சிறப்பியல் புகளை வளர்க்கும் சிந்தனைகள் & செயல்கள்

Spread the love

நேர்மைமிக்க, நிறை நலமான நேர்மறைச் சிந்தனைகள் (Positive thoughts) தவிர மற்ற எண்ணங்களை மனதிலிருந்து அகற்ற முழு முயற்சியையும் மேற்கொள்ளுங்கள்.

எதிர்மறைச் சிந்தனைகள் தோன்றுவதற்குக் காரணமான பல சூழ்நிலைகள், இடங்கள் மனிதர்கள் எதிர்ப்படுகின்ற வேளையிலும் நேர்மறைச் சிந்தனையே உயர்ந்தது என்று உங்கள் மனத்திற்கு உணர்த்தி அதைக் கடைப்பிடிக்க முயலுங்கள்.

உங்கள் முயற்சி தற்காலிக ஏமாற்றங்களாலோ, வருத்தத்தினாலோ, தளர்ச்சியினாலோ தடைப்படுமானால் புதிய நம்பிக்கையுடனும், மன ஏக்கத்துடனும் உங்களுடைய கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

உங்கள் செயல்கள் அனைத்திலும் அச்சத்திற்கும் அவநம்பிக்கைக்கும் இடம் கொடாமல் முழு தன்னம்பிக்கையுடன் ஈடுபட வேண்டும். இதனை சிரத்தையோடும், முழு மனத்தோடும், ஒருமுகப் பட்ட உணர்வோடும் செய்யுங்கள்.

உங்கள் சிந்தனை முழுவதும் ஆக்க பூர்வமான, உற்சாகமான செயல் திட்டங்களால் நிறைந்து இருக்கட்டும். உங்களது பேச்சும் செயலும் பிறர் மனத்தில் நல்லெண்ணங்களை உண்டாக்குவதாகவும், நம்பிக்கை அளிப்பதாகவும் அமையட்டும்.

எப்போதும் உற்சாகமான, பொருளுடைய நல்ல கருத்துக்களைப் பேசும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்கள் கடுமையாகப் பேசினாலும் அமைதியாகப் பதிலளிக்க முயலுங்கள்.

தற்புகழ்ச்சியாகப் பேசுவதை அறவே தவிர்த்து விடுங்கள். மற்றவர்களைப் பற்றிய அவதூறுகள், மகிழ்ச்சியற்ற செயல்கள் பற்றிப் பேசாதீர்கள்.

உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணி உயர்வானதா, தாழ்வானதா, பொருத்தமானதா என்ற ஆராய்ச்சியில் ஈடுபடாமல் அதனைச் செவ்வனே செய்து முடிக்க முற்படுங்கள்.

உங்கள் பொறுமையைச் சோதிக்கும் சூழ்நிலை ஏற்படும் போது சகிப்புத் தன்மையையும் பொறுமையையும் கடைப்பிடியுங்கள்.

சரியான தீர்ப்பையும் முடிவையும் எடுக்க முடியாத சூழ்நிலைகள் உருவானால் அவற்றை அமைதியாக சமநோக்குடன் எதிர் கொண்டு சமாளிக்க முயற்சி செய்யுங்கள்.

எவ்வளவு உறுதிமொழிகளை நாம் எடுத்தாலும் அடுத்தடுத்து முயன்றாலும் இறைவன் அருளின்றி வெற்றி கிடைக்காது என்னும் உணர்வு உங்கள் ஆழ் மனதில் இருக்கட்டும். எனவே எப்போதும், எந்தச் செயலில் ஈடுபடும்போதும் இறைவனை வழிகாட்டுமாறு பிரார்த்தித்துக் கொண்டு செயல்படத் தொடங்குங்கள்.


Spread the love