மணத்தையே மருந்தாக்கும் மிளகு

Spread the love

இது பூத்துக் காய்த்து, படர்ந்து வளரும் படர் கொடி வகையினைச் சார்ந்த தாவரமாகும். இதில் மிளகு மற்றும் வால்மிளகு என இரு வகைகள்  உண்டு. இதன் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும், உணவின் சுவை கூட்டியாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இதில் கருமிளகு, வெண்மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு என சில வகைகள் உண்டு. கறுப்பு தங்கமான இதன் பிறப்பிடம் தென் இந்தியா ஆகும். குறிப்பாக, கேரளாவில் பெருமளவு மிளகு பயிரிடப்படுகிறது.

மிளகுக் கொடி, பொதுவாக வெப்ப மண்டலத் தாவரமாக அறியப்படுவதால், தென்னிந்தியாவின் தட்பவெப்ப நிலை இதன் வளர்ச்சிக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. மிளகின் காரத்தன்மை அதிலுள்ள “பெப்பரைன்” என்ற வேதிப்பொருளால் எற்படுவதாகும். பொடியாக்கப்பட்ட மிளகு உலகின் பெரும்பான்மையான நாடுகளின் சமையலறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. மிளகின் கொடி, இலை மற்றும் வேர் முதலிய எல்லா பாகங்களும் மருந்தாக நமக்கு பயன்படுகிறது.

மிளகின் பயணம் :

(ஐரோப்பாவிலிருந்து தென் இந்தியாவின் மலபார் கடற்கரை வரை நீளும் மிளகின் நெடும் வணிகப்பாதை)

இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட மிளகு, வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே நமது பாரம்பரிய சமையலில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. தற்சமயம், மலேசியா போன்ற தென்கிழக்காசிய நாடுகள் மிளகு உற்பத்தியில் தலைசிறந்து விளங்கினாலும், இந்தியாவின் கேரளக் கடற்கரைப் பகுதியான மலபார் பன்நெடுங்காலமாகவே மிளகு உற்பத்தியில் தனது சிறப்பான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. மிளகு வாணிகம் மிக லாபகரமானதாக இருப்பதால், மிளகை ‘கருப்புத் தங்கம்’ என்று குறிப்பிடுகின்றனர். பண்டைக்காலத்தில் இப்பகுதியில் பணத்திற்கு பதிலாக மிளகை உபயோகப்படுத்தியதாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கேரள, மலபார் கடற்கரையில் விளைந்த மிளகு உலகச் சந்தையை தன் பக்கம் கவர்ந்த. பதினாராம் நூற்றாண்டின் இறுதியில். ஜாவா, சுமத்திரா, மடகாஸ்கர் போன்ற தீவுகளிலும், இந்தோனேசியா, மற்றும் பல கிழக்கு ஆசிய நாடுகளிலும் மிகவும் குறைந்த அளவில் பயிரிடப்பட்டது. இவ்விடங்களில் விளைந்த மிளகு சீனாவிலும், உள்நாட்டிலுமே விற்கப்பட்டதால், ஐரோப்பாவின் மிளகு சந்தை பெரும்பாலும் இந்தியாவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்தியாவில் விளைந்த மிளகின் தரமும், பிற நறுமணப் பொருள்களின் தரமும் உலகச் சந்தை வரலாற்றை மாற்றி  எழுதியதாக எடுத்துக்கொண்டால் அதில் சிறிதும் பிழையில்லை.

மிளகின் விலையில், டச்சு வணிகர்கள் “ஐந்து ஷில்லிங்” உயர்த்தியது தான் “கிழக்கிந்தியக் கம்பெனி” என்ற நிறுவனம் துவங்குவதற்கு மிக முக்கிய அடித்தளமாக இருந்து. நமது இந்தியாவின் தலையெழுத்தே மாறிப்போனதும். (நமது இந்தியா சுரண்டப்பட்டதும் வேறு கதை) மேலை நாடுகளில், நறுமணப் பொருள்களின் பயன்பாடுகள் மிக அதிகமாக இருந்ததாலும், அதன் விலையும் சற்று அதிகமாகவே இருந்ததாலும், இறக்குமதியின் அளவை உயர்த்தும் நோக்கத்தில். இந்தியாவிற்கான கடல்வழிகளைக் கண்டுபிடிக்க, பலர் பலமுறை முயற்சி செய்து தோற்றார்கள், சிலர் இம்முயற்சியில் வென்றார்கள். இந்த சம்பவம் தான் எல்லாவற்றிற்குமே அடித்தளமாக அமைந்து கடல் வழிகள் கண்டு பிடிக்கப்பட்டது. இவையே, இந்தியாவை ஐரோப்பியர்கள் கைப்பற்றவும், அமெரிக்கா மற்றும் பிற கண்டங்களைக் கண்டுபிடித்துக் குடியேற்றவும் முக்கிய காரணமாயிற்று என்பது வரலாற்றின் மறுக்க/மறக்கமுடியாத உண்மைகள்.

பண்டைய காலத்தில் மிளகின் உபயோகம்

அன்றைய எகிப்திய  நாகரிகத்தின் இன்றைய மிச்சங்களாக இருக்கும், பிரமிடுகளின் ஆராய்ச்சியில் மிளகு காணப்படுவதன் மூலம் பண்டைய எகிப்திய நாகரிகத்தில், இது சிறந்த மருத்துவப் பொருளாகவும், விலை உயர்ந்ததாகவும், ஆடம்பரத்தின் சின்னமாகவும் மதிக்கப்பட்டுள்ளது என அறிந்து கொள்ளலாம். பண்டைய கிரேக்க நாகரிகங்களிலும் மிளகு  உபயோகப்படுத்தப்பட்ட வரலாற்று சான்றுகள் உள்ளது. மேலும், இது மிகவும் விலை உயர்ந்த பொருளாக இருந்ததால் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே இதனை அறிந்து பயன்படுத்தியிருக்கலாம்.

மிளகுக் கொடி

மிளகுக்கொடி படரும் கொடி வகையைச் சேர்ந்த தாவரமாகும். இது அருகில் இருக்கும் மரம் மற்றும் சிறு, பெரு செடிகளைப் பற்றி படரும் தன்மையுடையது. இதன் இலைகள் வெற்றிலையைப்போல சற்று பெரிதாக இருக்கும். இதன் இலைகள் பசுமையாகவும், கணுக்கள் சிறிது பெரிதாகவும் இருக்கும். ஊசியைப் போன்ற தோற்றமுடைய மலர்க்காம்பில் சிறிய மலர்களாகப் பூக்கும். மலர்கள் காய்களாக வளர்ச்சி பெறும்போது, இக்காம்புகளும், வளர்ச்சி பெறுகிறது. இதன் காய்கள் சரம் சரமாக காய்த்திருக்கும், ஒரு சரத்தில் முப்பதிற்கும் மேற்ப்பட்ட காய்கள் இருக்கும். இதை பச்சையாக பறித்து பதப்படுத்துவார்கள். முற்றிய பழத்தைப் பறித்து வெய்யிலில் நன்கு காயவைத்தால் அதிலுள்ள நீர் சுண்டிச் சிறுத்து மிளகாகும்.

பயிரிடுதல்

மிளகு விளைச்சலுக்கு நீண்ட மழைப்பொழிவும், சீரான உயர் வெப்பம் மற்றும் நிழல் ஆகியவை மிகவும் அவசியம். மிளகு இந்தியாவில் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், குடகு மலைப் பகுதிகளிலும் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இந்தியாவிலிருந்து ஐரோப்பா, சீனா, மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் மிளகு பயிரிடும் முறை பரவியிருக்கலாம். பதினாராம் நூற்றாண்டில், இது ஜாவா, சுமத்திரா, மடகாஸ்கர் தீவுகளுக்கும் மற்ற இடங்களுக்கும் பரவியிருக்கலாம். மிளகுக் கொடி மிதமான ஈரப்பதமிக்க, வளமான மண்ணில் நன்கு செழித்து வளரக்கூடியது. இதன் செடியின் தண்டுப் பகுதியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நடுவதின் மூலம் அதிகமாகப் பயிரிடப்படுகிறது, மேலும் இது பொதுவாக மரங்களின் அருகிலேயே வளர்க்கப்படும், இது அருகில் உள்ள மரங்களைப் பற்றி வளரும் படர்கொடியினத்தை சேர்ந்தது.

வால் மிளகு

வால்மிளகு (Piper Cubeba) என்பது, மிளகின் மற்றொரு வகை. இது மிளகைப்போன்ற தோற்றமும், காம்புடன் காணப்படுவதால் வால்மிளகு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வால்மிளகு அளவற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இதன் காரத்தன்மை, பசியைத் தூண்டும் மேலும், நமது உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் குணமுடையது.  கருமிளகு, வெண்மிளகுகள் நமது பாரம்பரிய மருத்துவத்தில், பல்வேறு நோய்களைத் தீர்ப்பதற்கு பெரும்பான்மையாக பயன்படுகிறது.

பதப்படுத்தும் முறைகள்

கருமிளகு

பச்சையான பழுக்காத சிறு மிளகுக் காய்கள் கொடிகளில் இருந்து பறிக்கப்பட்டு, சூடான நீரில் ஊற வைக்கப்பட்டு, பின்னர் உலர வைக்கப்படுகின்றன. இவை வேகமாக உலர்வதோடு, அதன் சதைப்பகுதியானது விதையுடன் காய்ந்து, சுருங்கி, கருநிறத்தைப் பெறுகிறது. இக்காய்களை உலர்த்துவதற்கு இயற்கையான சூரிய ஒளியும், இயந்திரங்களும், இடத்திற்கேற்ப/சூழ்னிலைக்கேற்பப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு உலர்த்தப்பட்ட மிளகு, சந்தைக்கு அனுப்பப்படுகிறது.

வெண்மிளகு

பெரும்பான்மையான நாடுகளில் கருமிளகே அதிகமாக உபயோகத்தில் இருந்தாலும், சில பகுதிகளில், வெண்மிளகும் பயன்படுத்தப்படுகிறது. மேற்கூறிய முறைகளைப் போலன்றி, வெண்மிளகு உற்பத்திக்கு நன்கு பழுத்த/முதிர்ந்த மிளகு பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பழங்கள் ஏறத்தாழ ஒரு வாரம் நீரில் ஊற வைக்கப்படுகின்றன, இதன் காரணமாகப் பழத்தின் சதைப்பகுதி அழுக வைக்கப்பட்டு, அகற்றப்பட்டு, விதைகள் உலர்த்தப்படுகின்றன. உலர வைக்கப்பட்ட அதன் வெண் நிற விதைகள் வெண்மிளகாகச் சந்தைப்படுத்தப்படுகிறது.

பச்சை மிளகு

பச்சை மிளகு, கருமிளகைப் போலவே பழுக்காத சிறு மிளகுக் காய்களை உலர வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. காய்களின் பச்சை நிறத்தைத் தக்கவைத்துக் கொள்ள, கந்தக டை ஆக்சைடு உபயோகித்தல், உறைய வைத்து உலர்த்துதல் மட்டுமல்லாமல் வேறு முறைகளும் கையாளப்படுகிறது. தாய்லாந்தின் சமையல் முறைகளில், பச்சை மிளகு பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது.

சமையல்

கரு மிளகு, தமிழ்நாட்டுச் சமையலில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உணவு வகைகளான பொங்கல், மிளகு ரசம், மிளகுக் கோழி வருவல், முட்டை வருவல், உருளைக்கிழங்கு பொரியல் ஆகியவற்றில் சுவைகூட்டியாக மிளகு அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது.  தென் தமிழகத்தின் புகழ்பெற்ற சமையலான செட்டிநாட்டுச் சமையலில் இதன் பயன்பாடு மிக மிக அதிகம். சமையலில் காரச்சுவைக்காக  முன்னோர்கள் மிளகை பயன்படுத்தினர். தற்போது மிளகாய், மிளகை  விட அதிகமாகப் பயன்படுகிறது.

மிளகு வாணிகம்

பெரும்பாலும் மிளகு அவை விளையும் இடங்களின் பெயரிலேயே உலகச் சந்தைகளில் தரம் கண்டறியப்படுகின்றன. மிகப் புகழ்பெற்ற இந்திய வகை மிளகுகள் மலபார் மற்றும் தலைச்சேரியில் விளைவிக்கப்படுகின்றன. இதில் தலைச்சேரி மிளகு உயர்தரமாக  சர்வதேச மிளகுச் சந்தையில் மதிப்பிடப்படுகிறது. சர்வதேச மிளகுச் சந்தை நமது அண்டை மாநிலமான கேரளாவில், கொச்சி நகரில் இயங்குகிறது.

தற்சமயம் வியட்நாம் உலக மிளகு ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது.  அடுத்து, இந்தோனேஷியா, இந்தியா, பிரேசில், மலேசியா, இலங்கை, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளும் மிளகு ஏற்றுமதி செய்கின்றன.

மருத்துவ குணங்கள்

கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும், கரோட்டின்,  தையமின், ரிபோ-ஃப்ளோவின், நயாசின் போன்ற வைட்டமின்களும்  இதில் உள்ளது.                                                 

இது நமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சளி, கோழை, இருமல் முதலியவற்றை நீக்கும் மருந்தாகவும் இது பயன் படுத்தப்படுகிறது.   

இது நமது வயிற்றில் உருவாக்கப்படும் கெட்ட வாயுக்களை நீக்கி உணவைச் செரிக்க வைத்து நமது உடலுக்கு வெப்பத்தைத் தரும் இதன் காரம் உணவில் உள்ள நச்சுத் தன்மையை நீக்க வல்லது. அதன் அரிய மருத்துவ குணங்கள் அறியாமல், காரத்திற்காக மட்டுமே மிளகு உணவுப்பொருட்களாக சேர்க்கப்படுகிறது என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது தான் அதிர்ச்சியூட்டும் உண்மை!

அமெரிக்க, மிசிகன் பல்கலைக் கழக புற்றுநோய் ஆய்வு மையத்தின் ஆய்வுகளின் படி பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் மற்றும் கேன்சர் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கிறது. மிளகில் உள்ள “பெப்பெரைன்” புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது மிளகுடன் மஞ்சள் சேர்த்தால் புற்றுநோய் எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக அது  தெரிவிக்கிறது. மேலும் மிளகில் உள்ள வைட்டமின் ஏ,சி,  கரோடின்களும், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள ஃப்ரீரேடிக்கல்களை (pre – radicals) அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. சருமப் புற்று நோய், வயிற்று புற்றுநோய் மற்றும் குடற் புற்று நோய்களையும் மிளகு தடுத்து வருவதையும், பல ஆய்வுகள் நிருபணமாக்கியுள்ளது. பப்பெரைனைத் தவிர மிளகில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஃப்ளுவனாய்டுகள், கரோடீன் மற்றும் இதர ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அடங்கியுள்ளன.

நமது ஜீரணசக்தியை அதிகரித்து, நாக்கின் ருசி ஆதாரங்களை தூண்டி, வயிறானது ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கச் செய்கிறது. மேலும், அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அமிலச்சுரப்பு போன்றவற்றை, இது கட்டுப்படுத்துகிறது.

உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவுகிறது. நம் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சும் தன்மை கொண்டது. மேலும் இது கொழுப்பு செல்களை சிதைத்து உடல் பருமனாவதை தடுக்கிறது. மற்றும் உடலில் சுரக்கும் வியர்வையின் அளவை அதிகரித்து உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருக்கவும், சிறுநீர் சீராக வெளியேறவும் உதவுகிறது. இதன் காரணமாக, நமது உடலில் உள்ள கூடுதல் நீர் மற்றும் நச்சுப்பொருட்கள் வெளியேற்றப்படுகிறது.

நமது உடலில் ஏற்படும் வாயு மற்றும் வயிற்று உபாதைகளை கட்டுப்படுத்துகிறது. சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணமாகாமல் இருப்பது அல்லது மலச்சிக்கலால் ஏற்படும் வயிற்று கோளாறுகளை, இது பெரிதும் கட்டுப்படுத்துகிறது. கார்மிநேடிவ் என்ற பொருள் மிளகில் உள்ளதால்  வாய்வு, வயிற்று பொருமல் மற்றும் வயிற்று வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

இது தலையில் வரும் பொடுகை அழிக்கிறது மிளகை நன்றாக பொடி செய்து, சிறிது தயிருடன் கலந்து தலையில் பரவலாகத் தடவி அரை மணிநேரம் கழித்து தலை முடியை நன்றாக அலசவேண்டும். (அன்று எந்த விதமான ஷாம்புக்களும் பயன்படுத்தாமல் இருக்கவேண்டும் மறுநாள் ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும்).

சளித் தொல்லைக்கு:

மிளகை நன்றாக பொடியாக்கி அதை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளித் தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளித் தொல்லை உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்துப் பொடித்து அதனை தினம் அரை தேக்கரண்டி மூன்று வேளைகள் சாப்பிட குணமாகும்.

சிறிதளவு மிளகு, ஓமம், உப்பு மூன்றையும் கலந்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாண முருங்கை இலையுடன், சிறிது அரிசியும், மிளகும் சேர்த்து அரைத்து தோசையாக சாப்பிட்டு வர சளி குணமாகும்.

பற்கள் பளிச்சிட:

மிளகுப்பொடியுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, பற்ச்சொத்தை, ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் போன்றவை குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை நீங்கும்.

தலைவலி

மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதைத் தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை விளக்கில் சுட்டு அதன் புகையினை முகர்ந்தால் தலைவலி மற்றும் ஜலதோஷம் போகும்.

இரத்தசோகைக்கு:

கல்யாணமுருங்கை இலை (முள் முருங்கை) முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டு வர இரத்தசோகை  குணமாகும்.

பசியின்மைக்கு:

மிளகானது நாக்கிலுள்ள சுவை மொட்டுகளைத்தூண்டி ஜீரணசக்தியை ஊக்குவிக்கிறது. இதனால் பசியின்மையால் தவிப்பவர்களுக்கு மிளகு இயற்கையின் வரப்பிரசாதமாக விளங்குகிறது. உணவில் சிறிதளவு மிளகை சேர்த்துக் கொண்டால் பசியின்மையை போக்கும். ஒரு தேக்கரண்டி மிளகை வறுத்துப் பொடி செய்து அதனுடன் கைப்பிடியளவு துளசி சேர்த்து கொதித்து ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிற்று உப்புசம்  தீரும். ஊட்டச்சத்துக்களை உடல் திறமையாக பயன்படுத்தவும் உதவும். தினசரி அரை கிராம் மிளகைப்பொடி செய்து வெதுவெதுப்பான நீருடன் பருகிவர பசி உண்டாகும். உமிழ்நீரை பெருக்கி, உணவை செரிக்க  வைக்கும். மிளகுடன், சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வருவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும்  தன்மை கொண்டது. 

சருமத்தை தூய்மையாக்கும்

உடலில் உள்ள வியர்வை மற்றும் நச்சுப் பொருட்கள் வெளியேற மிளகு உதவுவதோடு அழுக்கு நீக்கியாகவும் செயல்படுகிறது. மிளகை  அரைத்து முகத்தில் மிகவும் லேசாகத் தடவினால் அது இறந்த  செல்களை நீக்கி, இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, சருமத்திற்கு அதிக ஆக்சிஜனும் ஊட்டமும் அளிகிறது. மேலும் அதிலுள்ள பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்கள் சருமத்தை மரு மற்றும் பருக்கள் போன்ற பிரச்சனைகளில் இருந்து காக்கும்.

மூக்கு அடைப்பை சுத்தப்படுத்தி சளியை நீக்கும்

மிளகுக்கு பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் உள்ளதால், சளி மற்றும் இருமலை குணப்படுத்த அது பெரிதும் உதவுகிறது. கதகதப்புடனும், காரசாரமாகவும் இருப்பதால், சளியை நீக்கி மூக்கடைப்பு நிவாரணியாக  விளங்குகிறது. அதற்கு அரைத்த மிளகை, ரசம் அல்லது சூப்பாகப் பருகினால் உடனடியாக சளிதொல்லை, மூக்கடைப்பு நீங்கி  சுலபமாக மூச்சு விட ஏதுவாக இருக்கும்.

மன அழுத்தம்

மிளகில் உள்ள ‘பப்பெரைன்’ என்ற பொருள் மன அழுத்தத்தை குறைக்க உதவும் என்று ‘ஜர்னல் ஆப் ஃபுட் அண்ட் கெமிக்கல் டாக்சிகாலாஜி’ என்ற அமைப்பு கூறியுள்ளது. மேலும் சீரான சுழற்சி முறையில் மிளகை உட்கொண்டால், மூளையின் செயல்பாடுகள்  ஒழுங்காகவும், சிறப்பாக இருப்பதாக ஆய்வுகள் மேற்கோள் காட்டியுள்ளன.

மிளகின் மருத்துவ பயன்கள்

“பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.” என்பது மிளகின் பெருமையை பறைசாற்றும் ஒரு பழமொழியாகும்.  மிளகு ஒரு சிறந்த விஷ முறிவாகப் பயன் படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம்புல்லையும், பத்து மிளகையும் இடித்து கஷாயமாக்கி பருகி  வந்தால் சகல விஷக்கடிகளும்/விஷமும் நீங்கும். பல வகைப்பட்ட பால்வினை நோய்கள் உண்டு. அதில் ஒன்று பிறப்பு உறுப்புக்களில் புண்கள் தோன்றுவது. இது குணமாக, மிளகுத்தூள்  பத்து கிராமும், எருக்க வேர் பதினெட்டு கிராமும் எடுத்து இரண்டையும்  பனை வெல்லத்துடன் சம அளவு கலந்து நன்கு அரைத்து, சிறு, சிறு  மாத்திரைகளாக்கி காலை, மாலை ஒரு மாத்திரை வீதம் சாப்பிட்டு வர இந்நோய் விலகும்.

நமக்கு வரும் சாதாரண ஜலதோஷத்திற்கும், காய்ச்சலுக்கும் காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு வேளை மட்டும் அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

தும்பைப் பூவையும், மிளகையும் சம அளவு சேர்த்து அரைத்து சிறு, சிறு மாத்திரைகளாக்கி உலர்த்தி, தினசரி இரண்டு அல்லது மூன்று மாத்திரைகளுடன் வெந்நீர் சாப்பிட குளிர் காய்ச்சல் குணமாகும். மிளகுப் பொடியுடன், வெல்லம் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர  ஃபீனிசம், தலை பாரம், தலைவலி தீரும்.

ஒவ்வாமை மற்றும் பூச்சிக் கடி காரணமாக தோலில் தடிப்பு மற்றும் அரிப்பு உண்டாகும். இதற்கு ஒரு தேக்கரண்டி மிளகை பொடி செய்து, ஒரு கைப்பிடி அருகம்புல் சேர்த்து, 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து அருந்தவேண்டும். பூச்சி கடிகள் மற்றும் ஒவ்வாமையால் பாதிக்கப்படும் போது முதலுதவியாக ஒரு தேக்கரண்டி மிளகை நீரில் கொதிக்க  வைத்துத் தேன் கலந்து பருகவேண்டும்.

அடுத்தடுத்து தும்மல், மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றிற்கு. ஒரு  தேக்கரண்டி மிளகையும், ஒரு வெற்றிலையையும் நீரில் கொதிக்கவைத்து பருகவேண்டும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.  தொண்டைக்கட்டு, குரல் கம்மல், தொண்டை வலி போன்றவை இருந்தால், ஒரு தேக்கரண்டி மிளகை நெய்யில் லேசாக வறுத்துப் பொடியாக்கி அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிடவேண்டும். சாதாரணமாக மிளகுக் கஷாயம் குளிர் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு  மிகவும் சிறந்த நிவாரணியாகும்.

ஜீரண சக்தியை மேம்படுத்தும், மிளகின் காரத்தன்மைக்கு ‘காப்சாய்சின்’ என்ற பொருள் காரணமாக உள்ளது. மிளகின் காரமானது கொழுப்பையும் ஜீரணிக்க வைக்கும். இதனால் ரத்த குழாய்களில் கொழுப்பு படிவது மற்றும் ரத்த குழாய் விரிவடைவது தவிர்க்கப்படும். உடலில் உள்ள செல்களை பாதுகாக்கும் ‘ஆன்டிஆக்ஸிடண்ட்’ மிளகில் உள்ளது. பசி குறைவாக உள்ள சமயங்களில், ஒரு தேக்கரண்டி மிளகுப் பொடியை நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட குணம் தெரியும்.

பாரம்பரிய வைத்தியத்தில் “திரிதோஷம்” என்று சொல்லப்படுகின்ற வாதம், பித்தம், கபம் தொடர்பான பிரச்சனைகளுக்கு திரிகடுகுகளான சுக்கு மிளகு திப்பிலி சூரணத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் 0அந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். திரிகடுகு சூரணம் சுவாசம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கும், ஜீரண பிரச்சனைகளுக்கும்  மிகச்சிறந்த மருந்தாகும்.

அஜீரணத்திற்கு (செரியாமைக்கு) மிளகு, சுக்கு, திப்பிலி, பெருஞ்சீரகம், இந்துப்பு ஆகிய ஐந்தையும் சம அளவு எடுத்து பொடி செய்து, ஒரு கிராம் என காலை, மாலை என இருவேளைகளும் வெந்நீருடன் பருகிவர அஜீரணம் நீங்கி, வயிற்று நோய்களும் நீங்கும்.

உணவில் காரசாரம் சேர்க்க வேண்டும் என்றால் மிளகை பயன்படுத்துங்கள். இது சுவையை மட்டும் கூட்டாமல், உடல் ஆரோக்கியத்தையும் அதிகரித்து, நமது உடலையும் நம்மையும் மிகவும் சந்தோஷமாக வைத்திருக்க உதவும்.

கி இராஜகோபாலன்

மிளகு சமையல்

மிளகு தட்டை

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு –          – 1 கப்

உளுத்தம் பருப்பு மாவு — 1/4 கப்

கடலை பருப்பு        – 1 டீஸ்பூன்

பெருங்காயம் –        – 1/4 தேக்கரண்டி

கருப்பு மிளகு –        – 2 தேக்கரண்டி

தண்ணீர் –            – 1/4 கப்

பேக்கிங் சோடா –      – ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை –        – தேவையான அளவு

உப்பு                – தேவையான அளவு

எண்ணெய் –           – தேவையான அளவு

செய்முறை:

முதலில் கடலை பருப்பை ஊறவைக்கவும். ஒரு கடாயில், அரிசி மாவு வறுக்கவும் பின் அதை ஒரு கிண்ணத்தில் மாற்றவும், அதே கடாயில் உளுத்தம்பருப்பு மாவு சேர்த்து, லேசாக வறுத்தேடுத்த  அரிசி மாவுடன் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் கறிவேப்பிலையை, கொர கொர என அரைத்து அதில் வைத்துள்ள மிளகு, ஊற வைத்துள்ள கடலை பருப்பு, பெருங்காயம், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக கிளறவும். இவற்றில் சிறிது சூடான எண்ணெய் விட்டு பிசையவும். பின் அவற்றை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். ஒரு பிளாஸ்டிக் கவர் எடுத்து உருண்டையை நடுவில் வைத்து அவற்றை மூடி ஒரு கிண்ணத்தை பயன்படுத்தி அதன் மேல் அழுத்தவும். தட்டை வடிவம் வந்த பின் போர்க் ஸ்பூன் வைத்து அவற்றின் மேலே குத்தவும். பிறகு அதை கவனமாக எடுத்து சூடான எண்ணெயில் போட்டு சில நிமிடங்கள் வறுக்கவும். இப்போது அனலை குறைத்து மேலும் சில நிமிடங்கள் சமைக்கவும். பின் சுவையான மிளகு தட்டை தயார்.

மிளகு சாதம்

தேவையான பொருட்கள்

அரிசி –          – ½ கிலோ

மிளகுத்தூள் –    – 20 கிராம்

உளுத்தம் பருப்பு – 25 கிராம் (தாளிக்க, கடலைப்பருப்பு தேவையில்லை)

எண்ணை –       – 50 மில்லி

பெரிய வெங்காயம் — 2

காய்ந்த மிளகாய் —  – 1

கறிவேப்பிலை –  –  –  சிறிதளவு

உப்பு             – தேவையான அளவு

கொத்தமல்லி இலை

செய்முறை:

அரிசியை 5 நிமிடம் ஊறவைத்து உதிரியாக சாதம் வடித்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், கடுகு தாளித்து பின் உளுத்தம் பருப்பை போட்டு பொன்நிறமாக வதக்கவும். நிளமாக வெங்காயம் நறுக்கி வைத்துக் கொள்ளவும் மற்றும் காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்கவும், கறிவேப்பிலை சேர்க்கவும்.

வெங்காயம் வதங்கிய உடன், சாதத்தை கொட்டி கிளறவும், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கி வைக்கும்போது கொத்தமல்லி இலையை சேர்க்கவும். சுவையான மிளகு சாதம் தயார்.

எம். கே. வள்ளி


Spread the love