கீழாநெல்லி என்பது பலரும் அறிந்த மருத்துவ குணமுடைய ஒரு வகை மூலிகை செடியாகும். இந்த செடி முழுவதும் பல்வேறு மருத்துவப் பண்புகளை உள்ளடக்கியுள்ளது. நமது பாரம்பரியமான சித்த மருத்துவத்தில் பயன்படும் மூலிகைகளில் கீழாநெல்லி ஒன்றாகும். இது 60–70 செ.மீ. உயரம் வரை வளரும். இதன் இலையின் அடிக்காம்பில் காய்கள் காய்ப்பதால் இதனை கீழ்காய்நெல்லி எனவும் தமிழர்கள் அழைக்கின்றனர். விதைத்த 3 – 4 மாதத்தில் இதனை அறுவடை செய்யலாம். இது விதை மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இது இந்தியாவின் அனைத்து பகுதியிலும் காணப்படுகிறது.
சிறப்புக் குணங்கள்
நமது கால்களுக்கு கீழே வளர்ந்தாலும், நம் தலையை காக்கக்கூடிய மூலிகைகள் பல வகை உண்டு. தானாகவே வளர்வதால் இவற்றின் அருமை நமக்குத் தெரிவதில்லை. அனைத்து இடங்களிலும் சிறிய உருவத்துடன் அமைதியாய் காத்திருக்கும் கீழாநெல்லிக்குள் புதைந்திருக்கும் நுண்கூறுகள் பல்வேறு நோய்களை அழிக்கும் கூர் கருவிகள்! பறவையின் கால்களைப் போன்ற சிறிய இலைகள், உருவத்தில் நேர்த்தி, கொஞ்சத்தூண்டும் சிறிய காய்கள் என பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் மூலிகை இது.
கீழாநெல்லியின் இலைகள், புளியமரத்தின் இலைகளைப் போன்று மாற்றடுக்கில் இரு சீராய் அமைந்த சிறு இலைகளை உடையது. இதன் இலைகளின் கீழ் பூக்கள் மற்றும் காய்கள் அழகாக வரிசைகட்டி நிற்கும். கீழாநெல்லி இலைகளில் ‘பில்லாந்தின்’ எனும் மூலப்பொருள்கள் இருப்பதால், கசப்புத்தன்மை அதிகமாக காணப்படும். இதில் பொட்டாசியம் அதிகளவில் காணப்படுகிறது.
இது நீர்பாங்கான இடங்களில் ஓரடி உயரத்தில் வளரும் சிறு செடியாகும். இளந்தளிராக உள்ள கீழாநெல்லியைச் சாப்பிடுவதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவற்றில் நமக்கு எவ்வித மருத்துவப் பயனும் கிடைப்பதில்லை. எனவே, நன்றாக வளராத கீழாநெல்லி இலைகளை மருந்தாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
நன்கு வளர்ந்த கீழாநெல்லி இலைகளில்தான் Phyllanphin, Hypo Phyllanpin என இரு வேதிப்பொருள் உருவாகும். இதுதவிர, ஆல்கலாய்ட்(Alkaloid) என்ற வேதிப்பொருளும் இந்த செடியில் இருக்கும்.
மருத்துவ குணங்கள்
மஞ்சள்காமாலை முதல் மலட்டுத்தன்மை வரை மிகப் பெரிய நோய்களைக்கூட வீட்டிலேயே எளிதில் சரிசெய்யக்கூடிய அற்புதமான மூலிகைக் கீரை தான் கீழாநெல்லி.
துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கைப்பு என நான்கு சுவைகளின் அற்புதக் கலவையாக இருக்கும் கீழாநெல்லியானது, இயற்கையின் ‘குளிர்சாதனப் பெட்டியாகும்’.
‘காணும் யாவும் மஞ்சளாகவே தோன்றும் கீழாநெல்லி காணாதவரை’ எனும் பழமொழி, மஞ்சள்காமாலை நோய்க்கு இந்த மூலிகை சிறந்த மருந்து என்பதை முன்மொழிகிறது. முழு தாவரத்தையும் அரைத்து சிறு நெல்லிக்காய் அளவில், மோரில் கலந்து குடிப்பது ஈரலுக்கு நல்ல டானிக். கீழாநெல்லியும், கரிசலாங்கண்ணியும் ஈரலுக்கு பாதுகாப்பு அளித்து, மஞ்சள்காமாலை நோயை கட்டுப்படுத்தப்போராடும் இரட்டையர்கள் என்றால் மிகையல்ல.
கீழாநெல்லி, கரிசாலை, பொன்னாங்கண்ணி, மூக்கிரட்டை ஆகியவற்றை கீரைச்சமையலுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மலக்கட்டு, தோல்நோய்கள், இரத்த குறைவு, செரியாமை போன்றவை குணமாகும்.
கீழாநெல்லியுடன் பொன்னாங்கண்ணி கீரையை சேர்த்து சாப்பிட்டு வர மங்கிய பார்வை ஒளி பெறும். கீழாநெல்லியானது விஷமுறிவு மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மஞ்சள் காமாலை நோய் நீங்க
கீழாநெல்லி இலையை மாத்திரையாக செய்து ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீத நபரை முழுமையாக குணப்படுத்தலாம். மீதமுள்ள 40 சதவீதத்தினர் கீழாநெல்லியை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல பலனைக் காணலாம்.
கீழாநெல்லி செடியுடன் 4 ஏலக்காய், அரிசி, கரிமஞ்சள் தூள், காய்த்த பசும்பால் இவற்றை சேர்த்து மாலை நேரங்களில் அருந்தலாம், அல்லது கீழாநெல்லி செடியுடன், சீரகம், ஏலக்காய், திராட்சை 20 கிராம், தண்ணீர் இரண்டு லிட்டர் விட்டு காய்ச்சி வடிகட்டி ஒரு வேளைக்கு 60 முதல் 90 மில்லி லிட்டர் அளவில் தினம் இரு வேளை சாப்பிட்டு வர நல்ல பலனை பெறலாம்.
ஆய்வுகளில் கீழாநெல்லியின் சாரங்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதாக தெரிய வருகிறது. கீழாநெல்லி உடல் செயல்பாடுகளினால் உண்டாகும் கழிவு நீர், கல்லீரலை பாதிக்காமல், அவற்றில் வைரஸ்களின் பெருக்கத்திற்கு காரணமான நொதிகளை தடுத்து நிறுத்துகிறது. மேலும் இது செரிமானத்திற்கு உதவும் சுரப்புகளை அதிகரிக்கச்செய்து, அவற்றை திறம்படச் செயல்படுத்துகிறது.
வெப்ப நோய் நீங்க
வேனிற் காலங்களில் காணப்படும் சிறுநீர் எரிச்சல், கண் எரிச்சல் மற்றும் பலவகையான வெப்ப நோய்களுக்கு கீழாநெல்லியுடன் சீரகத்தை சேர்த்து தயிரில் அடித்து லெஸ்லி போன்று பருக நல்ல தீர்வை காணலாம்.
சர்க்கரை நோய் நீங்க
உலர்ந்த கீழாநெல்லி பொடியை தினம் மூன்று வேளை உணவு உட்கொள்வதற்கு முன் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
சரும நோய்கள் நீங்க
கீழாநெல்லி இலைகளுடன் பாசிப்பயறு மாவு, மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துப் பத்து நிமிடங்கள் ஊறவைத்துக் குளித்து வர சரும நோய்கள் நீங்கும்.
சொறி சிரங்கு நீங்க, கீழாநெல்லி இலையுடன் உப்பு சேர்த்து அரைத்து குளித்து வரலாம்.
எதிர்ப்பு சக்தி பெருக
கீழாநெல்லியுடன் மாதுளை ஓடு சேர்த்து தயிரில் குழைத்து கொடுக்க பேதியைக் கட்டுப்படுத்தலாம். கீழாநெல்லி பொடியுடன் நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் கலந்து குடித்து வர நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
ஓயாத்தலைவலி நீங்க
கீழாநெல்லிச்சாறு, உந்தாமணிச்சாறு, குப்பைமேனி சாறு ஆகியவை சமன் அளவு கலந்து, நல்லெண்ணெயில் எரித்து நசியமிடப் பீனிசம், ஓயாத்தலைவலி, நீர் வடிதல், ஆகியவை தீரும்.
சுரம் மற்றும் தேக எரிச்சல் நீங்க
நெல்லி சமூலம் 30 கிராம் 4 மிளகுடன் சிதைத்து 2 குவளை நீரில் போட்டு ஒரு குவளையாகக்காச்சி மூன்று வேளையாகக் குடித்து வர சூடு,சுரம்,தேக எரிச்சல் தீரும்.
வெள்ளைப்படுதல் நீங்க
கீழாநெல்லி இலையை நன்கு நசுக்கி, மூன்று லிட்டர் தண்ணீர் சேர்த்து அவை ஒரு லிட்டர் வரும் வரை சுண்டக் காய்ச்சி, காலை மற்றும் மாலை என இரு வேளை குடித்து வர வெள்ளைப்படுதல் நீங்கும்.
கல்லீரல் புற்றுநோய் நீங்க
ஹெப்படைட்டிஸ்-பி, ஹெப்படைட்டிஸ்-சி போன்ற நோயின் தாக்கத்தினால், கல்லீரல் முடங்கிவிடும். இதனால் கல்லீரலில் புற்றுநோய் தொற்று வருவதற்கான வாய்ப்புள்ளது. இத்தகைய பிரச்சனையில் இருந்து பாதுகாக்கும் தன்மை கீழாநெல்லி மூலிகையில் உள்ளது. ஆய்வுகளில் கீழாநெல்லியின் சாரங்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதாக தெரிய வருகிறது. கீழாநெல்லி உடல் செயல்பாடுகளினால் உண்டாகும் கழிவு நீர், கல்லீரலை பாதிக்காமல், அவற்றில் வைரஸ்களின் பெருக்கத்திற்கு காரணமான நொதிகளை தடுத்து நிறுத்துகிறது. மேலும் இது செரிமானத்திற்கு உதவும் சுரப்புகளை அதிகரிக்கச்செய்து, அவற்றை திறம்படச்செயல்படுத்துகிறது.
கீழாநெல்லி தைலம்
மேலும், இரத்த சர்க்கரை அளவை குறைக்க, கல்லீரலில் சேரும் அளவிற்கு அதிகமான கொழுப்புகளை கரைக்க, பித்தம் காரணமாக ஏற்படும் முடி நரைத்தல், மதுப்பழக்கத்திலிருந்து விடுபட, முடி உதிர்தல் போன்றவற்றை குணப்படுத்த கீழாநெல்லி பெரிதும் உதவுகிறது.
இரண்டு ஆழாக்கு நல்லெண்ணையுடன், கீழாநெல்லி வேர், கருஞ்சீரகம், நற்சீரகம் 9 கிராம் இவற்றை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சி வடித்து கிடைக்கும் கீழாநெல்லி தைலத்தை தலையில் தேய்த்து குளித்து வரலாம். இது தலைவலி, கை, கால், கண் எரிச்சல், பித்தம், ஆகியவற்றை நீக்கி, நல்ல பலனைத் தருகிறது. வேனிற்காலத்தில் கீழாநெல்லியின் தைலம் தேய்த்து குளித்து வர கோடைக்கால தொந்தரவுகளை தடுக்கலாம்.
சாப்பிடும் முறை
மஞ்சள் காமாலை நோய் நீங்க, கீழாநெல்லி சமூலம் 4 அல்லது 5 செடி, கரிசாலை மற்றும் விஷ்ணுகிரந்தி ஒரு கைப்பிடியளவு, சீரகம், ஏலக்காய், பரங்கிச்சக்கை வகைக்கு 5 கிராம், ஆங்கூர் திராட்சை 20 கிராம் ஆகியவற்றை இரண்டு லிட்டர் தண்ணீரில் ஒன்றாக சுருக்கி வடிகட்டி, 60 முதல் 90 மில்லி அளவில் தினமும் இருவேளை சாப்பிட்டு வரலாம்.
மஞ்சள் காமாலை நீங்க, கீழாநெல்லி இலை, கரிசிலாங்கண்ணி இலை, தும்பை இலை இவற்றை சம அளவு அரைத்து பெரியோர்க்கு புன்னைக் காயளவும், இளைஞர்களுக்குக் கழற்சிக்காயளவும், சிறுவர்களுக்குச் சுண்டைக்காயளவும் பாலில் பத்து நாள் கொடுத்துக் காரம், புளி இவற்றை நீக்கி, பால் மோர் சோறும், சிறிதளவு உப்புமாகச் சாப்பிடலாம்.
உணவின் மீது வெறுப்புக்கொள்ளும் ‘அன்ன வெறுப்பு’ குணத்திற்கு, கீழாநெல்லி, மிளகு, கடுக்காய் சேர்த்து அரைத்து மோரில் கலந்து அருந்தலாம். இக்கீரை நன்றாக பசியை தூண்டும்.
இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க கீழாநெல்லிப் பொடி, கறிவேப்பிலைப் பொடி இவற்றை மோரில் கலந்து அருந்தலாம்.
பெரும்பாடு, வெள்ளை, மாதவிடாய் தாமதம், உதிரச்சிக்கல் ஆகியவை தீர, கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அத்திப்பட்டை ஆகியவற்றை இடித்து தூள் செய்து சம அளவு கலந்து வேளைக்கு 10 கிராம் வீதம் காலை, மாலை என இரு வேளையும் வெந்நீருடன் 40 நாள் பருகலாம்.
கீழாநெல்லி, மலைவேப்பிலை, மிளகு ஆகியவற்றை மோர் சேர்த்து அரைத்து கொடுக்க மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். கீழாநெல்லியுடன் சம அளவு ஓரிதழ் தாமரை சேர்த்து அரைத்து நெல்லிக் காயளவு அதிகாலை வேளையில் 45 நாள்கள் சாப்பிட வாலிப வயோதிகம் நீங்கும். இழந்த உயிர்சக்தியை மீண்டும் பெறலாம்.
சித்த மருத்துவத்தில் கீழாநெல்லி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக குடிக்கக் கூடாது. அவ்வாறு செய்வதால், இந்த மூலிகையில் உள்ள வேதிப்பொருட்களின் செயலாற்றும் தன்மை குறைந்து விடும். கீழாநெல்லி இலைகளுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து 10 கிராம் அளவு வெள்ளாட்டுப்பால் அல்லது மோரில் கலந்து 3 முதல் 5 நாட்கள் வரை சாப்பிட்டு வரலாம். இந்தக் கலவையைச் சித்த மருத்துவத்தில் ‘கற்கம்’ எனக் குறிப்பிடுவார்கள்.
அனைத்து இடங்களிலும் தாரளமாக வளர்ந்திருப்பதால் இதனை வேண்டாத செடி என ஒதுக்கிவிடாமல், இயற்கை தந்த கில்லியான கீழாநெல்லியின் பலனை அனுபவித்து, நல்ல ஆரோக்கியமான வாழ்வு வாழ்வோம். மனித நலம் காப்போம்.