நஞ்சாகும் உணவுகள்

Spread the love

“வானில் உள்ள தேவர்களை

வாழ வைக்க விஷம் குடித்தான்

நாட்டிலுள்ள விஷத்தை எல்லாம்

நான் குடிக்க விட்டு விட்டான்”

என்று நெஞ்சம் உருகிப் பாடுகிறார் ஒரு அண்மைக் காலக் கவிஞர். அவர் எந்தச் சூழலில் இதைப் பாடினார் என்று நாம் அறிய மாட்டோம். ஆனால், இன்றைய உலகியல் வாழ்வில் இது உண்மையாகி வருகிறது. வேதியல் புரட்சியால் விளைந்த நன்மை என்ன? மண்ணும், நீரும், காற்றும், உணவும் நஞ்சாகி போய்விட்டன. இயற்கைப் பொருள்கள் தான் நஞ்சாகி விட்டன என்றால் செயற்கைப் பொருள்களையும் மெல்ல மெல்ல நஞ்சாக்கி வருகிறார்கள். ரசாயன உரமிட்டு, பூஞ்சைக் கொல்லி மற்றும் பூச்சி மருந்துகள் தெளித்து விளைவித்த தானியங்களிலும், காய்கறி மற்றும் பழங்களிலும் விஷம் அதிகமா அல்லது இன்றைய ஆயத்த உணவுகள் பானங்கள் அனைத்திலும் பதனைப் பொருள்கள், வண்ணங்கள், மண்மூட்டிகள் எனச் சேர்க்கப்படுகின்ற சேர்மானப் பொருள்களில் விஷம் அதிகமா என்று ஒரு பட்டி மண்டபமே நடத்தலாம்.

பேரன்யோஸ்டஸ் வான்லீபக் என்னும் ஜெர்மன் வேதியல் விஞ்ஞானி கண்டுபிடித்தவையே சூப்பர் பாஸ்பேட், பென்ஸீன், ஆல்கலி என்னும் வேதிப் பொருள்கள். இவை வெடி உப்புகளே தவிர விவசாய உரங்கள் இல்லை. ஆனால், வான்லீபக், மண்ணுக்கு இயற்கை உரமே தேவையில்லை. இந்த ரசாயன உப்புகளைக் கொண்டே மண்ணுக்கு வளம் ஊட்ட முடியும் என்று வாதாடி வெற்றியும் பெற்றார். அவரைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடினர் ஜெர்மன் ரசாயனத் தயாரிப்பாளர்கள். ஆனால் நமக்கு நேர்ந்தது என்ன? மண்மீது தூவப்பட்ட ரசாயன உரங்களால் விளைச்சல் கூடியது என்னவோ உண்மைதான். ஆனால் இப் பயிர்களைப் பல்வகைப் பூச்சிகளும் பூஞ்சைக் காளான்களும் தாக்கின. இவற்றைக் கட்டுப்படுத்த கணக்கிலடங்காத நஞ்சுகள் உயிர்க் கொல்லி ரசாயனங்கள் என்ற பெயரில் உபயோகப்படுத்தப்பட்டன. விளைவு நம் மண் விஷமானது. மக்களின் உணவுப் பொருள்கள் ஒட்டு மொத்தமும் விஷங்களாகிவிட்டன. இன்றைக்கு நாம் வாங்கிப் பயன்படுத்துகின்ற பாலில் யூரியா நேரடியாகவே கலக்கப்படுகிறது. யூரியாவைக் கொண்டு ஊட்டமேற்றிய வைக்கோலை பசுக்களுக்கு தீவனமாகக் கொடுக்கச் சிபாரிசு செய்கிறார்கள். எண்டோசல்பான் பதிந்த தடம் இல்லாத காய்கறிகளே இல்லை. டாக்டர் அலெக்சிஸ் கேர்ரல் ‘The Man-unknown’ என்னும் தமது நூலில் ‘ரசாயன உரமிடப்பட்ட மண் தொடர்ந்து விஷமாகிக் கொண்டே வருகிறது. அந்த மண்ணில் விளையும் உணவை உண்டால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நாளடைவில் பல புதிய நோய்கள் உண்டாகின்றன. இயற்கையான தாது உப்புக்களை விடுத்து செயற்கை (சிந்தடிக்) ரசாயன உரங்களால் விலங்கு மற்றும் மனித உயிர்மங்கள் (cells) நோயுற்று விலங்குகளும், மக்களும் மடிவார்கள்’ என்று கூறுகிறார். இந்த நூலுக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப் பெற்றுள்ளது.

டாக்டர் ஜோசப் வீயிஸ்மன் என்னும் அறிவியல் ஆய்வர் ‘முற்காலத்தில் நோய்கள் என்றால் அம்மை, காலரா, பிளேக், டி.பி.போன்றவைகளுக்கு அஞ்ச வேண்டி இருந்தது. அதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுத் தடுக்கப்பட்டன. தற்போது தொற்றிக் கொள்ளாத பல நாகரீக நோய்கள், இதயக் குறைபாடுகள், சிறுநீரகக் கோளாறுகள், புற்றுநோய், ஈரல் சுழற்சி, நுரையீரல் வறட்சி, இரத்தக் குறைபாடுகள், சர்க்கரை நோய், பல்வகை வாத நோய்கள் போன்றவைகள் வழக்கில் வந்துள்ளன. இவைகளில் பெரும்பான்மையானவைக்கு மனிதனே காரணம்’ என்று குறிப்பிடுகிறார்.

ஒவ்வொரு உணவு தானியத்திலும் அடுத்தடுத்து மூன்று தவிட்டுத் தோல்கள் உள்ளன. அவற்றின் முனையில் ஒரு மொக்கு உண்டு. இந்த மொக்கில் பேரியம் என்னும் அற்புதச் சத்துண்டு. இது இதயத்தைக் காக்கும் சக்தி கொண்டது. தவிட்டுத் தோல்களில் உடல் நலத்தைப் பேணும் என்ஸைம்கள், விட்டமின்கள், தாது உப்புக்கள் உள்ளன. இவற்றையெல்லாம் நீக்கி அதைத் தவிட்டு எண்ணெய் (Brawn Oil) என்னும் மற்றொரு விஷம் ஆக்கிவிட்டு வெறும் மாவுச் சத்தை மட்டும் மனிதர்களுக்கு மிச்சம் வைக்கின்றனர். மைதா மாவை வெள்ளையாக்க பென்சாயில் பராக்சைடு, பொட்டாசியம் புரோமேட், அம்மோனிய&பர் சல்பேட், அல்லோக்சான் போன்ற வேதிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது போதாதென்று சீனி, பால், பால் மாவு போன்றவற்றையும் வெள்ளையாக்கு கிறார்கள். இதனை உண்பவர்களில் 50 சதவிகிதம் பேர் சர்க்கரை நோய்க்கு ஆளாகிறார்கள். ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருள் மைதா மாவு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

துணிகளில் சேர்க்கப்படுகின்ற பச்சை, மஞ்சள், ஆரஞ்சு போன்ற Coal tar வர்ணங்கள் கேக்குகள், பானங்கள், மிட்டாய்கள் மற்றும் இனிப்பு பலகாரங்களில் சேர்க்கப்படுகின்றன. வீடுகளில் செய்யப்படும் கேசரி, அல்வா போன்றவற்றிலும் விஷம். முதல் விஷம் வனஸ்பதி. இரண்டாவது விஷம் ஈய குரோமேட் (Lead Chromate) அதாவது கேசரி பவுடர், சுத்தமான குங்குமப்பூ தான் அசலான கேசரிப்பவுடர். இது புற்றுநோய்க்கு எதிரி. ஆனால் கடைகளில் விற்கப்படும் மஞ்சள் கேசரி பவுடர் (குரோமேட்) ஒரு உயிர்க் கொல்லி, புற்றுநோயின் தோழன். உணவுப் பொருள்களில் சேர்ப்பதற்கென்றே அரசினரால் அங்கீகரிக்கப்பட்ட வண்ணப் பொருள்களும் பதனப் பொருள்களும் உள்ளன. ஆனால் அவற்றை யாருமே உபயோகிப்பதில்லை என்பது ஒரு துயரம் தரும் உண்மை. உணவிற்கு மணம் சேர்க்கப் பயன்படுத்தப்படுகின்ற அஜினமோட்டோ உடலில் எரிச்சலை உண்டு பண்ணக் கூடியது.

போர்க் காலங்களில் விஷங்களைப் பயன்படுத்தி மக்களை அழித்தார்கள். அமைதிக் காலங்களிலும் இது தொடர்ந்து நடைபெறுகிறது. விவசாயத்தில் அறுவடைக்கு முன்பும் பின்பும், உணவுப் பொருள் தயாரிப்பிலும் ரசாயன விஷங்களைக் கலந்து மக்களை முடமாக்கி வருகிறார்கள். கடலில் எழுந்த நஞ்சிலிருந்து தங்களைக் காப்பாற்ற வேண்டுமென்று விண்ணவர்கள் வழிபட்ட, அந்தச் சிவபெருமானிடம் தான் நாம் முறையிட வேண்டும்.

வாரம் இருமுறை பச்சை வெள்ளைப் பூண்டு உட்கொண்டால் நுரையீரல் புற்று வராமல் தடுக்கலாம்.

வாரத்திற்கு இருமுறை மூன்று வெள்ளைப் பூண்டுகளைப் பச்சையாக உட்கொண்டால் நுரையீரல் புற்றுநோயை உறுதியாகத் தடுக்கலாம் என்று அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அண்மைக் காலத்தில் சீனாவில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில் வெள்ளைப் பூண்டைப் பச்சையாக உண்டு வந்தவர்களிடையே நுரையீரல் புற்று வருவதற்கான வாய்ப்பு 50 சதவிகிதம் குறைவாக இருந்தது அறியப்பட்டுள்ளது. நுரையீரல் புற்றுக்கு மிகப் பெரிய காரணமான புகைபிடிக்கும் பழக்கமுள்ளவர்களிடையேயும் நோய் வருவதற்கான வாய்ப்பு 30 சதவிகிதம் குறைவாகவே இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன் நிகழ்த்திய சில ஆய்வுகளில் வழமையாக&வெள்ளைப் பூண்டு உண்பவர்களிடையே நுரையீரல் புற்று வருவதற்கான வாய்ப்போடு பெருங்குடல் புற்று வருவதற்கான வாய்ப்புகளும் மிகக் குறைவாக இருந்தது அறியப்பட்டுள்ளது.


Spread the love