வாசனை திரவியங்களும் செண்டுகளும்

Spread the love

உடல் துர்நாற்றத்தை மறைக்க தொன்று தொட்டு வாசனை வீசும் பொருட்கள் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. இயற்கையாகவே மனித உடலில் பாலுணர்வை தூண்டும் வாசனை சுரப்பிகள் இருந்தாலும், பாலூட்டி  இனத்தை சேர்ந்த சில விலங்குகளில் உள்ள வாசனை சுரப்பிகள் சக்தி வாய்ந்தவை. உதாரணம் கஸ்தூரி மான்கள். ஆண் கஸ்தூரி மான்களின் அடிவயிற்றில் அமைந்திருக்கும் சுரப்பியிலிருந்து வீசும் நறுமணம், 2 கிலோ மீட்டர் வரை பரவி, பெண் மானை ஈர்க்கும்!

‘கஸ்தூரிக்காக’ மானைக் கொன்று, அடிவயிற்று சுரப்பி முழுவதும் எடுக்கப்படுகிறது. இதை உலர்த்தி, பொடியாக்கி, வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

புனுகு, ஆப்பிரிக்கா, இந்தியாவில் காணப்படும் புனுகுப் பூனைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

ஆண், பெண் இரு பாலிலும், புனுகு சுரப்பிகள் இருக்கும். புனுகை எடுக்க, புனுகுப் பூனைகளை கொல்ல தேவையில்லை. அதன் சுரப்பிகளிலிருந்து சுரக்கும் மஞ்சள் நிற புனுகை அவ்வப்போது எடுத்துக் கொள்ளலாம்.

புனுகு கஸ்தூரியை விட மலிவானது. திருமாலுக்கு மிகவும் உகந்தது என்று கருதப்படுவதால், திருப்பதி தேவஸ்தானம் சில புனுகுப் பூனைகளை வளர்த்து வருவதாக கேள்வி.

மலர்களிலிருந்து வாசனைத் திரவியங்கள் தயாரிப்பதற்காக அடிப்படை தைலத்தை எடுப்பது சிறிது கடினமானது. ரோஜா, லாவண்டர், மல்லிகை முதலியன இதற்கு வெகுவாக பயனாகின்றன. சந்தனம், குங்குமப் பூ இவைகளும் ‘சென்ட்’ தயாரிப்பில் உபயோகமாகும் நறுமணப்பொருட்கள்.

ரோஜாவிலிருந்து “அத்தர்” தயாரிப்பதை கண்டுபிடித்தவர், முகலாய ராணி நூர்ஜஹான் எனப்படுகிறது.

அன்றும் இன்றும் அத்தர் தயாரிப்பில் முக்கிய தொழிலாக கொண்டிருக்கும் நகரம் உத்திர பிரதேசத்தில் உள்ள கன்னோஜ். ராஜா ஹர்ஷ வர்த்தனர் வாசனைத் திரவியங்களை உபயோகித்து வந்ததால் அவர் இந்த தொழிலை ஊக்குவித்ததாக சரித்திரம் சொல்கிறது. கன்னோஜில் தயாரிக்கப்படும் ‘ரூ குலாபி’ அத்தரின் விலை10 கிராமிற்கு ரூ. 3500/-! இதர அத்தர்கள் 10 கிராமுக்கு ரூ. 150/- ல் கூட கிடைக்கின்றன. இவை 2007 ம் வருடத்தின் விலைகள். தற்போது அதிகமாகியிருக்கலாம்.

வாசனை திரவியங்களை தயாரிக்க உதவும் தாவரங்கள்

• மலர்கள் – ரோஜா, மல்லிகை, லாவண்டர், பழமரபூக்கள் (ஆரஞ்சு)

• பழங்கள் – ஆப்பிள், ஸ்ட்ராபெரி, செர்ரி, எலுமிச்சை, ஆரஞ்சு, வெனிலா

•  இலை, பட்டைகள் – இலவங்கம், சேஜ், சிட்ரஸ், ரோஸ்மேரி, மருதோன்றி

• வேர்கள் – வெட்டி வேர், இஞ்சி

• விதைகள் – தனியா, ஜாதிபத்திரி, ஏலக்காய், சோம்பு, ஜாதிக்காய், தனியா

• மரங்கள் – சந்தனம், அகில், பைன், ரோஸ்வுட் முதலியன.

நறுமணம் ‘வீசும் சென்டுகள்’ வீரியம் மிக்கவை, ஒரு முனைப்படுத்தப்பட்டவை. இந்த சென்டுகள் உடல் நாற்றத்தை மறைக்க உதவும். கோடைக்காலத்தில் மல்லிகை, அத்தர், பன்னீர் இவைகளை தடவிக் கொண்டால், உடல் சிறிது குளிர்ச்சியடையும். ஆனால் சென்டை விட அவை தயாரிக்க பயன்படும் வாசனை தைலங்கள் மலிவானவை, உடலுக்கு உகந்தவை. இந்த தைலங்களால் சோப், மெழுகுவர்த்தி குளியல் எண்ணைகள் முதலியன தயாரிக்கப்படுகின்றன.

https://www.youtube.com/watch?v=JYZaPKhS_7E&t=5s


Spread the love