பொதுவாக நாம் காய்ச்சல், சளி அல்லது இருமல் வந்தால் மட்டும் தான் டாக்டரிடம் செல்கிறோம். நான் நல்ல ஆரோக்கியமுடன் தான் இருக்கிறேன். தினசரி 3 வேளை நன்றாக சாப்பிடுகிறேன். பசி எடுக்கிறது. எனக்கு எந்த ஒரு நோயும் இல்லை என்று தான் பெரும்பாலான மக்கள் எண்ணுகிறார்கள். இது தவறான கண்ணோட்டம்.
இன்றைய தவறான உணவுப் பழக்கங்கள், வாழ்க்கைச் சூழல் மாற்றம், பரபரப்பான வாழ்க்கை, மாசடைந்த சுற்றுச் சூழல் கரணமாக நம்மை அறியாமலேயே பல்வேறு நோய்கள் நமது உடலுக்குள் வந்து சேர்கின்றன. உடலுக்குள் அவ்வாறு ஒளிந்திருக்கும் நோய் திடீரென ஒரு நாள் நம்மைத் தாக்கும் பொழுது நோய் முற்றிய நிலையில் இருக்க நேரிடலாம். அதனால் தான் நாம் எச்சரிக்கையுடன் செயல்பட, உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக, நமது முழு உடல் நிலையும், மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
நோய் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் அல்லது நோய் அறிகுறிகள் தென்படும் பொழுது மருத்துவரைப் பார்க்கலாம் என்று விஷயத்தின் முக்கியத்துவம் தெரியாமல் தள்ளிப் போடுகின்றனர். தலைச் சுற்றல், மயக்கம் வந்தால் உயர் இரத்த அழுத்தமும் அதிகமாக சிறுநீர் போதல், புண் ஆறுவதற்கு நாளாகுதல் என்றால் அது நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறி என்று தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு நோய் அறிகுறிகள் தெரியும் வரை காத்திருப்பதை விட நோய் வருமுன் நம்மை பாதுகாத்துக் கொள்வது தான் நல்லது. என்ன நோய் வந்துள்ளது என்று அந்நோய் மேலும் பரவுவதற்கு முன்பே கண்டுபிடித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, சிகிச்சை பெற்றுக் கொள்ள முழுஉடல் பரிசோதனை பயன்படுகிறது.
முழு உடல் பரிசோதனையை யார் அவசியம் செய்ய வேண்டும்?
பாரம்பரியமாக உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இரத்தப் புற்று நோய் மாரடைப்பு, பிறவிக் கோளறுகள் தொடர்ந்து வந்தால், அக்குடும்பத்தில் பிறந்தவர்கள் 20 வயதில் ஒருமுறை உடல் முழு பரிசோதனை செய்ய வேண்டும். அதன் பின்னர் அவசியம் தேவைப்பட்டால், மருத்துவரின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் மது அருந்துபவர்கள், புகைப்பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், உடற்பயிற்சி செய்ய இயலாதவர்கள், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இதய, சிறுநீரக நோயாளிகள், கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் நோய்த் தடுப்பு மருந்துகள் சாப்பிடுவர்கள், வலி நிவாரணி மருந்துகளை அதிகம் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் போன்றோர் வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
முழு உடல் பரிசோதனையின் பயன்கள்
நீரிழிவு நோயின் முந்தைய நிலையில் இருப்பவர்கள் உடல் பரிசோதனை மூலம் எச்சரிக்கையாக இருப்பதுடன், சரியான உணவு முறை, உடற்பயிற்சிகள் மேற்கொள்வதுடன் வாழ்க்கைச் சூழலை நலல நிலையில் அமைத்துக் கொண்டு நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம் அல்லது நோயைத் தள்ளி போடலாம்.
பல், கண், காது, மூக்கு, தொண்டை போன்ற பல உறுப்புகளில் ஏற்படக்கூடிய நோய்களை முன்னதாகவே தெரிந்து கொள்ளலாம்.
இதயம், சிறுநீரகம், கல்லீரல், மார்பகம், கர்ப்பப்பை வாய் போன்ற உறுப்புகளில் ஏற்பட இருக்கும் நோய்களை முன்கூட்டியே இதன் மூலம் கண்டறிந்து அதற்கேற்ப மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். ஏற்கனவே நோய் இருந்தால் நோயின் தன்மையை அறிந்து மருத்துவ சிகிச்சை பெற்று உயிருக்குப் பாதுகாப்பு தர இயலும். புற்று நோய் போன்ற நோய்களை நாம் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து விட்டால், மருத்துவ சிகிச்சையை மாற்றி அமைத்து நோயைக் குணப்படுத்துவது குறித்து யோசிக்க முடியும். ஏற்கனவே, புற்று நோய் இருந்தால், உடலில் மற்ற உறுப்புகளுக்குப் பரவுவதை தடுப்பதும் சாத்தியமாகும்.
முழு உடல் பரிசோதனையுடன் சிறப்பு பரிசோதனை
பொதுவாக முழுஉடல் பரிசோதனை (மாஸ்டர் ஹெல்த் செக்கப்)யுடன் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் என ஒவ்வொரு உறுப்புக்கும் தனிப்பட்ட சிறப்பு பரிசோதனைகளும் மருத்துவரால் தேவைக்கிணங்க செய்யப்படுகிறது. ஆண்களுக்கு முக்கியமாக ஈ.எஸ்.ஏ. பரிசோதனையும் பெண்களுக்கு தைராய்டு பரிசோதனை, மேமோகிராப் மற்றும் பாப் சிமியர் பரிசோதனைகளும், முதியவர்களுக்கு புற்று நோய்க்கான டியூமர் மார்க்கர்ஸ், குடல் புற்று நோய்க்கான கொலோனோஸ் கோப்பா பரிசோதனை மற்றும் எலும்பு வலுவிழப்பு நோய்க்கான டெக்சா ஸ்கேன், வைட்டமின் டி, கால்சியம் பரிசோதனைகளை, மூட்டு வலிக்கான பரிசோதனைகளும் தேனையானவர்களுக்கு மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகின்றன.