துவரையை நம் வீட்டில் தினமும் செய்யும் சமையலான சாம்பாரில் சேர்க்கப்படும் முக்கியமான மூலப்பொருளாகும். இதை கெட்டியானப் பருப்பாக வைத்து நெய் அல்லது மிளகு ரசத்துடன் உண்ணுவார்கள். துவரையானது வளரும் குழந்தைகளுக்கு தேவையான புரதச்சத்தில் மூன்றில் ஒரு பங்கினைக் அளிக்கிறது.
இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலத்தில் வளரும் முக்கியமான பயிராகும். இது வறட்சியையும், கடுமையான காலநிலையையும் தாங்கி வளரும் தாவரம் ஆகும். துவரையானது வேகமாகவும் அதே நேரத்தில் குறைந்த சத்துள்ள மண்ணிலும் செழித்து வளரும் தன்மையுடையது.
துவரையானது எளிதாக உலர்ந்துவிடும் தன்மையும், நீண்ட நாட்கள் களஞ்சியப்படுத்தும் (சேமித்து வைக்கும்) பண்பினையும் கொண்டுள்ளது. எனவே இது மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய சத்துமிகுந்த முக்கிய உணவாகக் கருதப்படுகிறது.
வரலாறு
துவரையின் தாயகம் இந்தியா ஆகும். துவரையானது இந்தியாவில் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் முறையாக பயிர் செய்யப்பட்டது. ஆசியா, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் முக்கிய பயிறு வகையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கிமு 2000 ஆண்டில் கிழக்கு ஆப்பிரிக்காவில் முறையாக பயிர்செய்யப்பட்டு பின்னர் அங்கிருந்து அமெரிக்காவிற்கு பரவியது. தற்போது உலகெங்கும் துவரையானது பரவலாகப் பயிர் செய்யப்படுகிறது.
வளரியல்பு
துவரையானது கிளைத்து வளரும் குற்றுச்செடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இது எல்லாவகை மண்ணிலும் செழித்து வளரும் இயல்புடையது ஆகும்.
இத்தாவரத்திலிருந்து மஞ்சள் அல்லது துருப்பிடித்த பழுப்பு நிறத்தில் பூக்கள் பூக்கின்றன. இப்பூக்களிலிருந்து பச்சைநிறக் காய்கள் காய்கின்றன.
இலைகள், பூக்கள்
இக்காய்களில் 2 முதல் 8 வரை விதைகள் தோன்றுகின்றன. விதைகள் 6 முதல் 8 மிமீ விட்டளவுடன் சிவப்பு, பழுப்பு, இளம் மஞ்சள் நிறங்களில் இருக்கும். இவ்விதைகளே நாம் துவரை என்று அழைகிறோம். இவ்விதைகளிலிருந்து கிடைக்கும் பருப்பு துவரம் பருப்பு ஆகும்.
ஊட்டச்சத்துக்கள்
துவரையில் பி-த்தொகுப்பு விட்டமின்களான பி1 (தயாமின்), பி9 (ஃபோலேட்டுக்கள்) அதிகளவும், பி2 (ரிபோஃப்ளோவின்), பி3 (நியாசின்), பி5 (பான்டாதெனிக் அமிலம்), பி6 (பைரிடாக்ஸின்), சி, கே, சோலைன் ஆகியவையும் காணப்படுகின்றன.
இதில் தாதுஉப்புக்களான செம்புச்சத்து, இரும்புச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகியவை அதிகளவும், கால்சியம், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் போன்றவையும் உள்ளன.
மேலும் இதில் கார்போஹைட்ரேட்டுகள், புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவையும் காணப்படுகின்றன.
மருத்துவப் பண்புகள்
இரத்த அழுத்தத்தை சீராக வைக்க
துவரையில் உள்ள பொட்டாசியமானது இரத்த குழாய் விரிப்பானாகச் செயல்பட்டு இரத்த ஓட்டத்தை சீராக நடைபெறச் செய்கிறது. இதனால் இரத்த அழுத்தம் சீரான அளவில் இருக்கிறது. ஆகவே துவரையை அடிக்கடி உணவில் சேர்த்து இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கலாம்.
ஆரோக்கியமான வளர்ச்சிக்கு
துவரையானது ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்தினைக் கொண்டுள்ளது. புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது.
காயங்களை விரைந்து ஆற்றவும், செல்களின் மறுவளர்ச்சிக்கும் புரதச்சத்து அவசியமானது. எனவே துவரையை உண்டு ஆரோக்கியமான வளர்ச்சியைப் பெறலாம்.
அனீமியாவைத் தடுக்க
ஃபோலேட்டுகளின் குறைபாட்டினால் அனீமியா மற்றும் பிறப்புக்குறைபாடுகள் தோன்ற வாய்ப்புள்ளது. துவரையானது அபரிதமான ஃபோலேட்டுகளைக் கொண்டுள்ளது.
எனவே இதனை உண்டு அனீமியாவை விரட்டலாம். வளரும் நாடுகளில் காணப்படும் அனீமியாவிற்கு துவரை ஒரு தீர்வாக அமைந்துள்ளது.
எதிர்ப்பு அழற்சி பண்பு
துவரையில் உள்ள கனிமச்சத்துக்கள் வீக்கத்தைக் குறைப்பதோடு எதிர்ப்பு அழற்சி பண்பினையும் கொண்டுள்ளன. இப்பண்பானது துவரையின் இலைகள், பயிறு, பருப்பு எல்லாவற்றிலும் காணப்படுகின்றது.
ஊர் புறங்களில் அடிபட்டவர்களுக்கு அடிபட்ட இடத்தில் உண்டாகும் வீக்கம் மற்றும் இரத்தகட்டிற்கு துவரையை அரைத்துப்போடுவது வழக்கம்.
உடல்எடை இழப்பிற்கு
துவரையானது குறைந்தஅளவு கலோரி மற்றும் கொழுப்புச்சத்தினைக் கொண்டுள்ளது. இதில் உள்ள நார்ச்சத்தானது வயிறு நிரம்பிய உணர்வினை நீண்ட நேரம் ஏற்படுத்தி, உடல்வளர்ச்சிதை மாற்றம் சீராக நடைபெற உதவ செய்கிறது.
துவரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது.
ஆற்றலினைப் பெற
துவரையில் உள்ள விட்டமின் பி2 (ரிபோஃப்ளோவின்) மற்றும் பி3 (நியாசின்) போன்றவை கார்போஹைட்ரேட்டின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
கொழுப்பு ஆற்றல் சேமிப்பதைத் தடுத்து ஆற்றலின் அளவினை அதிகரிக்கச் செய்கிறது.
நோய் எதிர்ப்பு ஆற்றல் பெற
துவரையில் உள்ள விட்டமின் சி- யானது உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. இது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு ஆன்டிஆக்ஸிஜனாக செயல்பட்டு உடல்நலத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்கிறது.
இதயநலத்தை மேம்படுத்த
துவரையில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து ஆகியவை இதயத்தை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. நார்ச்சத்து கொழுப்பு சேகரமாவதைத் தடுக்கிறது. எனவே துவரையை உண்டு இதயத்தை மேம்படுத்தலாம்.
செரிமானத்தை மேம்படுத்த
துவரையில் உள்ள நார்ச்சத்து செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி வெளியேற்ற நார்ச்சத்து உதவுகிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி, மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானப்பிரச்சினைகள் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.
ஊட்டச் சத்துக்கள் நிறைந்த துவரையை அடிக்கடி உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்வு வாழ்வோம்.