மூலத்தை நிர்மூலமாக்கலாம்

Spread the love

மூல வியாதியினால் மலவாய்ப் பகுதியில் ஏற்பட்ட வீக்கம், வலி குறைய மஞ்சள் பொடியை விளக்கெண்ணெயில் கலந்து அப்பகுதியில் பூசிப் பற்றிட்டு வர வலி நீங்கும்.

முளை விட்டுக் கொண்டு காணப்படும் மூல நோயால் அவதிப்படுபவர், முருங்கை இலையையும், முள்ளங்கி இலையையும் சேர்த்து இடித்து, அரைத்து சூடு செய்து முளை மீது பற்றுப் போட வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். மூல நோய் முளைகளின் மீது  எருக்கம் பாலுடன் மஞ்சள் கலந்து பற்று போட்டால் விரைவில் குணம் பெறலாம். மூலத்தின் முளைகள் வற்றி விடும்.

கருணைக் கிழங்கு சூரணத்தை தினசரி காலை, மாலையென இரு வேளையாக தேனில் குழைத்துச் சாப்பிட்டு வரலாம். மூலம் குணமாகும்.

கருணைக் கிழங்கை பசும்பால் அல்லது மோரில் அரைத்து தினமும் காலையில் மட்டும் தொடர்ந்து சில நாட்கள் உட்கொண்டு வரலாம்.

கடுக்காய்ச் சூரணம் பத்து, பதினைந்து குண்டு மணி அளவு எடுத்துக் கொண்டு வெல்லம் சேர்த்துக் கலந்து இரண்டு, மூன்று வாரங்கள் தொடர்ந்து உட்கொண்டு  வரவும். தினசரி இரு வேளைகள் எடுத்துக் கொள்ளவும்.

முள்ளங்கிச் சாறு இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொண்டு, கால் டம்ளர் மோரில் கலந்து தினசரி அதிகாலை என இரண்டு வாரங்கள் வரை அருந்தி வர மூலம் தீரும்.

பாகற்காய் அல்லது பாகல் இலையை இடித்துச் சாறு பிழிந்து கொள்ளவும். மேற்கூறிய சாறு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொண்டு சர்க்கரை கலந்து தினமும் இருவேளை என இரண்டு வாரங்கள் உட்கொண்டு வர இரத்த மூலம் குணமாகும்.

ஒரு கைப்பிடி அருகம்புல் வேரை சுத்தம் செய்து பின்பு இடித்து இரவில் ஒரு டம்ளர் நீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை எடுத்து வடிகட்டி அருந்தி வர (தொடர்ந்து 48 நாட்கள் வரை) இரத்த மூலம் குணமாகும்.

கடைந்த மோரில் வெங்காயத்தை அரித்துப் போட்டு தினசரி மூன்று வேளை அருந்தி வர இரத்த மூலம் கட்டுப்படும்.

பொன்னாங்கண்ணிச் சமூலத்தை (இலை, பூ, காய், தண்டு, வேர் அனைத்தும் சேர்ந்து சமூலம் என்பர்) கொண்டு வந்து கஷாயம் செய்து தினசரி காலை, மாலை என ஒரு டம்ளர் அருந்தி வர இரத்தம் கசியும். மூலம் நீங்கும்.

கடுக்காய்த் தோல், திப்பிலி, கற்கண்டு மூன்றும் சமமான எடை எடுத்துக் கொண்டு அனைத்தையும் இடித்துப் பொடி செய்து சலித்துக் கொள்ளவும். மேற்கூறிய பொடியை கடுக்காய் அளவு வெண்ணெயில் கலந்து தினசரி காலை, இரவு வேளைகளாக தொடர்ந்து ஓரிரு வாரங்கள் உட்கொண்டு வர மூலம் குணமாகும்.

கருணைக் கிழங்குப் பொடி அரைத் தேக்கரண்டி அளவு எடுத்துக் கொண்டு தேன், சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் அளவாகச் சேர்த்து தினசரி மூன்று வேளை என  ஓரிரு வாரங்கள் உட்கொள்ள மூலம் குணம் பெறும்.

தொட்டால் சிணுங்கிச் செடியின் இலையை சுத்தம் செய்த பின்பு நன்றாக அரைத்து ஒரு தேக்கரண்டி அளவு சாறு எடுத்து இதனுடன் காய்ச்சி ஆற வைத்து பசும்பாலைக் கலந்து தினசரி இருவேளையாக உட்கொண்டு வர மூலம் நீங்கும்.

பொன்னாங்கண்ணி இலைச் சாற்றுடன் முள்ளங்கி இலைச் சாறு சம அளவில் கலந்து, அதனுடன் செந்தவ லவண உப்பை ஒரு சிட்டிகை அளவு கலந்து தினசரி இருவேளை உட்கொண்டு வர மூல நோய் குணமாகும்.

நெல்லிக்காய் வற்றலைப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். அப்பொடியை இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொண்டு மோரில் கலந்து தினமும் வெறும் வயிற்றில் உட்கொண்டு வர மூலம் காரணமாக ஏற்படும் இரத்தப்போக்கு குறையும்.

வெங்காயம், மிளகு, துளசி இலை அனைத்தையும் சம அளவு எடுத்து அரைத்துக் கொண்டு அதில் நெல்லிக்காய் அளவு தினசரி காலை, இரவு என இருவேளை தொடர்ந்து உட்கொண்டு வர இரத்த மூலம் குணம் பெறும். இம்மருந்து உட்கொண்ட பின்பு வென்னீர் அருந்த வேண்டும்.


Spread the love