சுகம் தரும் சந்நிதிகள் வினை தீர்க்கும் கற்பக விநாயகர், பிள்ளையார் பட்டி

Spread the love

நமது தேசத்தில் எல்லா இடத்திலும், எல்லோராலும் வணங்கப்படும் கடவுள் விநாயகர். எல்லோருக்கும், குறிப்பாக சிறுவர்களுக்கு பிடித்தமான கடவுள். தமிழகத்தின் நகரங்களில் வீதிக்கு வீதி விநாயகர் கோவில்களை காணலாம். மரத்தடி பிள்ளையார் இல்லாத கிராமமே கிடையாது என்று சொல்லலாம். இந்த தனிச்சிறப்பு பிள்ளையாருக்கே உரியது.

பிள்ளையார் மற்றொரு சிறப்பு அவர் முழுமுதற் கடவுள். வீடுகளில் செய்யும் பூஜையானாலும் சரி, கோயிலில் நடக்கும் பூஜையாகட்டும், அவருக்கே முதல் மரியாதை! முக்கால் வாசி தமிழ் இலக்கிய நூல்கள், விநாயகர் துதியுடனே ஆரம்பிக்கின்றன. “வாக்குண்டாம்” என்றும் “பாலும் தெளிதேனும்” என்றும் தொடங்கும் விநாயகர் துதிப்பாடல்களை அறியாதவர் யார்?

பிள்ளையாரின் மற்றொரு சிறப்பு அவர் எளிமையான கடவுள். மற்ற தெய்வங்களின் சிலைகள் சிற்ப சாஸ்திர முறைப்படி அமைந்திருந்தால் தான் வழிபாட்டுக்கு ஏற்றவையாக கருதப்படும். ஆனால் மஞ்சள் பொடி, களிமண், சந்தனம் போன்ற எந்த பொருளிலும் நாம் உருட்டிப் பிடித்து, விநாயகராக ஏற்று பூஜை செய்யலாம்.

கோயிலைப் பற்றி

பாறையைக் குடைந்து குகைக் கோயிலாக அமைக்கப்பட்ட கற்பக விநாயகர் கோயில், காரைக்குடியில் அருகிலுள்ள பிள்ளையார் பட்டியில் அமைந்துள்ளது.

மூலவர் – கற்பக விநாயகர் – 6 அடி உயர சிலையில் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து அருள்புரிகிறார். இரண்டே கரங்கள் – வலது கரத்தில் சிறிய சிவலிங்கம், இடக்கரம் வயிறை அணைத்தபடி.

வலம்புரிநிலையில் விநாயகரின் தும்பிக்கை வலது பக்கம் திரும்பியிருக்கிறது.

இதர சந்நிதிகள் – திருவீசர், மருதீசர், செஞ்சாதேஸ்வரர் என்ற 3 லிங்கங்கள், மற்றும் சிவகாமி அம்மன், வாடா மலர் மங்கலம்மன், சௌந்தர்ய நாயக அம்மன் என்ற மூன்று தேவிகளும் இங்கு அருள் பாலிக்கின்றனர். தவிர மகாலட்சுமி, சரஸ்வதி மற்றும் துர்க்கை இங்கு ஒரே இடத்தில் காணப்படுகின்றனர்.

சக்தி சந்நிதி – இங்கு சப்த மாதர் (ஏழு கன்னிகள்) களின் அழகான விக்கிரங்கள் காணப்படுகின்றன.

கோயிலைப் பற்றி இதர குறிப்புகள்

இந்த கோயில் விநாயகரின் இளைய சகோதரரான முருகப் பெருமான் தன் மனைவியர்கள் தெய்வயானை, வள்ளியுடன் தனித்தனி வாகனங்களில் காட்சி அளிக்கிறார்.

கோயிலில் காணப்படும் 15 கல்வெட்டுகள், கோயிலின் வரலாற்றையும், வயதையும் அறிய உதவுகின்றன. மூன்று கால கட்டங்களில் இந்த கோயில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. முதல் கட்டம் – 1600 வருடங்களுக்கு முன் பாறையை குடைந்து, கற்பக விநாயகர், திருவீசர் உருவங்கள் செதுக்கப்பட்டன. பல்லவர்களுக்கு முந்தைய கால மிது.

பல்லவ அரசர்கள் “குகைக் கோயில்” கட்டுவதில் பிரசித்தி பெற்றவர்கள். உதாரணங்கள் அவர்கள் கட்டிய இடங்கள் மகாபலிபுரம், மகேந்திர வாடி, மாமந்தூர், நாமக்கல், திருச்சி என்று பெரிய பட்டியலை சொல்லலாம். குகைக் கோயில் கட்டட கலையில் பெரும் ஆர்வம் கொண்டிருந்த பல்லவ மன்னர்கள். மகேந்திர வர்ம பல்லவன் (கி.பி. 615 – 630) மற்றும் நரசிம்ம வர்ம பல்லவன் (கி.பி. 630 – 668). ஆனால் கல்வெட்டுகள் பிள்ளையார் பட்டி கோயிலின் தோற்றம் இன்னும் பழமையான 4 – ம் நூற்றாண்டு என்கின்றன. தவிர கோயிலுக்குள் உள்ள தூண்கள் பல்லவர்களின் கட்டத்திற்கு முன்பானவை. எனவே முதல் கட்டத்தில் பாண்டிய மன்னர்களாலும், இரண்டாவது கட்டத்தில் பல்லவர்களாலும் இந்தக் கோயில் வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது.

இரண்டாம் கட்டத்தில் கோயிலின் விமானங்கள், ராஜ கோபுரங்கள் கட்டப்பட்டன. இரண்டாம் காலகட்டத்திலேயே, 13 ம் நூற்றாண்டில் இந்த கோயிலை பராமரிக்கும் பொறுப்பு பிள்ளையார்பட்டி நகரத்தார் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மூன்றாம் காலகட்டத்தில் கோயிலின் சிதிலமடைந்திருந்த பகுதிகள் மறுபடியும் கட்டப்பட்டு புனருத்தானம் செய்யப்பட்டது. கோயில் திருக்குளம் தூர்வாரப்பட்டு சுத்தீகரிக்கப்பட்டது.

கோயிலின் தல விருட்சம் மருதமரம், பல மருந்துவ பயன்களை கொண்டது. ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் மூலிகை மரம்.

இந்த கோயில், பசுவின் பால் பொழியுமாறு அமைந்துள்ள பசுபதீஸ்வரரின் லிங்கம் பிரசித்தி பெற்றது. குபேரன் இந்த லிங்கத்தை வணங்கி, வழிபட்டதாக சொல்லப்படுகிறது.

கோயில் விழாக்களில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி இந்த உற்சவம் 10 நாட்களுக்கு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் முக்கிய அம்சம் முக்குருணி மோதக நைவேத்தியம். விநாயகர்மோதகப் (கொழுக்கட்டை) பிரியவர். அவருக்கென்று பெரியமோதகம் செய்யப்படுகிறது. 18 படி அரிசியினால் செய்யப்பட்ட மோதகம் எட்டாம் நாளன்று அடுப்பிலேற்றி வேக வைக்கப்பட்டு 10 ம் நாளன்று கற்பக விநாயகருக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது. ஒன்பதாம் நாளன்று விநாயகருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. அன்று தேரோட்டமும் உண்டு.

பிள்ளையார் பட்டி ஊரின் பழைய பெயர்கள்

மருதங்குடி

திருவிங்கை குடி

ஈக்காட்டூர்

சதுர்த்தியின் கதை

சுக்ல சதுர்த்தி தினத்தில், கயிலாயத்தில் பிள்ளையார், உற்சாகம் பொங்க, நடனமாடிக் கொண்டிருந்தார். யானைத் தலை, பெருவயிறு, குச்சிக்கால்களுடன் அவர் ஆடுவதைக் கண்டு சந்திரன் சிரித்தான். கோபமடைந்த பிள்ளையார் “சந்திரனே, நீ கேலியாக என்னைக் கண்டு சிரித்ததால் இனி எந்த சுக்ல சதுர்த்தியிலும் உன்னை பார்ப்பவர்களுக்கு தீயதே நடக்கும். அனைவரும் உன்னை வெறுத்து ஒதுக்குவார்கள். ஆனால் ஆவணி மாதம் சுக்ல சதுர்த்தியின் என்னை பூஜித்தால் அந்த அபவாதம் நீங்கும்” என்றார்.

பூஜை நேரங்கள்

காலை 6 மணிக்கு திருவனந்தல் – நைவேத்தியம் பால், பொரி உண்டை, வெற்றிலை பாக்கு.

உச்சிக்கால நைவேத்தியங்கள் – புளியோதரை, பொரியல், கூட்டு, வடை, பாயாசம், தயிர், தயிர் சாதம்.

சாயரட்சை நைவேத்தியங்கள் – சர்க்கரைப் பொங்கலட

அர்த்த ஜாம நைவேத்தியம் – அப்பம், வடை, மோதகம்

தரிசன நேரங்கள் – காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

சிறப்பு அம்சங்கள்

சதுர்த்தி அன்று தன்னை வழிபடும் பக்தர்களின் சங்கடத்தை போக்குகிறார் பிள்ளையார்பட்டி பிள்ளையார். ஒருவருடம் சதுர்த்தி விரதத்தை அனுஷ்டிக்கும் பக்தர்கள், தங்கள் விரதத்தை சதுர்த்தியன்று பிள்ளையார்ப்பட்டி விநாயகரை துதித்து தொடங்குவார்கள். விரதத்தை நிறைவு செய்வதும் சதுர்த்தி அன்றே. ஒரு வருட விரதத்தை செய்யும் பக்தர்களுக்கு கற்பக விநாயகர், கற்பக விருட்சம் போல், வேண்டியவற்றை வழங்குவார். கற்பக மரம் போல் பக்தர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதால் பிள்ளையார் பட்டி பிள்ளையார் கற்பக விநாயகர்எனப்படுகிறார். கற்பக விநாயகரின் துதிக்கை வலது பக்கம் வளைந்துள்ளதால் இவர் வலம்புரி விநாயகர் என்றும் சொல்லப்படுகிறார். வடக்கு பக்கம் நோக்கி உட்கார்ந்திருக்கும் வலம்புரி விநாயகரை வழிபட்டால் வெற்றி மேல் வெற்றி கிட்டும்.

இந்த கோயிலில் உள்ள காத்தியாயினிஅம்மனை வழிபட்டால், பெண்களின் கல்யாணத்திற்கு தடையாக இருக்கும் செவ்வாய் தோஷம் நீங்கும். திருமணமாகும்.

இங்கு 5 தலைகளுள்ள நாகத்துடன் உள்ள நாகலிங்கத்தை வழிபட்டால் மகப்பேறு உண்டாகும். இங்குள்ள பசுபதிஸ்வரரை வழிபட்டால் செல்வம் பெருகும்.

ஸ்தல விவரங்கள்

பிள்ளையார்பட்டி, காரைக்குடி – திருப்பத்தூர் நெஞ்சாலையில் காரைக்குடியிலிருந்து 12 A.e. தொலைவிலும், திருப்பத்தூரிலிருந்து 7 A.e.. தொலைவிலும் உள்ளது. காரைக்குடி செல்ல சென்னையிலிருந்து ரயில்கள் உள்ளன. பல பஸ்களும் உள்ளன.


Spread the love