பொதுவாக நட்ஸ் வகைகளில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். பிஸ்தா பருப்பு வகையைச் சார்ந்ததாகும். இதன் விலை கடுமையானதால் அனைவரும் வாங்கி சாப்பிட இயலாது. இருப்பினும் அவ்வப்போது சிறிதளவு உண்டு வருவது நம் உடலிற்கு நலம் பயக்கும்.
பிஸ்தாவில் தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் அடங்கியுள்ளது. பிஸ்தா பருப்புகளில் கொழுப்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதனை தவிர்க்கலாம்.
சாப்பிடும் முறை
நட்ஸ் வகைகளை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பால் அல்லது தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாம். இதனை உணவு இடைவேளை நேரங்களில் அல்லது மாலை வேளையில் எடுத்துக் கொள்ளலாம்.
தினமும் 3 அல்லது 4 பருப்புகள் வரை உண்ணலாம். உடல் எடையை அதிகரிக்க விரும்புவர்கள் பிஸ்தாவை தினமும் தவறாமல் உண்ணலாம்.
பிஸ்தாவை நொறுக்குத் தீனியாக, பச்சையாக, வறுத்து அல்லது காய்கறி கூட்டின் மேல் பகுதியில், உலர் பழங்களுடன் கலந்து உண்ணலாம். பேக்கரி உணவுகள், மீன் அல்லது இறைச்சியின் மீது முழு பூச்சாக சாப்பிடலாம். மேலும் பிஸ்தா ஐஸ்கிரீம், குல்பி, பக்லவா, அல்வா, பிஸ்தா வெண்ணெய் மற்றும் சாக்லேட் தயாரித்தும் பயன்படுத்தப்படுகின்றன.
ஆரோக்கியம் தரும் பிஸ்தா
இது உடலின் இரத்தம், கூந்தல், சருமம், மூளை, கண் பார்வை என அனைத்தையும் நல்ல முறையில் பாதுகாப்பதில் பெரும் பங்காற்றுகிறது.
பிஸ்தா அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால் மயிர்கால்கள் வலுவடைந்து, கூந்தல் உதிர்தல் தடைபடுகிறது. தெளிவான பார்வை பெறலாம்.
சரும ஆரோக்கியம் மேம்பட
பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ சருமத்தின் ஜவ்வுகளை ஒருங்கிணைத்து ஆரோக்கியமாகவும், வயதான தோற்றத்தை மாற்றவும் உதவுகிறது. இது சருமத்திற்கு ஈரப்பதம் மூட்டி சருமத்தை நன்கு மென்மையாகவும், மிருதுவாகவும் வைக்க உதவுகிறது. பிஸ்தாவில் இருக்கும் தாமிரம் சருமத்தில் தோல் சுருக்கம் வராமல் தடுக்கிறது. மேலும் சூரியக் கதிர்களால் பாதிப்பு ஏதும் நேரிடாமல் சருமத்தை பொலிவுடன் வைக்க உதவுகிறது.
மூளை செயல்திறன் மேம்பட
பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 நமது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் மூளையின் செயல் திறன் மேம்படுகிறது.
இதய ஆரோக்கியம் மேம்பட
பிஸ்தா உடலின் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பை அதிகரித்து இதயத்தை ஆரோக்கியத்துடன் வைக்க உதவுகிறது.
புற்றுநோயை தடுக்க
பிஸ்தாவில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான லுடின் மற்றும் ஸீக்ஸாத்தைன் உடலில் உள்ள நச்சுக்கிருமிகளை வெளியேற்றி புற்று நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
நீரிழிவு நோய் கட்டுப்பட
பிஸ்தா குறைந்த அளவில் கிளைசீமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால் அதிக அளவில் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், கரோட்டினாய்டுகள் மற்றும் பினொலிக் கலவைகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
உயர் இரத்த சர்க்கரை அளவு கொண்டவர்கள் பிஸ்தா உட்கொள்வதால் இன்சுலின் சுரப்பு அதிகரித்து, உணவுக்கு முன் இரத்த சர்க்கரை அளவு குறைவதாகவும். தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு ஒன்றில் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து பிஸ்தா பருப்புகளை எடுத்துக் கொண்டு வந்ததும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது.
டைப் டூ நீரிழிவு நோயாளிகள் 12 வாரங்கள் என ஒரு நாளைக்கு இரண்டு முறை பிஸ்தா பருப்பை எடுத்துக் கொள்வதால் இரத்த சர்க்கரை அளவு 50% வரை குறைந்தது தெரிய வந்துள்ளது.
பிஸ்தாவின் பக்க விளைவுகள்
அதிக அளவில் பிஸ்தா உண்பதால் ஒவ்வாமை, உடல் எடை அதிகரிப்பு, பூசண வகை நச்சினை உருவாக்குதல், இரைப்பை பிரச்சனைகள், சிறுநீரக கற்கள் ஆபத்து போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
பிஸ்தா பாக்லவா
தேவையான பொருட்கள்
பாக்லவா ஷீட் – 25
பிஸ்தா – அரை கப்
பொடித்த சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்
உருக்கிய வெண்ணெய் – அரை கப்
சர்க்கரை பாகு செய்ய
சர்க்கரை – ஒரு கப்
தண்ணீர் – அரை கப்
எலுமிச்சை பழம் – 1
பிஸ்தா எஸன்ஸ் ரவுண்ட் ட்ரேயில்- அரை டீஸ்பூன்
செய்முறை
பிஸ்தா பருப்புடன் பொடித்த சர்க்கரை கலந்து நன்கு பவுடராக்கவும். பின் ஒரு ரவுண்ட் ட்ரேயில் பாக்லவா ஷீட் வைத்து பட்டர் தடவி, அடுத்த சீட்டை வைக்கவும்.
பின் பட்டர் தடவி பிஸ்தா பருப்பை தூவி பாக்லவா ஷீட் வைக்கவும். இவ்வாறு ஐந்து பாக்லவா ஷீட் வைக்கவும். இறுதியில் பட்டர் தடவி முடிக்கவும்.
பின் ட்ரேயை ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து சம பாகமாக வெட்டவும். பின் ஓவனை 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடங்கள் வரை சூடாக்கவும். பின் ட்ரேயை ஓவனில் வைத்து 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 40 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.
இறுதியில் சூடான சர்க்கரைப் பாகை சிறிது சிறிதாக ஊற்றி 3 முதல் 4 மணி நேரம் ஊற விடவும். பின் கட் செய்து பரிமாறலாம். சுவையான பிஸ்தா பாக்லவா தயார்.
ஆயுர்வேதம்.காம்