பிளாஸ்டிக், நான்ஸ்டிக் பெருகும் ஆபத்து

Spread the love

பிளாஸ்டிக் பயன்பாடு எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை பிளாஸ்டிக் பொருட்களை பல்வேறு விஷயங்களுக்காக பயன்படுத்துகிறார்கள். சுற்றுச் சூழல் விழிப்புணர்வு பிரசாரம் பெருகி வரும் வேளையிலும், உடலுக்கு.. உயிருக்கு.. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடிய பிளாஸ்டிக் ‘கேரி பேக்’குகளை நாம் இன்னமும் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.

பள்ளி செல்லும் குழந்தைகள் கலர் கலரான பிளாஸ்டிக் டிபன் பாக்சில் உணவு கொண்டு செல்ல ஆசைப்படுவார்கள். வண்ணங்களைப் பார்த்தாலே குழந்தைகள் குதூகலப்படுவது சகஜம்தான். இது அலுவலகத்துக்கு செல்பவர்கள் வரை ஆண், பெண் பேதமின்றி நீள்கிறது. டிபன் பாக்ஸ் கேரியரில், சோறு, சாம்பார், ரசம், மோர் என்று கொண்டு சென்று சாப்பிடுவது ரொம்ப, ரொம்ப குறைந்து விட்டது. ஏதோ ஒரு கலவை சாதத்தை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துச் சென்று வயிற்றை நிரப்புவதுதான் அலுவலகவாசிகளின் வாடிக்கையாகி விட்டது.

ஆனால், இந்த பிளாஸ்டிக் டப்பாக்கள் விபரீதத்திற்கு வித்திடுகின்றன என்று தற்போது தெரியவந்துள்ளது. பொதுவாக பிளாஸ்டிக்குகளில் இருந்து பிபிஏ எனப்படும் வேதிப்பொருள் உருவாகும். இது, ஹார்மோன் பிரச்னைகளை உருவாக்குவதோடு, நரம்பு சார்ந்த பிரச்னைகளையும் ஏற்படுத்தும். தொடர்ந்து பயன்படுத்துவதால் எடை கூடும், நீரிழிவு பாதிப்பு வரும். குறைந்த வயதிலேயே பெண்கள் பருவமடையும் வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கிறார்கள். நம்மில் பலரும் ஒருமுறை வாட்டர் பாட்டிலை வாங்கினால் அதை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதில்லை. மீண்டும் மீண்டும் அதில் தண்ணீர் பிடித்து உபயோகித்து வருகிறோம். இதுவும் ஆபத்தானது. பெட் பாட்டிலோ அல்லது வேறு எந்த பாட்டிலோ பிபிஏ பாதிப்பு இல்லாத பாட்டிலாக வாங்கி பயன்படுத்த வேண்டும். இது உணவு கொண்டு செல்லும் பிளாஸ்டிக் டப்பாக்களுக்கும் பொருந்தும்.

நான்ஸ்டிக்கால் (ஒட்டாத தவா) வரும் ஆபத்து குறித்தும் தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக உயிர் தொழில்நுட்பவியல் துறையைச் சேர்ந்தவர்கள் நான்ஸ்டிக் தவாவை வெப்பப்படுத்தும்போது ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தனர்.

நான்ஸ்டிக் தவாவை வெப்பப்படுத்தும்போது அதில் இருந்து பாலிடெட்டா புளோரா எத்திலீன் எனும் வாயு வெளியேறுவதையும், அந்த வாயுவானது தவாவில் வைத்து சமைத்து பெறப்படும் உணவுகளில் கலந்து விடுவதால் அவற்றை உண்ணும்போது மனிதர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு கரு வளர்ச்சி பாதிப்பு ஏற்படுவதையும் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

இவர்கள் நான்ஸ்டிக் தவாக்களை வெப்பப்படுத்தி அதிலிருந்து வெளியேறும் வாயுக்களை சீரான வெப்பத்தில் குழாய் மூலம் தண்ணீரில் உள்ள ஜீப்ரா மீன்களுக்கு செலுத்தினர். அதன் காரணமாக மீன்களின் கரு வளர்ச்சியும், உடற்கூறு அமைப்பும் வெகுவாக பாதிப்படைவதையும், அழுத்த என்சைம்களின் அளவு வெகுவாக அதிகரிப்பதையும் கண்டறிந்துள்ளனர்.

நான்ஸ்டிக் தவாவில் தொடர்ந்து சமைத்து உண்ணும்போது மனிதர்களுக்கும் அழுத்த என்சைம்களின் அளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதனால் மன அழுத்தம், சோர்வு மற்றும் ஒவ்வாமை போன்ற உடல் பாதிப்புகள் வரும் வாய்ப்பு உள்ளது என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.


Spread the love