சான்றோர்கள் பிறர் துன்பத்தை கண்டால் அத்துன்பம் தமக்கே வந்தது போல், அனலிலிட்ட நெய் போல், மனம் உருகுவார்கள்.
இதனைத் தான் சுமார் 325 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிவப்பிரகாச முனிவர்
பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய் கண்டுள்ளம்
எரியின் இழுதாவர் என்க; தெரியிழாய்
மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக்
கண்டு கலுழுமே கண்.
என்று நன்னெறியில் பாடியுள்ளார்.
இதன் பொருள், சிறந்த அணிகலன்களை அணிந்துள்ள பெண்ணே, கேள். மிகுந்த துன்பத்தை தரும் நோயால் உடல் உறுப்புகள் வருந்தும் பொழுது, அதைக் காணும் கண்கள், தங்களுக்கு நோய் ஏதும் இல்லாவிட்டாலும், பிற உறுப்புக்களின் துன்பத்தை காணப் பொறுக்காமல் அழும்.
அது போல தான் மனிதன் இரக்க குணம் படைத்தவன். இரக்கமின்மை அசுர குணம். நம்மைச் சுற்றி இருப்பவர்களின் துன்பங்களை, துயரங்களைக் கண்டு இறங்கி அவர்களுக்கு இயன்ற வரை உதவி செய்வதே இரக்க குணமுள்ள மனிதனின் பண்பு.
தமது சொந்த தாய் தந்தையரிடம் இரக்கமின்றி, அன்பின்றி அவர்களை துச்சமாக மதிக்கும் பலரையும், தாய் தந்தையரை முதியோர் இல்லங்களில் சேர்க்கும் பலரையும் நாம் அன்றாடம் கண்கூடாகக் காண்கிறோம். பல இலவச அநாதை முதியோர் இல்லங்கள் இப்போது தோன்றியிருக்கின்றனவே, இவை எல்லாம் செயல்படுவது இரக்கமுள்ள மனிதர்களின் உதவியால் தானே. இத்தகைய இல்லங்களெல்லாம் நிரம்பி வழிவது, இரக்கமற்ற மனிதர்களால் வெளியேற்றப்படும் முதியோர்களால் தானே -? இரக்கமுள்ள மனிதர்கள் செய்யும் தொண்டு தானே இத்தகைய இல்லங்கள்.
உங்களால் முடிந்தவரை பிறருக்கு உதவுங்கள். துயரப்படுவோரை நேசியுங்கள். அவர்களைக் கண்டு ஏளனம் செய்யாதீர்கள். அவர்களின் துயரை துடைக்க முயலுங்கள், உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.
அவர்களின் துயரத்தை நாம் பகிர்ந்துகொள்ளும் பொழுது அவர்களின் துயரம் குறைகிறது இனிதே வாழ முடிகிறது, இதனைத் தான் புத்தர், பகிர்ந்த துன்பம் பாதியாகிறது, பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறது என்று கூறினார்.
தங்கள் நலன் கருதி
ஆயுர்வேதம் Dr. S. செந்தில் குமார்
ஆயுர்வேதம்.காம்