பருக்கள் தொல்லை இனி இல்லை

Spread the love

முக அழகை கெடுக்கும் பருக்கள்:

இளம் வயது ஆண், பெண் இருபாலினரும் பெரும் பயம் கொள்ளும் பிரச்சனை அவர்கள் முகத்தில் உருவாகும் பருக்கள் தான். பருக்கள் முகத்தைப் பாதிப்பதால், முக அழகினை கெடுத்து  விடுவதால் இளம் வயதினர் குறிப்பாக இளம் பெண்கள் மிகுந்த மன உளைச்சலாலும் பாதிக்கப்படுகின்றனர்.

ஆங்கிலத்தில் முகப்பருவின் மருத்துவப் பெயர் (Acne) ஏக்னே:

இதில் ஒரு வகை Acne Vulgaris பரவலாக காணப்படும் பருக்கள் ஆகும். முன்பே நாம் அறிந்தது போல, நமது தோலில் நுண்ணிய துவாரங்கள் உள்ளன. இவை முடிக் கால்கள் (Hair Folicles) எனப்படும். இந்த முடிக்கால்களில் எண்ணெய் சுரப்பிகள் உள்ளன. இவை  சேபேசியஸ் சுரப்பிகள் (Sebaceous Glands) எனப்படும். இச்சுரப்பியானது தோல் ரோமம் முதலியவற்றுக்கு எண்ணெய்ப் பசையைச் சுரக்கும் நிணநீர் சுரப்பி நாளங்கள்;. இந்த எண்ணெய்ப்பசை சீபம் (Sebum) எனப்படுகிறது. சீபம் தான் முடிக்கு போஷாக்கினையும் பளபளப்பையும் தருகிறது. இந்த சீபம் முடிக்கால்களின் துவாரங்களின் வழியே தான் தோலின் மேல் வழக்கமாக வந்து சேரும். சில காரணங்களால் தேவைக்கு மேல் அதிகமாக சீபம் சுரந்து விடுகிறது. ஹார்மோன், பாக்டிரியா, உலர்ந்து போன சீபம் இவற்றால் முடிக்கால்கள் அடைபட்டுப் போனால் அதிகம் சுரந்திருக்கும் சீபம் வெளியேற வழியில்லாமல் போகிறது. முழுமையாக சீபம் தடைபட்டு விட்டால் வெண் புள்ளிகளும், முழுதாக தடைபடாமல் இருந்தால் கரும்புள்ளிகளும் ஏற்படுகின்றன்.

முடிக்கால்களில் ; Propionibaterium acnes என்ற பாக்டிரியா இயல்பாகவே குடியிருக்கும் இது விபரிதமாக பெருகி, தேங்கி நிற்கும் சீபத்தை தாக்கி, அவற்றை தோலுக்கு எரிச்சலை உண்டாக்கும் பொருட்களாக மாற்றுகிறது. இந்த சுழற்சி தொற்று காரணமாக தோலில் வீக்கங்கள் ஏற்பட்டு பருக்களாக உருவாகின்றன. தோலில் குறிப்பாக முகம், கழுத்து, மார்பு, முதுகு இவற்றில் சீழ் போன்ற திரவம் நிறைந்த பருக்களாக ( கரும்புள்ளி மற்றும் வெண்புள்ளிகளாக ) தோன்றுகின்றன.

இளம் வயதினருக்கு மட்டும் ஏன் அதிகமாக முகப்பருக்கள் ஏற்படுகின்றன?

பெண்கள் பூப்படையும் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் தான் காரணமாகின்றன. ஆண்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவுகள் அதிகரிக்கும். (டெஸ்டோஸ்டிரோன் ஆண் ஹார்மோன் ஆயிற்றே என்று நீங்கள் கேட்கலாம். பெண்களிடமும் சிறிதளவு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் இருக்கும் ) இந்த உபரி ஹார்மோன் சுரப்பினால்  செபாசியஸ் சுரப்பி ஊக்குவிக்கப்பட்டு அதிக சீபத்தை சுரந்து பருக்களை உண்டாக்கும்.

பருக்கள் தோன்ற காரணங்கள் என்ன?

1. முக அழகை கெடுக்கும் பருக்கள் தோன்ற முதல் காரணம் சீபம். பருவமடையும் காலத்தில் ஆண், பெண்களிடம் ஸ்டிராய்ட் ஹார்மோனான “ஆன்ட்ரோஜன்” சுரக்கும். இது டெஸ்டோஸ்டிரோனும் ஆன்ட்ரோஸ்டிரோனும் கலந்த கலவை ஹார்மோன். இதை அதிகம் சுரப்பது ஆண்களின்  விதைப்பை தான். சிறிதளவு அட்ரினல் கார்டெக்ஸிலும், கருப்பையிலும் (Overy) சுரக்கும் ஆன்ட்ரோஜன் அதிக சீபத்தை உண்டாக்கும்படி செபேசியஸ் சுரப்பிகளை தூண்டி விடும். அதிக சீபம் முடிக்கால்களில் தேங்கி, பேக்டிரியா பாதிப்பினால் பருக்களை (சிறு வீக்கங்களாக) உருவாக்கும். இந்த பேக்டிரியா சீபத்தின் உள்ள டிரைகிளைசிரைடை (Tryglyceride) கொழுப்பு அமிலங்களாக மாற்றி அழற்சி வீக்கங்களை உருவாக்கும்.

2. சிலருக்கு சீபம் சுரப்பிகள் எளிதில் உணர்ச்சி வசப்படும். இதனால் இதர ஹார்மோன்கள் சரியாக இருந்தாலும் சீபம் அதிகமாக சுரக்கும்.

3. கெராடின் (Keratin) தோல் செல்களில் உள்ள முக்கிய நார் புரதம் ஆகும். கெராடினைசேஷன் என்னும் செயல்பாட்டினால் கெராடின் தோல் செல்களில் ஊடுருவித் தங்கி விடும். ஒரு அடைப்பான் போல, முடிக்கால்களை அடைத்து விடும் சீபத்தின் போக்குவரத்து தடைபட்டு போகும்.

4. பெண்களின் மாதவிடாய்க் காலங்களில் பருக்கள் அதிகமாகும். இந்த சமயத்தில் ஹார்மோன்களின் சுரப்பு அதிகமாவது காரணமாகும். இது தவிர மாதவிடாய்க் கோளாறுகள் உள்ள பெண்களுக்கு பருக்கள் அதிகமாக ஏற்படுகின்றன.

5. கார்டிகோ ஸ்டிராய்ட் மற்றும் அனபாலிக் ஸ்டிராய்ட் மருந்துகளால் சீபம் அதிகம் சுரக்கலாம்.

6. சில அழகு சாதன பொருட்களும் முடிக்கால்களை அடைத்து பருக்கள் தோன்றக் காரணமாக அமையும்.

7. பரம்பரையும் ஒரு காரணமாகும். தாய்க்கும், தந்தைக்கும் பருவ காலத்தில் பருக்கள் தோன்றியிருந்தால் உங்களுக்கும் வரலாம்.

8. விட்டமின் ஏ குறைபாடுகள் முகப்பருக்களை உண்டாக்கலாம்.

பழமையான மருத்துவம் கூறும் காரணங்கள்:

ஒருவரது உடலில் அஜீரணமும், மலச்சிக்கலும் ஏற்பட்டிருந்தாலோ, பாதிக்கப்பட்டிருந்தாலோ பருக்கள் தோன்றி விடும். தவறான உணவுகள், வாழ்க்கை முறைகள் இவற்றால் வாத தோஷம் பாதிக்கப்பட்டு கப, பித்த தோஷங்களையும் தாக்கும். ஊக்குவிக்கப்பட்ட பித்தம் ரத்த தாதுவை ( ரத்தத்தை ) கொடுக்கும். மாசு படிந்த ரத்தம் அதிக சீபச் சுரப்பை உண்டாக்குகிறது. கபம் ஏற்கனவே அதிக எண்ணெய்  பசையுடைய தோஷமாகும். சீபத்தை இன்னும் அதிக கெட்டியாக செய்யும்.

1. முன்பு உண்ட உணவு ஜீரணிக்கும் முன்பு மேலும் மேலும் உணவு உண்பது.

2. ஒன்றுக்கொன்று ஒவ்வாத ( பொருந்தாத ) உணவுகளை ஜோடி சேர்த்து உண்பது. ( எ.டு: மீனும் பாலும், தயிரும் பாலும். )

3. பசியில்லாத போது உண்பது, பசிக்கும் போது பட்டினி இருப்பது இது போல உணவு உண்பதில் உள்ள குறைபாடுகளினால் பருக்கள் ஏற்படலாம் என ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.

4. அளவுக்கு அதிகமான பாலுறவு வேட்கையும் பருக்களை உண்டாக்கும். அதிக ஆசை ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்டி, அவை சீபம் சுரப்பை தூண்டி விடலாம்.

பருக்களின் அறிகுறிகள்:

1. ஆரம்ப நிலையில் சிறுகட்டிகள் போல் முகத்தில் தோன்றும். மார்பு, தோள்கள், முதுகில் மேல்புறம் இவற்றிலும் தோன்றலாம். முகத்தில், நெற்றி, கன்னங்கள், மூக்கில் தோன்றலாம்.

2. அனபாலிக் ஸ்டிராய்டு மருந்துகளால் ஏற்படும் பருக்கள் சாதாரணமாக முதுகிலும் தோலிலும் மட்டும் தோன்றும்.

3. குண்டூசியின் தலை போல தோன்றும் பருக்கள் நாளடைவில் பெரிதாகும். கட்டிகளின் உள்ளே சீழ் உண்டாகும். வெளியில் மஞ்சள் நிறமாக பருக்கள் மாறும்.

4. 2,3 நாட்களில் பரு பழுத்து உடையும். பிறகு காய்ந்து விடும். பருக்கள் மறைந்தாலும் அவற்றால் ஏற்பட்ட வடு, தழும்புகள் முகத்தை விகாரப்படுத்தி விடும்.

5. முகப்பருக்கள் ஏற்படும் போது, முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகமாகும். முகம் பளிச்சென்று இல்லாமல் எப்போதும் எண்ணெய் வழிந்து மங்கி காணப்படும்.

முகப்பருக்கள் குணம் பெற என்ன சிகிச்சைகள் உண்டு?

அலோபதி மருத்துவத்தில், தீவிரமில்லாத அக்னேவிற்கு பாக்டிரியாக்களை எதிர்க்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளான  கிளின்மாமைசின், எரித்ரோமைசின், பென்சாயில், பெராக்ஸைட் கொடுக்கப்படுகின்றன. தீவிரமான நிலையில் டெட்சாசைக்ளின், டாக்சிசைக்ளின், எரித்ரோமைசின் போன்றவை கொடுக்கப்படுகின்றன. முகப்பருக்கள் முற்றிலும் மறைய பல வாரங்கள், பல மாதங்கள்  தேவைப்படும். கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் நீங்க சல்பர், ரிசோர்சினால் அடங்கிய மருந்துகள் தரப்படுகின்றன. இந்த மருந்துகளால் பல பக்க விளைவுகள் ஏற்படலாம். ஷிuதீமீவீsவீஷீஸீ மற்றும் லேசர் சிகிச்சையின் மூலம் வடு, தழும்புகளைப் போக்கலாம்.

பருக்களுடன் போராட ஒரு சில டிப்ஸ்:

1. எக்காரணம் கொண்டும் பருக்களை தடவுவது, கிள்ளுவது, அழுத்துவது போன்று செயல்களைச் செய்யாதீர்கள். ஊசியால் குத்தி உள்ளிருக்கும் சீழை வெளியே கொண்டு வர முயற்சிக்காதீர்கள். பருக்களைக் கிள்ளுவதால் அவை மேலும் பரவும். வடுக்களும், தழும்புகளும் ஏற்படும்.

2. கையால் அடிக்கடி முகத்தை ( பருக்களை ) தொட வேண்டாம். கைகளிலிருந்து கிருமிகள் முகத்தில் பரவும்.

3. தினமும் ஒரு வேளையாவது குளிக்கவும். முகத்தை தினசரி 3 முறை கழுவ வேண்டும். சோப்பைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக ஒரு தேக்கரண்டி கடலை மாவு, ரோஜா, பன்னீர் சில துளிகள்,ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி இவற்றைக் கலந்து முகத்தில் தடவி வெந்நீரால் கழுவி விடவும்.

4. சோப்பு பயன்படுத்தாமல் குளித்த மாதிரி இல்லையே என்று கூறுபவரா? அப்படியெனில் மிருதுவான மூலிகை சோப்புகளை பயன்படுத்தவும். முகத்தை துடைக்க மிருதுவான, லேசான துவாலையை (Towel) பயன்படுத்தவும். முகத்தை முரட்டுத்தனமாக துவாலையால் தேய்க்காதீர்கள். உடலையும், சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.

5. கூடிய மட்டும் இரசாயன அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இயற்கையான சந்தன தைலம், பாலாடை, வெள்ளரி, எலுமிச்சை சாறு, முல்தானி மட்டி போன்றவற்றை பயன்படுத்தவும். வேப்ப இலைகள் சரும ஆரோக்கியத்திற்கு நூற்றுக்கு நூறு உத்தரவாதம் தருகிறது.

6. தலை முடியையும் கவனியுங்கள். பொடுகு இல்லாமலும் பார்த்துக் கொள்ளவும். 3 நாட்களுக்கு ஒரு முறையாவது தலைக்குக் குளித்து முடியை அலசவும்.

7. டென்சன், மன அழுத்தம், ஸ்ட்ரெஸ் இவை முகப் பருக்களைத் தோற்றுவிக்கும். எனவே இவைகளைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.

8. உடற்பயிற்சி, தியானம், யோகா செய்வதினால் உடல் பருமனைக் குறைத்து டென்சன் போக்கும்.

9. உணவு பத்தியம் அவசியமானது. கொழுப்பு செறிந்த உணவுகள், இனிப்புகள், ஊறுகாய் முதலியவற்றைத் தவிர்க்கவும்.

10. மலச்சிக்கல் நேரிடாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

முகப்பருக்கள் குணமாக என்ன செய்ய வேண்டும்?

எளிமையான வழி ஒன்றைத் தெரிந்து கொள்வோமே!  வேப்ப மர வேர்களை தண்ணீரில் ஊற வைத்து, இந்த தண்ணீரை பருக்களின் மீது தடவவும். 30 அல்லது 40 வேப்ப இலைகளை ஒரு லிட்டர் தண்ணீரில் விட்டு காய்ச்சி பாதியாக குறைக்கவும். இந்த கஷாயத்தை தினமும் மூன்று மேஜைக் கரண்டி அளவில் குடித்து வரவும். வேப்பிலை நீரால் தினம் முகத்தைக் கழுவினால் தழும்புகள் மறையும்.

1. பழுத்த தக்காளிப் பழக் கூழை பருக்களின் மேல் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவி விடவும்.

2. கற்றாழை சோற்றை தினமும் இரு வேளை பருக்களின் மேல் தடவி வரவும். இதனை உள்ளுக்கும் கொடுக்கலாம். கற்றாழைச் சாறுடன் தேன் கலந்து தடவ பருக்களால் ஏற்படும் தழும்புகள் மறையும். கற்றாழைச் சாற்றை நேரடியாக உட்கொள்ள வேண்டாம். சிறிது நீர் சேர்த்து அருந்தவும்.

3. கறிவேப்பிலை இலைகளை அரைத்து களிம்பாக்கி, அதை பருக்கள் மேல் இரவில் பூசி, காலையில் சுடு நீரால் கழுவவும். இதே போல வெந்தயக் கீரை மற்றும் புதினா இலைகளையும், கொத்தமல்லி இலைகளையும் உபயோகிக்கலாம்.

4. தினமும் 8 டம்ளர் தண்ணீர் அருந்தவும். சருமத்திற்கு நீர்மச் சத்து அதிகமாக கிடைக்கும்.

5. ஒரு கிண்ணத்தில் சூடு நீரை எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி உப்பைப் போட்டு கரைக்கவும். துவாலையில் இந்த நீரை நனைத்து எடுத்து முகத்தில் ( பருக்களின் மேல் ) ஒத்திக் கொள்ளவும். பத்து நாட்களில் பலன் தெரியும்.

6. 5 கிராம் வெந்தயத்தை நீர் சேர்த்து அரைத்து பருக்களின் மேல் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து கழுவிக் கொள்ளவும்.

7. பூண்டை நசுக்கி முகப்பருக்கள் மீதும் அவற்றைச் சுற்றியும் தேய்க்கவும். அடிக்கடி செய்து வர பருக்கள் மறையும்.

8. இலவங்கப்பட்டை பொடி ஒரு ஸ்பூன் எடுத்து மூன்று மேஜைக் கரண்டி தேனுடன் கலந்து இரவு படுக்கும் முன்பு முகத்தில் ( பருக்களின் மேல் ) தடவிக் கொள்ளவும்.மறுநாள் காலையில் கழுவி விடவும். இரண்டு வாரங்கள் இதைச் செய்யவும்.

9. முல்தானி மட்டி (Fullers Earth) இரண்டு மேஜைக் கரண்டி எடுத்து சிறிது கற்பூரம், ரோஜா, பன்னீர், ஐந்து கிராம்புகள் எடுத்துக் கொண்டு களிம்பு கலவையாக செய்து கொள்ளவும். தினமும் பருக்களின் மீது தடவி நன்கு உலர்ந்த பிறகு குளிர்ந்த தண்ணீரில் கழுவி எடுக்கவும். தொடர்ந்து பத்து நாட்கள் செய்து வரவும்.

10. ஜாதிக்காய் பொடி, கருமிளகு பொடி, சந்தன பொடி இவற்றை சம அளவில் எடுத்து களிம்பாக்கி பருக்களின் மேல் தடவவும்.


Spread the love