முளை தானியம்

Spread the love

தானியங்களை நன்கு நீரில் அலசி எட்டு மணி நேரம் (தானியங்களுக்கு ஏற்ப வேறுபடும்) நீரில் ஊறவைத்து பின்பு நீரை வடித்துவிட்டு எட்டு மணி நேரம் ஈரத்துணியில் கட்டி வைக்க மறுநாள் நன்றாக முளை வெளிவரும். இதனை முளை தானியம் என்று அழைக்கின்றோம். இவ்வகைத் தானியங்களை ஓரிரு நாட்களில் உபயோகிக்க வேண்டும். இத் தானியங்களை ஒரு வாரம் வரை வெயிலில் இட்டு உலர்த்தியும் வைத்துக் கொள்ளலாம். மாவாக அரைத்தும் வைத்துக் கொள்ளலாம்.

முளை தானிய சூப் – (கம்பு)

கம்பு தானியத்தை முளை கட்டி முளைக்க வைத்து அதனை நீர்விட்டு அரைத்து வடிகட்டாமல் நபர் ஒருவருக்கு 100 மி.லி. வீதம் எடுத்து கீழ்க்கண்ட விதத்தில் முளை கம்பு தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்

முளைக்கட்டிய தானிய பால் – 100 கிராம், அல்லது
முளைக் கம்பு மாவு – 20 கிராம்
தண்ணீர் – 250 மி.லி
காரட், தக்காளி, பீன்ஸ், வெங்காயம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, புதினா, போன்றவை சேர்த்து } – 75 கிராம்
மிளகு தூள், சீரகத் தூள்அல்லது இனிப்பு – 25 கிராம்.

செய்முறை

காய்கறிகளை நன்கு கழுவி தோல் நீக்கி காரட் துருவல் போல் சீவி அத்துடன் இலைகளையும் நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி நீரில் இட்டு சூடு செய்யவும். பசுமை மாறும் முன்பு அரைத்து வைத்துள்ள முளை தானிய கம்பு பாலை அப்படியே வடிகட்டாமல் சிறிது சிறிதாக விட்டு கலக்கவும். பசுமை மாறும் முன்பு இனிப்பு அல்லது காரம் கலந்து சூடு ஆறும் முன்பு சாப்பிடலாம். வடிகட்டியும், வடிகட்டாமலும் சாப்பிடலாம்.

கிடைக்கும் சத்துக்கள்

புரதம் – 10.8 கி
மாவு – 75 கி
நார்ச்சத்து – 2 கி
கொழுப்பு – 1.7 கி
கால்சியம் – 40 மி.கி
பாஸ்பரஸ் – 190 மி.கி
இரும்பு – 7.2 மி.கி

பயன்கள்

உடல் வலிமை தேவையானவர்கள் வாரம் மூன்று முறை உட்கொள்ள நல்ல உறுதியும், யானைக்கு இணையான பலமும் பெறலாம். காலை உணவிற்கு பதிலாகவும், இதனை உண்டு வர நல்ல பலன் கிடைக்கும். மூல நோயில் மூலச்சூட்டை தணிக்கும். இரத்த மூலம் நிறுத்தும், சொறி சிரங்குத் தொல்லை நீங்கும் சருமம் அழகு பெறும். அகோரப் பசி விலகும்.

இதே போல கலப்பு சத்துமாவு சூப், கேழ்வரகு சூப், பச்சைப் பயறு சூப், கொண்டைக் கடலை சூப், கோதுமை சூப் தயாரிக்கலாம்.

முளைதானிய சத்துமாவு

தேவையான பொருட்கள்

கம்பு – 250 கி
கேழ்வரகு – 250 கி
கோதுமை – 250 கி
பச்சைப்பயறு – 100 கி
கொண்டைக்கடலை – 100 கி
கொள்ளு – 100 கி

தானியங்களை தனித்தனியாக முளைக்க வைத்து அதனை வெயிலில் உலர்த்தி கலந்து மாவாக அரைக்க சத்து மாவு கிடைக்கும். முளைத்த தானியங்களின் சத்து மாவு என்பதால் பல மடங்கு வரை அதிகமான கார்போஹைட்ரேட், இயற்கை புரதம், மினரல்ஸ் மற்றும் இதர சத்துக்கள் கிடைக்கும். அரிசி உணவிற்கு சரியான மாற்று உணவு. நீரிழிவு உடையவர்களுக்கு பெரிதும் பயன்படக்கூடியது. சகல பிணி உடையவர்களும் உண்ணலாம். உடலுக்குத் தேவையான ஊட்டமும் நரம்புகளுக்கு தேவையான வலிமையும் தரக்கூடியது.

பலவகை உபயோகம்

ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் மாவு கலந்து கரைத்து சுட வைத்து இனிப்புக் கலந்து சாப்பிடலாம்.

இனிப்பிற்குப் பதில் மிளகுத்தூள், உப்பு கலந்து நீரிழிவு உடையவர்கள் சாப்பிடலாம்.

இதில் தோசை வார்த்து சாப்பிடலாம். அரிசி தோசையை தவிர்க்க நீரிழிவு உடையவர்களுக்கு பெரிதும் பயன்படும்.

வெல்லப்பாகு, காய்ச்சி அதில் தேவையான சத்துமாவு கலந்து முந்திரி, திராட்சை, பேரீச்சை சேர்த்து சத்து மாவு உருண்டை தயாரிக்கலாம்.

நீரிழிவு உடையவர்கள் சத்து மாவுடன் 50 கிராம், வெந்தயம் 50 கிராம் கறிவேப்பிலைப் பொடி அல்லது வில்வப் பொடி போன்ற மூலிகைகள் கலந்து வைத்து உண்ண நல்ல பலன் கிடைக்கும்.


Spread the love