‘காய’த்தை காக்கும் பெருங்காயம்

Spread the love

‘காயம்’ என்றால் உடல். காயமே இது பொய்யடா.. வெறும் காற்றடைத்த பையடா என்று சித்தர்கள் பாடிச் சென்றிருக்கிறார்கள். ‘காய’த்தை (உடலை) ஆரோக்கியமாக வைத்திருக்க பெருங்காயம் பெரிதும் உதவுகிறது.

பெருங்காயம் ஈரான் நாட்டினைப் பிறப்பிடமாகக் கொண்டது. ஃபெருலா ஃபொயட்டிடா என்னும் செடியின் வேரில் இருக்கும் பசையிலிருந்து பெறப்படுகிறது. இமய மலைப் பிரதேசங்களிலும், காஷ்மீரிலும் பெருங்காயச் செடிகள் விளைகின்றன. இச்செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இதன் பெரிய வேர்கள் மேல்பாகத்தில், 6 அங்குல சுற்றளவு கொண்டவை. இச்செடியின் காம்பின் உள்ளே கெட்டியான அதிக துர்நாற்றம் தரும் பால் இருக்கும். மஞ்சள் நிற மலர்களைக் கொண்டது. இச்செடியானது சுமார் 4, 5 வருடங்களுக்குப் பின் சிறிய மரம் அளவுக்கு வளர்ந்து விடும். அதன் பின்பு அதன் தண்டையும், வேரையும் கீறி விட பெருங்காயப் பிசின் வடியும். அதை எடுத்து மண்பாண்டங்களில் பக்குவப்படுத்தி காய வைத்து பெருங்காயம் பெறப்படுகிறது.

காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயம், சமைக்காத பொழுது நெடியுள்ள வெறுக்கத் தக்க மணம் கொண்டிருக்கும். ஆனால், சமைத்த உணவுகளில், இது மென்மையான சுவையைத் தருகிறது. சுவை நரம்புகளைத் தூண்டி ருசியை உண்டாக்கும் குணம் கொண்டது. பெருங்காயத்தில் பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என இருவகை உள்ளது.

சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்ப்பதால் நரம்புகளும், மூளையும் இயல்பாக்கி விடும். தலைவலி, சித்தப்பிரமை, வாயுக் கோளறு, இருமல் மற்றும் நரம்புக் கோளறுகளான நரம்புத் தளர்ச்சி நோய், தசை பிடிப்பு, மயக்க நிலை போன்றவைகள் பெருங்காயம் சமையலில் அதிகம் சேர்த்துக் கொள்ளும் பொழுது குணமாகும். பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து அருந்த தலைவலி மற்றும் கடுமையான ஒற்றைத் தலைவலி நீங்கும். பல் வலி நீங்க எலுமிச்சை சாறு கலந்த பானத்தில் ஒரு சிட்டிகை பெருங்காயம் கலந்து அருந்த வேண்டும்.

சுவாசம் காக்கும் காயம்

சுவாசக் குழாய்ப் புண்களைக் குணப்படுத்தி, சளியை நீக்கும். நெஞ்சு அடைத்தல் நிவாரணியாக உள்ளது. பெருங்காயத்தை தேன் மற்றும் இஞ்சியுடன் கலந்து குடிக்க சுவாசக் கோளாறுகளான வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்புச் சளி குணமாகும். ஆஸ்துமா நோயினால் மூச்சு விட முடியாமல் திணறும் சூழலில் பெருங்காயப் பொடியை, தீக்கனலில் இட்டு, தோன்றும் புகையை சுவாசிக்க மூச்சுத் திணறல் குணமாகும். ஆஸ்துமா, தொடர் இருமல் பாதிப்புக்கு சிறிய அளவு பெருங்காயம், தேன் இரண்டு தேக்கரண்டி, வெங்காயச் சாறு கால் தேக்கரண்டி, வெற்றிலைச் சாறு ஒரு தேக்கரண்டி இவற்றைக் கலந்து குடித்து வரலாம்.

பெருங்காயம் குறைக்கும் இரத்த அழுத்தம்

மனித உடலில் கணையத்தில் உள்ள சிரை அணுக்களை பெருங்காயமானது அதிக அளவு இன்சுலினைச் சுரக்கச் செய்கிறது. இதனால் இரத்தச் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறந்ததாக அமைகிறது. இரத்த சர்க்கரை அளவை குறைக்க பாகற்காயுடன் பெருங்காயத்தைச் சேர்த்துச் சாப்பிட வேண்டும். பெருங்காயத்தில் உள்ள கவ்மெரின் என்ற பொருளானது இரத்தத்தை மெலிவூட்டி இரத்த உறைதலைத் தடுக்கிறது. இதன் உறை எதிர்ப்புத் தன்மை மற்றும் குணப்படுத்தும் ஆற்றல், இரத்த கொழுப்பைக் குறைத்து உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. சருமத்தில் மேல் நேரிடையாக பெருங்காயத்தை தடவினால் தோல் தடிப்பு, தோல் காய்ப்பு குணமாகும்.

செரிமானத்திற்கு உதவும் பெருங்காயம்

நெய்யில் வறுத்துக் கொடுக்க பசி நன்றாக எடுக்கும். வயிறு உப்புசம் குறையும். வயிற்று வலி குறையும். ஆக்ஜிசனேற்றம் தடுப்பானாகவும், உணர்ச்சியைக் கிளறி விடும் தடுப்பானாகவும் பெருங்காயம் அமைந்துள்ளதால் செரிமானம் சார்ந்த சிக்கல்கள் வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், வாய்வு குடற்புழுக்கள், எரிச்சல் தரும் குடற்புண்களைத் தீர்க்கிறது. அரை தம்ளர் தண்ணீரில் சிறிதளவு பெருங்காயம் சேர்த்து கலக்கி அருந்தினால் செரிமானச் சிக்கல்களில் இருந்து விடுபடலாம்.

வாயுத் தொல்லைக்கு ஒரு தம்ளர் மோரில் கால் ஸ்பூன் பெருங்காயப் பொடி, உப்பைக் கலந்து குடித்து வர வாயுத் தொல்லை நீங்கும், சீரணச் சக்தியைத் தூண்டும். பெருங்காயப் பொடியினை எண்ணெயில் வறுத்து அதை எலுமிச்சை இலைகளுடன் கலந்து விழுதாக்கி உணவுடன் சேர்த்துச் சாப்பிட செரிமானச் சக்தி அதிகரிக்கும். மலச்சிக்கலை பெருங்காயம் போக்கும். சிறுநீர் சரிவர போகாவிட்டால் 5 கிராம் பெருங்காயத்தை நெய்யில் வறுத்து எடுத்துக் கொண்டால் சிறுநீர் எளிதாகப் பிரியும்.

ஆண்மைக் குறைபாடு நீங்க பெருங்காயம்

பெருங்காயம் ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேனுடன் ஆல மர பிசின் ஒரு தேக்கரண்டி கலந்து தினசரி காலையில் மட்டும் என தொடர்ச்சியாக 40 நாட்கள் சாப்பிட்டு வர ஆண்மைக் குறைபாடுகள் நீங்கும்.


Spread the love