்தை சேர்த்துக் கொண்டாலே போதும். எளிதாக கிடைக்க கூடிய வாழைப்பழத்தில் பொட்டாஷியம் ஏராளமாக உள்ளது. உருளைக் கிழங்கு, இனிப்பு உருளைக் கிழங்கு, பீன்ஸ், தக்காளி, சிட்ரஸ் பழங்கள், உலர் பழங்கள், இனிப்பு தயிர் (யோகர்ட்) ஆகியவற்றில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. மீன், கோழி, மாட்டிறைச்சியிலும் பொட்டாஷியம் உள்ளது.

விரைவான வாழ்க்கையில் உடலுக்கு ஏற்ற சத்தான உணவை சாப்பிடுவதில் பலருக்கும் சிரமம் இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் தினமும் காய்கறி, பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள சில வழிகள்.

தினசரி உங்கள் மெனுவில் ஒரு காய், ஒரு பழம் என்பது ஒரு அயிட்டமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இதுவே பழக்கமாகிவிடும் போது, கூடுதல் காய்கறிகள், பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

கீரை, கேரட், முட்டை கோஸ், சாலட் போன்றவற்றை பரோட்டா, பாஸ்தாவில் சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் காய்கறிகளை நீங்கள் கூடுதலாக சேர்த்துக் கொள்கிறீர்கள்.

பார்த்த முகத்தையே பார்த்து சலித்து, வாங்கிய பழங்களையே வாங்கி ‘புளித்துப் போனவரா நீங்கள்.. ஆப்பிள், வாழை, மாம்பழம் என்பதற்கு பதிலாக, கிவி பழங்கள், அன்னாசிப்பழம் என புதுப்புது பழங்களாக வாங்கி சாப்பிட பழகுங்கள். ஒவ்வொரு நாளையும் ஒரு பழத்துடன் தொடங்குங்கள்.

காலையில் ஆம்லேட் சாப்பிடும்போது அதனுடன் வெங்காயம், குடைமிளகாய், காளான் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

காய்கறி, பழங்களை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் இதயம் மட்டுமல்ல உடலின் எல்லா பாகங்களும் ஆரோக்கியமாக இருக்கும்.


Spread the love