பிரண்டை (வச்சிரவல்லி)

Spread the love

பிரண்டையை பற்றி பலருக்கு தெரிந்தது, பழங்காலத்தில் வீட்டில் அப்பளம் செய்யும் போது, பிரண்டை சாற்றை சேர்த்து செய்வார்கள் என்பது தான். பிரண்டையை தெரியாமல் வாயில் போட்டுக் கொண்டால் அரிக்கும் என்பதும் தெரிந்திருக்கும். பிரண்டை எலும்புகளுக்கு நல்லது. பிரண்டை துவையல் பிரசித்தி பெற்ற கிராமிய உணவு.

பிரண்டை, வெப்ப தேசங்களில் உண்டாகும் கொடியினம். கணுக்கள் உடையது. இதில் பலவகைகள் உள்ளன. ஓ லைப் பிரண்டை, உருட்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப் பிரண்டி, களிப் பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை போன்றவை.

இதில் முப்பிரண்டை கிடைப்பது கடினம். சதுரப்பிரண்டை தான் நம் நாட்டில் சுலபமாக கிடைக்கும் வகை.

பிரண்டையின் சாறு காரல் மிகுந்தது. சருமத்தில் பட்டால் அரிப்பும், நமைச்சலும் ஏற்படும்.

பிரண்டையின் பெருமை – எலும்புகள் வலுப்பெறவும், எலும்பு முறிவுகள் சீக்கிரம் குணமாகவும் உதவுகிறது.

தாவரவியல் பெயர் – Vitis Quadrangularis

                        Syn – Cissus Quadrangularis

சமஸ்கிருதம் – அஸ்தி, ஸ்ருங்காலா ஹிந்தி – ஹட்ஜோரா

தமிழில் வேறு பெயர் – வச்சிர வல்லி.

பயன்படும் பாகங்கள் – இலைகள், தண்டு, வேர்.

பயன்கள்

1. எலும்புகள் வலுப்பெறவும், எலும்பு முறிவு சீக்கிரம் குணமாக பிரண்டு பயனாகிறது. சமஸ்கிருதத்தில் இதன் பெயரே ‘அஸ்தி ஸ்ருங்காலா’ – அஸ்தி என்றால் எலும்பு. நூறு கிராம் பிரண்டையில் உள்ளவை – ஈரப்பசை – 87.4 கி, புரதம் – 1.2 கி, கொழுப்பு – 0.3 கி, தாதுப்பொருட்கள் – 2.0 கி, நார்ச்சத்து – 1.8 கி, கார்போஹைட்ரேட்ஸ் – 7.3 கி, கால்சியம் – 650 மி.கி, பாஸ்பரஸ் – 50 மி.கி, இரும்பு – 2.1 மி.கி.  இவை புதிய பிரண்டை சாற்றில் இன்னும் அதிகமாக இருக்கும்.

எலும்பு முறிவுகளில் இதன் தண்டு உள்ளுக்கும் கொடுக்கப்படும்; களிம்பாக வெளியிலும் தடவப்படும். பிரண்டையில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது. பிரண்டை சாற்றை காய்ச்சி, உப்பு, புளி சேர்த்து எலும்பு முறிவு வீக்கத்தின் மேல் பற்றுப் போட்டால் குணம் தெரியும். எலும்புகள் வலுப்பெற, மூட்டு வலிகள் நீங்க, பிரண்டை சட்னி (அ) துவையல் சாப்பிடலாம். பிரண்டை வேரை உலர்த்தி 2 கிராம் கொடுத்து வந்தால் முறிந்த எலும்புகள் சீக்கிரமாக கூடும். இதை வெந்நீரில் குழைத்து மேலுக்கு பற்றாக இடலாம்.

மங்களூர் பிரண்டை சட்னி செய்முறை இதோ.

தேவையான பொருட்கள்

கறுப்பு எள்      – 50 கிராம்

தேங்காய் துருவல் – 1/2 மூடி

மிளகாய் வற்றல் – 8 – 9

பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி

வெல்லம் – 1 மேஜைக்கரண்டி

பிரண்டை தண்டுகள் (இளசு) – 100 கிராம்

கடுகு – 1 தேக்கரண்டி

புளி – நெல்லிக்காயளவு

நல்லெண்ணெய் – 50 கிராம்

உளுத்தம்பருப்பு – 25 கிராம்

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிய கட்டுகள்

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

· பிரண்டை தண்டுகளை சுத்தமாக கழுவவும்

· கறுப்பு எள்ளை நீரில் சுத்தம் செய்து உலர்த்தவும். வாணலியில் இட்டு வறுத்துக் கொள்ளவும்.

· எண்ணெய்யை காய்ச்சவும். அதில் பிரண்டை துண்டுகள், உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, கொத்தமல்லி, துருவிய தேங்காய் மற்றும் பெருங்காயம் இவற்றை சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

· இப்பொழுது வறுத்து வைத்த கறுப்பு எள், புளி மற்றும் வெல்லத்தை சேர்க்கவும். அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைத்து, இவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

· இந்த விழுதுடன் நான்கு மேஜைக்கரண்டி நல்லெண்ணெய், 1/4 மேஜைக்கரண்டி கடுகு, ஒன்று அல்லது இரண்டு மிளகாய்வற்றலை சேர்க்கவும். இதனால் பிரண்டை விழுது பல நாள் பாதுகாக்கப்படும்.

பிரண்டையை மருத்துவத்தில் பயன்படுத்த, பிரண்டை உப்பை தயார் செய்து கொள்ள வேண்டும். இதை தயாரிக்கும் முறை:

பிரண்டையை சுத்தம் செய்து, உலர்த்தி எரித்து சாம்பலாக்க வேண்டும். ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து, வடிகட்டி, 1/2 நாள் தெளிய வைக்க வேண்டும். தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 – 10 நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். நீர் முழுவதும் சுண்டி காய்ந்த பின் படிந்திருக்கும் உப்பை சேகரித்து வைக்கவும். வெயிலில் வைப்பதற்கு பதில், சிறு தீயிலிட்டும் காய்ச்சலாம். கெட்டியாக குழம்பு போல் திரண்டு வரும் போது எடுத்து பீங்கான் தட்டில் கொட்டி 3 மணி நேரம் விட, உப்பு படிந்து விடும்.

இதே போல பிரண்டை பற்பமும் செய்யலாம்.

300 கிராம் பிரண்டை 100 கிராம் உப்புடன் ஆட்டி அடை தட்டி மண் குடுவையில் வைத்துச் சீலைமண் செய்து புடம் போட்டு எடுக்க சாம்பல் பற்பமாக மாறி இருக்கும். உப்பைப் போலவே எல்லா நோய்களுக்கும் இந்த பஸ்பத்தைக் கொடுக்கலாம்.

இந்த பிரண்டை உப்பு / பற்பத்தை பல விதங்களில் பயன்படுத்தலாம்

1. குழந்தைகளுக்கு வரும் பேதி, வாந்தியில், ஒரு அரிசி அளவை பிரண்டை உப்பை பாலில் கலந்து கொடுக்கலாம். இதை 3 வேளை கொடுக்கலாம். அளவை மீற வேண்டாம். பெரியவர்களுக்கு 2 – 3 கிரர் மோர் / கஞ்சியில் கொடுக்கலாம்.

2. வயிற்றுப்புண்கள், வயிற்று வலி ஆகியவற்றுக்கு 40 லிருந்து 80 நாட்கள் பிரண்டை உப்பை சாப்பிட்டால் குணம் தெரியும். மூலத்திற்கு தினம் குஞ்சு மணி அளவு பிரண்டை உப்பை நெய் (அ) வெண்ணையுடன் சாப்பிட்டு வர மூல வியாதி குணமாகும். ரத்தம் வரும் மூலமும் குணமாகும்.

3. பிரண்டை உப்பை 2 கிராம் எடுத்து, 5 கிராம் ஜாதிக்காய் பொடியுடன் சாப்பிட்டு வர ஆண்மை வீரியம் பெருகும்.

4. உடல் பருத்து, ஊளைச் சதையுடன் இருப்பவர்கள் தினம் 2 – 3 கிராம் பிரண்டை உப்பை பாலில் சேர்த்து குடித்து வர வேண்டும். அநுபானமாக மோர், இளநீர் இவற்றையும் உபயோகிக்கலாம். ஊளைச்சதை கரைந்து உடல் மெலிவடையும்.

5. பெண்களின் பெரும்பாடான அதிக உதிரப்போக்கு இவற்றுக்கு 2 நாள் மூன்று வேளை பிரண்டை உப்பை நெய், வெண்ணையில் தரலாம்.

6. சித்த நூல்கள் சொல்வது – களிப்பிரண்டையால் உடலுக்கு உரமுண்டாகும், ஆண்மை பெருகும். சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற சர்ம நோய்கள் நீங்கும். களிப்பிரண்டையை கணு நீக்கி, உணவாக, உப்பு, புளி சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். தவிர பிரப்பங் கிழங்கு (பிரம்பிக் கொடியின் கிழங்கு) பல வாத நோய்களை போக்கும்.

7. ஆப்ரிக்காவில் பிரண்டை சாறு, ஓட்டகத்தில் முதுகில் சவாரி செய்ய உதவும் சேணத்தில் ஏற்படும் புண்களுக்கு மருந்தாக பயனாகிறது. இந்த சாறு பல நோய்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

எச்சரிக்கை

பிரண்டை உப்பு, சாறு போன்றவற்றை ஆயுர்வேத / சித்த வைத்தியரின் கண்காணிப்பின்றி பயன்படுத்தக் கூடாது. அளவுக்கு மிஞ்சினால் பிரண்டை விஷமாகும்.


Spread the love