வாழ்க்கை வாழ்வதற்கே! எனும் முழக்கம் கேட்கிறது. ஆனால் எத்தகைய வாழ்க்கை வாழ்வதற்கு? எனும் வினாவினை எழுப்புவோமானால், பலர் வளமாக வாழ்வதற்கெனப் பதில் கூறுவர். ஆயினும் நலமாக வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும். எத்தனை வளம் இருந்தாலும் உடல் நலம் இல்லையென்றால் என்ன பயன்? நோயுடைய ஒருவன் எவ்வளவு செல்வத்தைப் பெற்றிருந்து தான் என்ன பயன்? எனவே, நலமான வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வளமான வாழ்வை அமைத்தால் பெரும் பயன் கிட்டுமன்றோ?
மனிதன் உடல், உள்ளம், உயிர் எனும் ஆன்மா ஆகிய மூன்றினால் உருவாக்கப்பட்டுள்ளான். உடல் நலம் மனிதனுக்கு முதல் தேவை. அடுத்தது மனநலம். மன நிறைவே மனநலமாகும். உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்னும் திருமந்திரத்தால் இந்த உண்மையை அறியலாம்.
கொடிது கொடிது இளமையில் வறுமை என்பர். வறுமை என்ற சொல், பொருள் வறுமையைக் குறித்து நிற்காமல் உடல் வறுமை, உள்ள வறுமை, எண்ண வறுமை, செயல் வறுமை, நடத்தையில் வறுமை இவற்றையே குறித்து நிற்கிறது. மனிதன் புறச் சூழல்களால் தாக்கப்பட்டு, மனக் கலக்கம் அடையும் பொழுதுதான் மேற்கூறப்பட்ட வறுமைகள் வந்தடைகின்றன.
இத்தகைய கலக்கம் மனத்தைக் கலக்காமல் இருக்கச் சிந்தனையில், சிரத்தையுடன் செயல்பட வேண்டும். ஒருங்கிணைந்த பண்பட்ட உள்ளம், நேர்மையான ஒழுக்கநெறிகள் ஊக்க உணர்வு, ஒற்றுமை, சுறுசுறுப்பு, தெளிவான நினைவாற்றல் முதலிய பலவகைப்பட்ட நெறிகளுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகு செயலுக்கு விளையாட்டுப் பெரிதும் பயன்படுகிறது.
ஓடி விளையாடு பாப்பா என்று பாரதி கூறியதற்கு முன்பே நமது சிற்றிலக்கியங்கள் விளையாட்டிற்குப் பருவங்களைக் கண்டு மகிழ்ந்தன. சிற்றில், சிறுதேர், சிறுபறை, அம்மானை, கழங்கு, ஊசல் என்ற விளையாட்டுகளை அறிமுகப்படுத்தின. இத்தகு விளையாட்டுகள் காலத்தின் மாற்றத்தினால் பல்வேறு வடிவில் உருக்கொண்டு வளர்ந்தன. ஏறுதழுவுதல் என்ற வீர விளையாட்டு இல்லற நெறிக்கும் காதல் உணர்வுக்கும் வழிகாட்டி நின்றது. ஒழுக்க நெறிக்கு உரம் இட்டது எனலாம்.
இளைஞர்கள் மட்டுமன்றி முதியவர்களும் விளையாட்டில் முழுக்கவனம் செலுத்தலாம். முதியவர்கள் தங்கள் உடல் வளத்திற்கும். மன வளத்திற்கும் ஏற்ற தேகப் பயிற்சிகளைச் செய்து உடல்நலம் பேணுவதுடன் வருங்கால இளைஞர் சமுதாயத்திற்கும் எடுத்துக்காட்டாய்த் திகழலாம்.
விளையாட்டு வினையாகி விட்டது என்ற பழமொழியை நாம் அறிவோம். சில பெற்றோர்கள் தங்களது பிள்ளை படிப்பில் கவனம் செலுத்தாவிட்டால் எப்பொழுதும் விளையாடிக் கொண்டே இருக்கிறான். இவனைச் சற்றுக் கண்டித்துத் திருத்துங்கள் என்று ஆசிரியரிடத்தில் புகார் கூறுவதுண்டு. ஆசிரியர் அவனிடம் புதைந்து கிடக்கும் விளையாட்டுணர்வை வெளிக்கொணர்ந்து நல்ல விளையாட்டு வீரனாக மாற்றி விடுவதும் உண்டு.
இதனையே மேலேகூறப்பட்ட பழமொழி நினைவுறுத்துகிறது. விளையாட்டு விளையாட்டிற்காகவே என்ற கொள்கை மாறி இன்று விளையாட்டு ஒரு வாழ்க்கை முறையாக தொழிலாக ஏற்றம் பெற்றுள்ளது என்பதையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவரும் இக்காலச் சூழ்நிலையில் இளைஞர்கள் தங்களுடைய உள்ளத்தைத் தீய வழிகளில் செலுத்திப் பல்வேறு தீய நடத்தைகளுக்கு உட்படுகின்றனர். இவர்களுடைய உள்ளம் பண்பட வேண்டுமானால் விளையாட்டுத் துறையிலே கவனம் செலுத்துதல் வேண்டும். இதற்கு செயலினால் நற்பண்புகள் வளரும்.
மனம் ஒரு முகப்படும். உடல் வலுப்பெறும். தன்னம்பிக்கை வளரும். ஒற்றுமை உணர்வு மேலோங்கும். ஒழுக்கநெறி சிறக்கும். வாழ்வு வளம் பெறும். நோயற்ற வாழ்விற்கு விளையாட்டு அடிப்படையாகின்றது. உடல் நலம் பற்றிய அறிவை ஒவ்வொரு மனிதனுக்கும் விளையாட்டு கற்பிக்கின்றது. உடல் நலம் பெற்றால், உள்ளத்தில் நம்பிக்கை எழும். வாழ்வு வளம் பெறும்.